Published : 03 Feb 2019 10:00 AM
Last Updated : 03 Feb 2019 10:00 AM

களத்தில் பெண்கள்: இது தேவையில்லாத போராட்டமா?

தமிழகத்தில் ஜனவரி 22 தொடங்கி ஒன்பது நாட்களாக நடந்துவந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உள்ளிட்டோரின் போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராட, அவர்கள் அதிகமான சம்பளம் பெற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் ஊதிய உயர்வு கேட்டுப் போராடுகிறார்கள் என்ற கற்பிதம் மக்களிடம் பரப்பப்பட்டது. இந்தப் போராட்டம் ஊதிய உயர்வுக்காக இல்லை என்று சொல்லும் அரசு ஊழியர்கள், எதற்காக இந்தப் போராட்டம் என்பதையும் சொல்கிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் ஒருவரிடம் பேசினோம். “பணிப் பாதுகாப்பு என்ற ஒரே காரணத்துக்காகத்தான் கஷ்டமான தேர்வுகளை எழுதி பலரும் அரசுப் பணிக்கு வருகிறார்கள். நானும் அதே போல்தான் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்தேன்.

எனக்குப் பணி ஆணை வழங்கப்பட்ட போதுதான் அடிப்படை ஊதியம் வெறும் 5 ஆயிரம் என்று தெரியவந்தது. தமிழகத்தில் உள்ள 21 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் இந்தக் குறைவான ஊதியத்தில்தான் வேலை செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், தமிழக அரசோ ஆசிரியர் களுக்கு லட்சக்கணக்கில் ஊதியம் வழங்குவதாகச் சொல்கிறது. இடை நிலை ஆசிரியர்களிலேயே 2009 மே 31 அன்று பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு ஊதியமும் ஜூன் 1-ம் தேதிக்குப்  பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்குக் குறைந்த ஊதியமும் வழங்கப்படுகிறது.

ஒரே வேலை, ஒரே கல்வித் தகுதி இருந்தும் இதுதான் நிலை. இந்த ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் போராட்டம் நடத்திவருகிறோம். இந்தக் குறைவான ஊதியத்தில் ஆசிரியர் பணி மட்டுமல்லாது தேர்தல் பணி, மக்கள்தொகைக் கணக்கெடுக்கும் பணி உள்ளிட்ட  வேலைகளையும் செய்து வருகிறோம்.

அதேபோல் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. பள்ளிகளை அரசு திறக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தவர்களே ஆசிரியர்கள்தாம். மழலையர் வகுப்பு களுக்கு மாண்டிசோரி கல்வி முறையில் ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும். ஆனால், அரசோ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையே பாடம் நடத்தச் சொல்கிறது” என்றார் பெயர் வெளியிட விரும்பாத அந்த ஆசிரியர்.

பாதுகாப்பான பழைய ஓய்வூதியம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் ஒன்று. “2003-க்குப் பிறகு தமிழகத்தில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களிடம் ஓய்வூதியத்துக்காக ஊதியத்திலிருந்து பத்து சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது. பிடித்தம் செய்யப்பட்ட 20 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட பணத்தைத் தமிழக அரசு வேறு திட்டங்களுக்குச் செலவுசெய்துள்ளது. ஐந்தாண்டுகள் மட்டும் பதவி வகிக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ppljpg

ஆனால், காலமெல்லாம் உழைத்து 58 வயதில் நடைப்பிணமாக வீட்டுக்குச் செல்லும் அரசு ஊழியர்களுக்கு அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை ஓய்வூதியமாக வழங்காமல் ஏமாற்றுவது நியாயமா? மேலும், இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் பணம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதை அவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதில் வரும் சொற்ப லாபத்தை எங்களுக்கு ஓய்வூதியமாகத் தருவார்களாம்.

அரசு ஊழியர்களின் பணத்தைத் தனியாருக்குக் கொடுப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதேபோல் ஏழாவது ஊதியக் குழு அடிப்படையில் 21 மாதங்களுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் எனக் கேட்கிறோம். ஆனால், இந்தத் தொகை ஐ.ஏ.எஸ். தகுதியில் உள்ளவர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

போராடும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளையும் ஆசிரியர் களையும் தேசவிரோதிகளைப் போல் குண்டு கட்டாகத் தூக்கிச்சென்று கைதுசெய்கிறது. கைது செய்யப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்ட ஆசிரியர்களுக்குப் போதுமான உணவுகூட வழங்கப்படவில்லை” என்கிறார் வணிகவரித் துறை பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கற்பகம்.

