Published : 06 Feb 2019 10:47 AM
Last Updated : 06 Feb 2019 10:47 AM

சாதனை: கம்பு சுற்றும் கிருத்திகா!

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று சிலம்பாட்டம். தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்டம், வில்வித்தை போட்டிகளில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி,  ஒரு வெண்கலப் பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார் ஆர். கிருத்திகா.

சென்னையில் உள்ள பிஎன்டி ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இவர், ஏழு வயதில் இருந்தே சிலம்பம் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

”காவல் துறையில் பணியாற்றும் என் அப்பாவுக்குத் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளின் மீது ஆர்வம் அதிகம். இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் சிலம்பம் போன்ற கலைகளைக் கற்றுக்கொண்டால், தற்காப்புக்கும் உதவும் என்பதால் என்னைச் சிலம்பம் கற்றுக்கொள்ளச் சொன்னார். சாமுவேல் லவ்லி சுந்தர் மாஸ்டரிடம் சேர்ந்தேன்.  சில நாட்கள் கம்பு சுற்றுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான், காற்றில் கம்பு சுற்றும்போது ஏற்படும் ’விசிக் விசிக்’ சத்தத்தால் ஈர்க்கப்பட்டேன்” என்கிறார் கிருத்திகா.

தினமும் காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் பயிற்சி. போட்டிகளில் பங்கேற்கும் காலத்தில் 3 முதல் 4 மணி நேரம்வரை பயிற்சி செய்கிறார்.

”சிலம்பம் மட்டும் கற்றுக்கொண்டால் போதாது, வில்வித்தையையும் ஒரு கை பார்க்கலாம் என்று ஆர்வம் வந்தது. அதையும் கற்றுக்கொண்டேன். சிலம்பமும் வில்வித்தையும் என் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. நினைவுத்திறன் அதிகரித்திருக்கிறது. ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். பாட்டுக் கேட்பது என் பொழுதுபோக்கு.

படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய முயற்சிகளுக்கு எங்கள் பள்ளி ஊக்கம் அளித்துவருகிறது. எனக்குக் கல்விக் கட்டணமும் கிடையாது. தமிழக அரசு என் திறமையை அங்கீகரித்து, ஒன்றரை லட்சம் ரூபாயை வழங்கியிருக்கிறது. தற்காப்புக் கலையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ‘எழுமின்’ என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறேன்.

இந்தத் தமிழர் கலைகளை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதும்,  பிற்காலத்தில் விளையாட்டு வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவராக வேண்டும் என்பதும் என் லட்சியம்” என்கிற கிருத்திகா, அலங்காரச் சிலம்பம், போர் சிலம்பம் போன்றவற்றை ஆடினால் நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்!சாதனைஆர். கிருத்திகா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x