Last Updated : 26 Sep, 2014 12:18 PM

 

Published : 26 Sep 2014 12:18 PM
Last Updated : 26 Sep 2014 12:18 PM

கண்களை ஏமாற்றிய காட்சிப் பிழை

அனிமேஷன் என்ற வார்த்தையைக் கேட்டதும் சிலருக்கு டாம் அண்ட் ஜெர்ரியும், மிக்கி மௌஸும் நினைவுக்கு வரலாம். இன்னும் சிலர் அதை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறையுடன் சம்பந்தப்பட்டதென்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. கம்ப்யூட்டர் வருவதற்கு முன்பே வந்துவிட்டது அனிமேஷன் எனும் ஜாலம்.

அனிமேஷன் என்ற வார்த்தையின் அர்த்தமே அசையாத ஒரு பொருளை அசைவூட்டுவது என்பதுதான். ‘மயாபஜார்’ படத்தில் கடோத் கஜனை நோக்கி உணவு நிறைந்த பாத்திரங்கள் வரிசையாக ஓடிவந்தது ‘ஸ்டாப் மோஷன்’ என்ற அனிமேஷன் உத்தியின் தயவால்தான்.

ஸ்டாப் மோஷன் மூலம் எடுக்கப்பட்ட ஷாட்டு களில் பாத்திரங்கள் நகர்ந்து வருவதுபோலக் காட்ட, படத்தொகுப்பு (எடிட்டிங் டெக்னிக்) முறையைத் திறமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஸ்டாப் மோஷன் பற்றித் தனியாக ஒரு அத்தியாயத்தில் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். அதற்கு முன்பு ‘மாயா பஜார்’ படத்தில் கடோத்கஜன் பெரிதாக வளர்ந்த ஆச்சரியத்தையும், அவனது வாய்க்குள் லட்டுகள் பறந்து சென்ற ரகசியத்தையும் பார்க்கலாமா..

சமைத்து வைக்கப்பட்ட விருந்தை மொத்தமாக ஸ்வாகா செய்ய வேண்டுமானால் கடோத் கஜன் பெரிதாக வளர வேண்டும். ஒரே இடத்தில் கேமராவை நிலையாக வைத்துவிட்டு, கேமராவை நோக்கி நடிகரின் உருவத்தை நகர்த்துவதன் மூலம், நடிகரின் உருவம் பருத்து வளருவதுபோலக் காட்டி விடலாம்.

இது சாதாரண கேமரா உத்திதான். ஆனால் கேமராவில் ‘வைட் ஆங்கிள் லென்ஸ்’ (Wide Angle Lens) பொருத்த வேண்டும். கேமராவின் ஃபோகஸில் (focus) கவனம் செலுத்த வேண்டும்.

இந்த இரண்டும் மிக முக்கியம். ஏனென்றால் கேமராவில் வைட் ஆங்கிள் லென்ஸ் மாட்டியதும் அருகில் இருக்கும் பொருள் பிரம்மாண்டமாகவும், சற்றுத் தொலைவில் இருக்கும் பொருள் சிறியதாகவும் தெரியும். அதேநேரம் அந்தக் காட்சிக்கோணத்தில் இருக்கும் அத்தனை பொருட்களும் தெளிவாகத் தெரியும் (முழுமையான ஃபோகஸ்).

இப்போது நடிகரை கேமராவை வைத்து நகர்த்தும் தண்டவாளத்தில் (இதை டிராலி என்பார்கள்) உட்காரவைத்து கேமராவை நோக்கி அவரை ஒரே சீரான வேகத்தில் தள்ளிக்கொண்டு வர வேண்டும். ஒல்லியான ஒருவர் மட்டும் நடிகரின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்தபடி தள்ளிக்கொண்டு வருவார்.