கடைசி தலைமுறை ஊழியர்கள்

“பொதுவாக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அதை வேறு மாதிரியாக மக்களிடம் கொண்டுசெல்கிறார்கள். எங்களுடைய போராட்டம் எதிர்காலத் தலைமுறைக்கானது. அரசுத் துறையில் அவுட்சோர்ஸிங்கை அனுமதிக்கும் அரசாணை எண் 56-யைக் கைவிடக் கோரிக்கை வைத்துள்ளளோம்.

இந்த அரசாணையை அமல்படுத்தினால் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள மூன்று லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் அப்படியே இழுத்து மூடப்பட்டுவிடும். டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, குரூப் 2 தேர்வுகளை எழுதி இனி யாரும் அரசுப் பணிக்கு வரமுடியாது.

அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அவுட்சோர்ஸிங் முறையில் ஆட்களை நியமிக்க இந்த அரசாணை வழிவகுக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தின் கடைசி தலைமுறை அரசு ஊழியர்கள் நாங்களாகத்தான் இருப்போம். அதனால்தான் இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும் எனத் தொடர்ந்து போராடுகிறோம். போக்குவரத்துத் துறை ஊழியர்களின் பணத்தை இந்த அரசு எப்படிச் செலவு செய்ததோ அதேபோல்தான் தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதியத்தையும் செலவுசெய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 3,500 தொடக்கப் பள்ளிகளை  மூடிவிட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கேட்கிறோம். இதனால் மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டம் முற்றிலும் இல்லாமல் போய்விடும். இப்போதெல்லாம் யார் சத்துணவு சாப்பிடுகிறார்கள் என மேம்போக்காகக் கேட்கிறார்கள்.

தமிழகத்தில் இன்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பசியாறுவதே சத்துணவுத் திட்டம் இருப்பதால்தான் என்பதை ஆட்சியாளர்கள் மறக்கக் கூடாது” என்கிறார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கலைச்செல்வி.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரான தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் மா.ராஜேஸ்வரி கூறுகையில், “இவ்வளவு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் சங்கத்தினரிடம் ஏன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை? இதற்கு முன் நடந்த அரசு ஊழியர் சங்கப் போராட்டங்களில் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தையாவது நடத்தியிருக்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் பலவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக அளித்தவைதாம். அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றுதானே நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். அதைக் கேட்டால் எங்களை இடைநீக்கம் செய்கிறார்கள்.  அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு ஏழாயிரம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.

ppl-2jpgright

ஆனால், இந்தியாவில்  ஒரு லட்சம் பேருக்கு வெறும் 1,622 அரசு ஊழியர்களே உள்ளனர். இதைச் சரிசெய்ய அரசு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். ஆனால், காலிப்பணியிடங்களை காலியாகவே வைத்துள்ள நிலைமைதான் நீடிக்கிறது” என்றார்.

“மக்கள் மத்தியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்துத் தவறான பிம்பத்தைக் கட்டமைப்பதில் பலரும் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். ஆசிரியர்களுக்கு இருக்கும் பணிச்சுமை குறித்து யாருமே கண்டுகொள்வதில்லை. தனியார் பள்ளிகளைப் புற்றீசல்போல் பெருகவிட்டு, அரசுப் பள்ளிகளின் உள் கட்டமைப்பைச் சரிசெய்யாத அரசை யாரும் குறைசொல்வதில்லை. நீட் தேர்வுக்கு அரசு ஒப்புக்கொண்டது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.

எங்கே மக்கள் இவற்றையெல்லாம் கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் திட்டமிட்டே ஆசிரியர்களின் பணி குறித்துத் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன” என்று வேதனைப்படுகிறார் பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர்.

தற்போது பொதுத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டாலும் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் நிலை என்னவாகும் என்பது போராட்டத்தில் பங்கேற்றவர்களின் மனத்தில் எழுந்துநிற்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x