Published : 03 Feb 2019 10:05 AM
Last Updated : 03 Feb 2019 10:05 AM

சூழல் காப்போம்: என் சமையலறையில்…

நம்முடைய வாழ்க்கையில் பெரும்பாலான மாற்றங்களை வீட்டில் இருந்துதான் தொடங்க வேண்டும். நான் சமையல் அறையிலிருந்து தொடங்கியிருக்கிறேன். அரசு அறிவிப்பதற்கு முன்பே பிளாஸ்டிக் பொருட்களைக் கூடுமானவரை நான் தவிர்த்துவருகிறேன். எங்கள் வீட்டுச் சமையலறை நான்கு ஆண்டுகளாக பிளாஸ்டிக் இல்லாத அறையாக மிளிர்கிறது.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்குப் பதில் எவர்சில்வர் பாட்டில், நொறுக்குத்தீனியைப் போட்டுவைக்கக் கண்ணாடி டப்பாக்கள், மிளகாய், மல்லி, கோதுமை மாவு போன்றவற்றை வைக்க அலுமினிய - எவர்சில்வர் டப்பாக்கள், ஃபிரிட்ஜில் வைக்கும் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் துணிப்பைகள்,  குப்பைகளை அகற்ற எவர்சில்வர் அல்லது அலுமினிய வாளி, உப்பு, புளிக்கு பீங்கான் ஜாடிகள், வெங்காயம், பூண்டு வைக்க மூங்கில் அல்லது பனையோலையில் செய்த கூடைகள் ஆகியவற்றைப் பயன்படுத்திவருகிறேன். நான் - ஸ்டிக் பாத்திரங்களுக்கு எங்கள் வீட்டில் எப்போதும் அனுமதியில்லை.

கைவினைப் பொருட்களைச் செய்வதில் எனக்கு ஆர்வமுண்டு. ஆனால், அதற்குக்கூட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்களைச் செய்ய  மாட்டேன். அதற்குப் பதில் அட்டை, சணல், துணி, கம்பளி, கண்ணாடி, கொட்டாங்கச்சி, பழைய நாளிதழ்கள், மரம் போன்றவற்றைப் பயன்படுத்திவருகிறேன்.

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடைவிதித்திருப்பதைச் சிறு கிராமங்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும். அதேபோல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக என்ன மாதிரியான பொருட்களைப் பயன்படுத்தலாம் என்பதையும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் வழியாக மக்களுக்கு சொல்ல வேண்டும்.  பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

கிள்ளியெறிந்திருக்க வேண்டிய பிளாஸ்டிக் பொருட்கள் இன்றைக்கு மரமாக வளர்ந்துவிட்டன.  மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தி அதை வெட்டி வீழ்த்த வேண்டிய தருணம் இது.

- பார்வதி கோவிந்தராஜன், திருத்துறைப்பூண்டி.

 

மாற்றத்துக்கு வித்திடும் எழுதுகோல்

நான் கல்லூரி மாணவி என்பதால் பாடம் தொடர்பாக அதிகம் எழுத வேண்டும். என் வகுப்பு மாணவர்கள் பலரும் பந்துமுனைப் (ரீஃபில்) பேனாக்களையே பயன்படுத்துவார்கள். ஒரு பந்துமுனைப் பேனா ஒரு வாரத்துக்குள் தீர்ந்துவிடும். மீண்டும் புதிதாக வாங்குவார்கள். இந்த வகை பேனாக்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுகின்றன.

வாரத்துக்கு ஒரு பேனா என்றால், வருடத்துக்கு எத்தனை பேனாக்கள்? அவற்றைத் தூக்கியெறிவதன் மூலம் நாம் எவ்வளவு குப்பையைச் சேர்க்கிறோம்? இதைத் தவிர்க்கவே நான் மை பேனா (இங்க்) பயன்படுத்திவருகிறேன். ஒரு மை பேனா வாங்கினால் பல மாதங்களுக்கு அதையே பயன்படுத்தலாம். என் வகுப்பில் உள்ளவர்களிடமும் மை பேனாவைப் பயன்படுத்தும்படி கூறிவருகிறேன். அனைவரும் இதைப் பின்பற்றினால் சூழல் மாசு குறையும்.

- ர. ரஜினி பியூலா ஷோபிகா, செந்தாமரை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வடபழஞ்சி, மதுரை.

 

பிளாஸ்டிக் ஒழிப்பில் என் பங்கு

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உதவும் வகையில் நீங்கள் பின்பற்றும் நடைமுறைச் செயல்பாட்டைத் தகுந்த ஒளிப்படங்களுடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சலும் அனுப்பலாம். உங்கள் ஆலோசனை இயற்கையைப் பாதுகாப்பதுடன்  மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x