இப்படித் தள்ளிக்கொண்டு வரும்போது கேமராவின் பார்வையில் முன்னணியிலும் (ஃபோர் கிரவுண்ட்) பின்னணி யிலும் (பேக்ரவுண்ட்) இருக்கும் மற்ற எல்லா பொருட்களும் அப்படியே இருக்க வேண்டும்; அதற்கு கேமராவின் ஃபோகஸ் மாறாமல் நிலையாக இருக்க வேண்டியது அவசியம். இப்படிச் செய்வதால் மற்ற பொருட்கள் அப்படியே இருக்க, நடிகர் மட்டும் கேமராவை நோக்கி உட்கார்ந்த நிலையிலேயே நகர்ந்து வருவதால், நடிகரின் உருவம் பிரமாண்டமாக வளர்ந்துகொண்டே வருவதுபோல பிலிம் ரோலில் பதிவாகும்.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். நடிகர் அமர்ந்திருந்த டிராலி கேமராவின் கண்களில் படாமல் எப்படித் தப்பித்தது? டிராலியை மறைக்கத் தாழ்வான கோணத்தில் (லோ ஆங்கிள்) கேமரா வைக்கப்பட்டிருக்கிறது. வைட் ஆங்கிள் லென்ஸ் பொருத்தப்பட்டிருப்பதால், கேமராவின் சட்டத்துக் குள்(ஃபிரேம்) இருக்கும் அத்தனையும் தெரியும்.

இதனால் தாழ்வான கோணத்தால் மட்டுமே டிராலியை மறைத்துவிட முடியாது. இதனால் கேமராவின் முன்னணியில் உணவுகளால் நிறைந்த பாத்திரங்களை வைத்து மறைத்துவிட்டார்கள்.

அதேபோல லட்டுகள் மேலே பறந்து சென்று தானாகவே ரங்காராவின் வாய்க்குள் நுழைவது போன்ற தோற்றத்தை ஒரு ஆப்டிகல் காட்சிப் பிழை என்றால் அது மிகவும் சரி. ‘ரிவர்ஸ் ஷாட்டுகள்’ காட்சிப் பிழையாக இருந்தாலும் அவற்றைக் கொண்டு சில ஆச்சரியங்களை சினிமாவில் செய்ய முடியும். மாயா பஜார் படத்தில் கடோத்கஜனின் வாயை அகலமாகத் திறக்கவைத்துப் பக்கவாட்டு அண்மைக் காட்சி

( புரஃபைல் குளோஸ் அப்) மூலம் முதலில் படம்பிடிக்கப்பட்டது. இப்போது வாய் திறக்கப்பட்ட இடம் ஸ்டூடியோவில் அடையாளம் குறிக்கப்பட்டு, அந்த இடத்திலிருந்து லட்டுகளைக் கீழே இருக்கும் தாம்பாளத்தில் விழும்படியாகக் கொட்டிப் படம்பிடிப்பார்கள். இப்போது பிலிம் பதனிடும் லேபில் இரண்டு ஷாட்டுகளும் ஆப்டிகல் முறையில் ஒன்றாக இணைக்கப்படும்.

லட்டுகள் மேலிருந்து கொட்டப்பட்ட ஷாட் மட்டும் ரிவர்ஸ் செய்யப்பட்டு கடோத்கஜன் வாய்க்குள் பறந்து சென்று விழுவதுபோல் சரியாகப் பொருத்தப்பட்டு ஒரே நெகட்டிவ் தயாராகும். இது ரிவர்ஸ் ஷாட் உத்தி என்பதைத் தெரிந்துகொள்ள இன்னொரு முறை அந்தக் காட்சியை பார்க்க நேர்ந்தால் லட்டுகள் இருந்த தாம்பாளத்தில் அவை ஒழுங்கின்றிச் சிதறிக் கிடப்பதைப் பாருங்கள். மேலேயிருந்து தாம்பாலத்திற்கு லட்டுக்கள் கொட்டப்பட்டதால் ஏற்பட்ட சிதறல் இது.

ஆப்டிகல் ஜாலம் வழியாகப் பேய்ப்பட மன்னர் விட்டாலாச்சார்யா செய்த சாதனைகள் அபாரமானவை. ஜகன் மோகினி பட வரிசையில் அவர் செய்த அதகள காட்சிப் பிழைகளை அடுத்த வாரம் ரசிப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x