தேர்வுக்குத் தயாரா? - ‘கிரியேட்டிவ்’ வினாக்கள்: கவலை வேண்டாம்! (10-ம் வகுப்பு - கணிதம்)

தேர்வுக்குத் தயாரா? - ‘கிரியேட்டிவ்’ வினாக்கள்: கவலை வேண்டாம்! (10-ம் வகுப்பு - கணிதம்)
Updated on
2 min read

புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் வழக்கமான வினாக்களுக்கு அப்பால் கேட்கப்பட வாய்ப்புள்ள ‘கிரியேட்டிவ்’ வினாக்களே நடப்பாண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவால். அதிலும் இந்த வினாக்கள் கணக்குப் பாடத்தின் மதிப்பெண்களைக் கணிசமாகப் பாதிக்கும் என்ற கவலையும் மாணவர் மத்தியில் நிலவுகிறது. அந்தக் கவலையைப் போக்கும் வகையில் கிரியேட்டிவ் வினாக்களுக்குத் தயாராகும் உத்திகளை முதலில் பார்ப்போம்.

பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை புளூபிரிண்ட் நடைமுறைகளில் மாற்றமில்லை என்பதால், கிரியேட்டிவ் வினாக்கள் பாடங்களுக்கு உள்ளிருந்தே உருவாக்கப்படும். எனவே, கணக்குகளைப் புரிந்துகொண்டு பயில்வது அவசியம். மொத்த மதிப்பெண்ணில் சுமார் 20 சதவீத வினாக்கள் கிரியேட்டிவ் வகையாக இருக்குமென எதிர்பார்க்கலாம். ஒரு மதிப்பெண் பகுதியில் 4 முதல் 5 வினாக்கள், இரு மதிப்பெண்ணில் 2 முதல் 3, ஐந்து மதிப்பெண் பகுதியில் 2 எனக் கிரியேட்டிவ் வினாக்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஒரு மதிப்பெண் பகுதிக்கான கிரியேட்டிவ் வினாக்களை 2, 3, 5, 6, 7 ஆகிய பாடங்களின் உள்ளிருந்து தலா 1 வினாவாக எதிர்பார்க்கலாம். 2, 5 மதிப்பெண் பகுதிக்கான கிரியேட்டிவ் வினாக்கள் 2, 3, 5, 8 ஆகிய பாடங்களில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது.

‘ஸ்கோர்’ உதவும்

பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ‘ஸ்கோர்’(SCORE) எனப்படும் கணக்குப் பாடத்துக்கான பிரத்யேக வழிகாட்டி நூலை மாணவர்கள் வாங்கிப் படிக்கலாம். இதில் கிரியேட்டிவ் வினாக்கள் உட்பட அனைத்து வகையான வினாக்களுக்கும் விடை காணப்பட்டிருக்கும். பள்ளிக் கல்வி தொடர்பாக ஆசிரியர்கள் நிர்வகிக்கும் பல்வேறு இணையதளங்களில் இருந்தும் இந்த நூலை மாணவர்கள் தரவிறக்கம்செய்து பயன்படுத்துகிறார்கள்.

இதுவரை தேர்வெழுதிய காலாண்டு, அரையாண்டு வினாத்தாள்களின் அடிப்படையிலே ஆண்டு இறுதித் தேர்விலும் வினாத்தாள் அமையும் என்பதால் அவற்றை மாதிரியாகக்கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம். இந்த வினாத்தாள்களில் இடம்பெற்றுள்ள கிரியேட்டிவ் வினாக்கள், தொடர்பான தெளிவை மாணவர்களுக்கு அளிக்கும். ஸ்கோர் வழிகாட்டியில் இடம்பெற்றுள்ள 5 மாதிரி வினாத்தாள்களும் மாணவர்களின் தேர்வுத் தயாரிப்புகளை முழுமையாக்கும்.

தவறுகளைத் தவிர்ப்போம்

கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரை சிறுசிறு தவறுகளும் மதிப்பெண்ணில் சரிவை ஏற்படுத்துவதுடன், தேர்வறையில் குழப்பத்தையும் நேர விரயத்தையும் ஏற்படுத்தக் கூடும். செய்முறை வடிவியலில் உதவிப் படம் வரைய மறப்பது, புள்ளிகளுக்குப் பெயரிடாதது, அளவுகளை எழுதாதது, தொடுகோடு வரைதலில் கொடுக்கப்பட்டுள்ள அளவு ஆரமா - விட்டமா எனக் கவனிக்காதது, முக்கோணம் வரைதலில் கோணங்களைத் தவறாகக் குறிப்பதுடன் அதில் கேட்கப்பட்டது நடுக்கோடா குத்துக்கோடா எனக் கவனிக்காதது, கிராஃப் பகுதியில் அளவுத்திட்டம் எழுதாதது, கணக்கின் நிறைவாக விடையை எடுத்து எழுதாதது, விடைக்கு உரிய அலகு எழுத மறப்பது போன்ற தவறுகள் இவற்றில் அடங்கும். எனவே, இப்போதிருந்தே இந்தத் தவறுகள் இன்றிக் கணக்குகளைத் தீர்த்துப் பழகுவது நல்லது.

thervu-23jpgபாடக் குறிப்புகளை வழங்கியவர்: மெ.பழனியப்பன், பட்டதாரி ஆசிரியர் (கணிதம்), சாத்தப்பா அரசு மேல்நிலைப் பள்ளி, நெற்குப்பை, சிவகங்கை மாவட்டம்.

கட்டாய வினாக்கள் கவனம்

கட்டாய  வினாக்கள் எந்தப் பாடத்திலிருந்தும் கேட்கப்படலாம் என்பதால் மாணவர்கள் அவற்றைக் கடினமாகக் கருதுகிறார்கள். ஆயினும், முந்தைய வினாத்தாள்களின் அடிப்படையில் 2, 3, 5, 8  ஆகிய பாடங்களில் இருந்து 2 மதிப்பெண் கட்டாய வினாவையும் 3, 5, 8 ஆகிய பாடங்களில் இருந்து 5 மதிப்பெண் கட்டாய வினாவையும் எதிர்பார்க்கலாம். அதேநேரம் ஒரு முறை கேட்கப்பட்ட வினாவை மீண்டும் கேட்பது அரிது என்பதையும் மனத்தில் வைத்து இப்பகுதிக்கான திருப்புதலை மேற்கொள்ள வேண்டும்.

தேர்ச்சி எளிது

நடப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் கடைசித் தேர்வு என்பதால் வினாத்தாள் கடினமாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. எனவே, மாணவர்கள் தேர்ச்சி குறித்த கவலையின்றிக் கூடுதல் மதிப்பெண்களை இலக்காகக் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம். செய்முறை வடிவியலில் தொடுகோடு, முக்கோணம் வரைதலைத் தேர்வு செய்யலாம். இந்த இரண்டிலும் தொடுகோடு வரைதலுக்கு முன்னுரிமை தரலாம். புத்தகத்தின் ஒரு மதிப்பெண் வினாக்களில் 2, 3, 5, 6, 7 ஆகிய பாடங்களைக் குறிவைத்துப் படிக்க வேண்டும். 1, 4, 12 ஆகிய பாடங்கள் எளிமையானவை என்பதால், இவற்றின் 2, 5 மதிப்பெண் வினாக்களில் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in