Published : 02 Feb 2019 12:08 PM
Last Updated : 02 Feb 2019 12:08 PM

நெகிழி பூதம் 02: துணிப்பை - பழக்கமாக மாற்றுவது எளிது

ஞெகிழிப் பைகளைத் துறுந்து, துணிப்பை தூக்கத் தொடங்கும் செயல்பாட்டை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்வதற்கு அதை ஐந்து படிநிலைகளாகப் பிரித்துக் கையாண்டால், நிச்சயமாக மாற்றத்துக்கு நம்மால் தகவமைத்துக்கொள்ள முடியும்.

முதலாவதாக, ஞெகிழித் தடை அவசியம் என்பதை நாம் தீர்மானமாக நம்ப வேண்டும். பூமி தோன்றியது முதல் இன்றுவரை கலாச்சாரத்தில் தோன்றிய அனைத்து நல்ல பழக்கங்களுமே ஏதோ ஒரு காலகட்டத்தில் நம் முன்னோர்கள் எடுத்த முன்முயற்சியால் உருவானவையே. அப்படிப்பட்ட உலகைக் காக்கும் முயற்சி ஒன்றையே, தற்போது நாம் முன்னெடுத்துள்ளோம். இந்த விஷயம் சார்ந்து இனிமேலும் தாமதிக்கக் கூடாது, சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கும் எல்லா அம்சங்களுக்கும் தடை அவசியம்.

இரண்டாவதாக, ஞெகிழி தொடர்பான பிரச்சினையை உற்று நோக்க வேண்டும். உங்களால் பிரச்சினையை உணர முடிகிறது, அதற்கான தீர்விலும் நம்பிக்கை உள்ளது. ஆனால், தீர்வைச் செயல்படுத்துவதில் தயக்கமா? ‘நான் ஒருவன் மாறினால் மட்டும் போதுமா’, ‘இதெல்லாம், சும்மா கண் துடைப்பு வேலை’, ‘அரசியல் விளையாட்டு’ என்பது போன்று மாற்றத்துக்கு எதிரான சப்பைக்கட்டு எண்ணங்களைத் தூக்கி எறிந்துவிடுவோம்.

மக்கிப்போகாத பல கோடி டன் பிளாஸ்டிக் கழிவை நம் குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் விட்டுச் செல்லப் போகிறோமா? அல்லது நம் ஒவ்வொருவராலும் முடிந்த சில நூறு கிலோ பிளாஸ்டிக் கழிவைத் தவிர்க்க முயற்சி எடுக்கப் போகிறோமா என்று உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள். இதற்கான விடைதான் தீர்வு.

மூன்றாவதாக, ஞெகிழித் தடை என்ற தீர்வின் முகவராக மாறுவதற்குத் தயாராகுங்கள். உங்கள் கைப்பையில், இருச்சக்கர வாகனத்தில், காரின் முன் பெட்டியில், வீட்டில் செருப்பு வைக்கும் இடத்தில் என்று வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் இரண்டு - ஐந்து தரமான துணிப்பைகளை வைத்துக்கொள்ளுங்கள்.

100 கிராம் சீரகம் முதல் 10 கிலோ அரிசிவரை பொருட்களை வாங்குவதற்குத் தேவையான பல்வேறு அளவுகளில் அமைந்த துணிப் பைகள், கண்ணாடி பாட்டில்கள், எவர்சில்வர் பாத்திரங்கள் - டப்பாக்கள், கூடைகள் போன்றவற்றைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள். இப்படிச் செய்யும்போது எந்த ஒரு கடைக்காரரும் ஒரு பொருளைப் பொதிந்து தர வேண்டிய அவசியம் நேராது. கடைக்காரர் மாற வேண்டுமென்பதற்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை. மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டுமே!

நான்காவதாக, செயல் வீரராக மாறுங்கள். வீட்டுக்குள் ஒரு ஞெகிழிப் பைகூட வரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மொத்தமாக சாக்குகளில் வாங்கி, அவ்வப்போது எடை போட்டு கொடுக்கும் சிறு வியாபாரிகளிடம் பொருட்களை வாங்குங்கள். அனைத்து பொருட்களையும் ஏற்கெனவே ஞெகிழிப் பைகளில் அடைத்து வைத்திருக்கும் கடைகளைப் புறக்கணியுங்கள். பிஸ்கட் போன்ற ஈரப்பதம் நீக்கப்பட்ட ஒரு சில பொருட்களை மட்டுமே ஞெகிழியால் பொதிய வேண்டிய அவசியம் உள்ளது.

இவற்றைத் தவிர்த்து அன்றன்றைக்கு உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்கும் கடைகளுக்கு நம்மைப் போன்று ஞெகிழியைத் தவிர்க்கும் பொறுப்பான நுகர்வோரால் எந்தப் பிரச்சினையும் உருவாகப் போவதில்லை. ஞெகிழியைத் தவிர்க்கும் நம்முடைய பொறுப்பான செயல்பாடு, இன்றைக்குப் பெரும் இயற்கை அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதீத நுகர்வுப் பண்பாட்டிலிருந்து விடுபட்டு, மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும்.

ஐந்தாவதாக, ஞெகிழித் தடை தொடர்பாக நம்மிடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கவனிக்க வேண்டும். இரண்டே நாட்களில் வெற்றியை கொண்டாடிக் களித்துவிட வேண்டாம். தொடர்ந்து செயல்படுத்துவதுதான் மிகவும் முக்கியம். ஞெகிழிப் பொருட்களின் தேவை நம் வாழ்வில் இருந்து முற்றிலுமாக விடைபெறும் நாள் வரும்வரை தொடர்ச்சியாகக் கவனத்துடன் செயல்படுங்கள்.

ஞெகிழி இல்லாத வாழ்க்கை சிக்கலானது, சுமையானது என்ற எண்ணம் விடுபடும்வரை நாம் உறுதியாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவதுதான் நம்மையும் உலகையும் ஒருசேர வாழ வைக்கும் என்ற எண்ணம் நம் மனத்தில் நிலைபெறும்வரை உங்களை நீங்களே கவனித்து, கவனத்துடன் செயல்படுங்கள்.

ஞெகிழித் தவிர்ப்பு நம் ஒவ்வொருவரது கடமை!

கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x