Last Updated : 17 Feb, 2019 09:21 AM

 

Published : 17 Feb 2019 09:21 AM
Last Updated : 17 Feb 2019 09:21 AM

பார்வை: வருமா சரிபாதி பெண் ஆட்சி?

நமது நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் அடிப்படையான அரசியல் சாசனத்தை உருவாக்கியதில் 15 பெண்கள் முக்கியப் பங்காற்றினர். பொதுவாழ்வுப் பங்கேற்புதான் அவர்களின் சாதனைக்குக்கான அடிப்படைக் காரணம்.

அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமையைச் சுதந்திர இந்தியா தருவதற்கு  முன்பாகவே, சொத்துள்ள பெண்களுக்கு வாக்குரிமையை முதலாவதாக 1921-ல் வழங்கி வரலாறு படைத்தது நமது மதராஸ் மாகாணம்.

அந்த வரலாற்றுக்கு நூறாண்டு ஆகப் போகிறது. ஆனாலும்,  நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அரசியலில் இட ஒதுக்கீடு

தற்போதுள்ள கிராமப் பஞ்சாயத்துகள், நகர சபைகள், மாநகர மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயம் வழங்க வேண்டும் என்ற நிலை 1996-ல் உருவானது. அதற்கேற்ற வகையில் அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. தலித் பெண்களுக்கும் பழங்குடிப் பெண்களுக்கும் உள் ஒதுக்கீடு தரப்பட்டது. அதனால், கணிசமான பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று அரசியல் அதிகாரத்தில் பங்கேற்றனர்.

இட ஒதுக்கீடு, பெண்களின் அரசியல் பங்களிப்பை உறுதிசெய்தது. அரசியல் கட்சி பலம், பண பலம், சாதிய பின்புலம் எதுவும் இல்லாத பெண்கள்கூட  வெற்றிபெற்றனர். பஞ்சாயத்துத் தலைவிகள், நகர மன்றத்  தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆனார்கள்.

இந்தியாவில் 1996-ல் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டோடு பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தது. அடுத்தடுத்து நடந்த தேர்தல்கள் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பங்கேற்றனர்.

மாற்றத்துக்கு வித்திட்ட பெண்கள்

பஞ்சாயத்துத் தேர்தல்கள் மூலம் உருவாகிவருகிற பெண்களின் பங்கேற்பு மூலம் இந்தியச் சமூகத்தில் பெரும் ஜனநாயக அலையே  அடித்துவருகிறது.  ஆனாலும், இதில் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன.  உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் ஒப்புக்காகத்தான் செயல்படுகிறார்கள்; பெரும்பாலும் அவர்களின் குடும்ப ஆண்கள்தாம் அவர்களுக்குப் பதிலாகச் செயல்படுகிறார்கள் என்பார்கள். தலித் பெண்கள் தலைவராகச் செயல்படுகிற ஊர்களில் மற்ற சாதியினர் அவரை மதிப்பதில்லை என்பார்கள்.

உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு நாடுதழுவிய அதிகாரபூர்வமான ஆய்வுகள் எவையும் நடத்தப்படவில்லை.  பெண்கள் உள்ளாட்சித் தலைவர்களாகப் பணியாற்றுகிற பகுதிகளில் கல்வியிலும் சுகாதாரத்திலும் சமூகம்  முன்னேறியிருக்கிறது என்கிறார் மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தோடு இணைந்து பணியாற்றுகிற, ‘ஆசியப் பங்கேற்பு ஆய்வு மன்றம்’ எனும் அமைப்பின் இயக்குநர் மனோஜ் ராய்.

நடைபெறாத தேர்தல்

உள்ளாட்சியின் அதிகாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பஞ்சாயத்துத் தலைவிகளுக்கு ஏற்படுத்திவருகிற எனது அனுபவங்களும் அதுவே. பெண்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை  2006-ல் பிஹார் மாநிலம் முதலில் அறிவித்துப் பெருமை தேடிக்கொண்டது. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களும் அறிவித்ததுபோல் தமிழகமும் அறிவித்தது. முறையாகத் தேர்தல் நடந்திருந்தால் இந்நேரம் 7000-த்துக்கும் அதிகமான பெண்கள் உள்ளாட்சி மன்றத் தலைவர்களாகியிருப்பார்கள். 50 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் உள்ளாட்சி மன்றங்களில் பிரதிநிதிகள் ஆகியிருப்பார்கள். ஆனால், தேர்தல் நடைபெறாமல் மூன்று ஆண்டுகளாகத் தாமதம் செய்யப்படுகிறது.

நூறு கோடிப் பெண்கள் எழுக

உள்ளூர் அளவில் பெண்கள் முக்கியப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படும்போது அடிப்படைப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல், சுகாதாரம் உள்ளிட்டவற்றில்  கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உள்ளாட்சிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி அதிகரிக்கும். ‘நூறு கோடிப் பெண்கள்  எழுக’ என்பது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து 2013 பிப்ரவரியில் உலக அளவில் தொடங்கப்பட்ட ஒரு பிரச்சார இயக்கம். தமிழகத்தில் இந்தப் பிரச்சாரத்தில், கிராமப் பெண்கள் இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் இணைந்துள்ளன. தமிழகத்தில் இந்தப் பிரச்சார இயக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் பற்றியும் அதில் பெண்களின் பங்கேற்பு பற்றியும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில்  ‘உள்ளாட்சிகளுக்கு உடனடியாகத் தேர்தல்’  என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவதே ‘நூறு கோடிப் பெண்கள் எழுக’ இயக்கத்தின் முக்கியமான முழக்கம்.  அரக்கோணத்தில் கிராமப் பெண்கள் இயக்கத்தின் அலுவலக வளாகத்தில் 2019 பிப்ரவரி 9 அன்று இது பற்றிய கருத்தரங்கை ‘அரசியல் சாசன உரிமைகளும் உள்ளாட்சித் தேர்தலும்’ என்ற தலைப்பில் கிராமப் பெண்கள் இயக்கம் நடத்தியது. முன்னாள் பஞ்சாயத்துத் தலைவிகள், தேர்தலில் போட்டியிட விரும்புகிற பெண்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

பெண்களின் அரசியல் அதிகாரம், அரசியல் பங்கேற்பு, தமிழகப் பஞ்சாயத்துத் தேர்தல் முறை, விகிதாச்சார பிரதிநிதித்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதங்கள்  நடைபெற்றன. கிராமப் பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்த பெர்னார்ட் பாத்திமா தலைமையேற்றார். பெண்களின்  தலைமைத்துவத்தை வலியுறுத்தும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அரசியல் கல்வி அவசியம்

பெண்கள் அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்குக் கல்வியும் அரசியல் கல்வியும் மிக முக்கியமானவை. பெண்களுடைய அரசியல் கல்வி என்பது பெண் சம்பந்தமானது மட்டுமல்ல. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் முழுமைக்கும் தொடர்புடையதாக இருக்க வேண்டும். பெண்களுக்கான அரசியலில் மட்டுமல்ல; பொது அரசியலிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்கள் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவிகள். 

நாளுக்கு நாள் பெருகிவரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த பெண்களின் குரல் ஆட்சி அதிகாரத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற உறுதியோடும் சரிபாதி பெண்களின் ஆட்சி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்போடும் நிறைவுற்றது அந்தக் கூட்டம். 

- கட்டுரையாளர் மொழிபெயர்ப்பாளர்,
பஞ்சாயத்துத் தலைவிகளைப் பயிற்றுவிக்கிற பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: veni0211@gmail.com     

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x