Published : 16 Feb 2019 11:56 AM
Last Updated : 16 Feb 2019 11:56 AM

விவசாயக் கடன் தள்ளுபடி நீண்டகாலத் தீர்வாகுமா?

கடந்த பிப்ரவரி 1, 2019 அன்று, சமர்ப்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் சிறு, குறுவிவசாயிகளின் துயரைக் குறைக்க, மாத உதவித் தொகையாக ரூ.500 வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று அறிவித்தார். பசுமைப் புரட்சியில் பெரும்பங்கு வகித்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், நிதிஆயோக்கின் முன்னாள் தலைவர் அர்விந்த் பனகரியா இதை வரவேற்றுள்ளனர்.

மற்றோரு சாரார், விவசாயக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதே சரியான தீர்வாக இருக்கும் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த ஐந்தாண்டுகளாக மோடி அரசு விவசாயிகளுக்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துவந்திருக்கிறது என்று பார்க்கலாம். நாமக்கல் மாவட்ட விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த நான், சிறுவயதில் நேரடியாக விவசாய அனுபவம் பெற்றுள்ளேன். அமெரிக்க விவசாயத் துறையில் முதன்மை மாகாணமான கலிஃபோர்னியாயவில் நீண்டகாலம் வசித்தபோதும், கடந்த இருபதாண்டுகளாக அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம்செய்து கிடைத்த அனுபவத்தின் அடிப்படையிலும், சில கருத்துகளை முன்வைக்கிறேன்.

விவசாயப் பொருளாதாரத்தின் சவால்கள்

இந்திய விவசாயப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் வேறெந்த நாட்டிலும் காணமுடியாத அளவுக்குத் தனித்தன்மை கொண்டவை. உலகம் முழுவதும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால், விவசாயத்தில் ஈடுபடும் மக்கள்தொகை குறைந்துகொண்டே வந்தாலும், இந்திய மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இன்னும் விவசாயத்தையே நம்பியிருக்கிறார்கள்.

கடந்த 20, 25 ஆண்டுகளாகவே விவசாயிகளின் பிரச்சினை அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. தேவைக்கு அதிகமான உற்பத்தியால் விளைபொருட்கள் பாழாவது, விளைந்த பொருட்களுக்குச் சரியான விலை கிடைக்காமல் இருப்பது, விதை, உரம், கிருமிநாசினிகள் போன்ற இடுபொருள்களின் விலையேற்றம், சூழலியல் மாற்றத்தால் பருவமழை பொய்த்துப் போனது என்று பல திசைகளிலிருந்தும் வந்த தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திணறிப் போனார்கள்.

இது தவிர, விதைக் காலங்களிலும், அறுவடைக் காலங்களிலும் ஏற்படும் உடனடிச் செலவுகளைச் சமாளிக்க அரசு, கூட்டுறவு வங்கிகளில் இணைத் தொகை (Collateral) இல்லாமல் எளிதில் கடன் கிடைப்பதில்லை. இதனால், விவசாயிகள், ஒவ்வொரு ஆண்டும் முறைசாரா நிதிநிறுவனங்களிடமிருந்து, அதிக வட்டிக்குக் கடன் அல்லது கந்துவட்டி வாங்கிக் கட்ட முடியாமல், புதைக்குழியில் சிக்கிக்கொள்கின்றனர். இது தீவிரமடைந்ததன் தொடர்ச்சியே, விவசாயிகள் தற்கொலைகள் எனக் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக வரும் செய்திகள்.

நலிந்துகொண்டே வந்த விவசாயப் பொருளாதாரத்துக்கு அரசியல் கட்சிகள் எந்த ஒரு நீண்டகாலத் தீர்வையும் முன்வைக்கவில்லை. விவசாயக் கடன் தள்ளுபடி என்ற ஒரு தற்காலிகத் தீர்வையே தமிழகம் உட்பட்ட பல்வேறு மாநிலங்கள் அவ்வப்போது மேற்கொண்டுவந்தன.

விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விதமாக, மோடி அரசு விவசாயப் பொருளாதார கட்டமைப்பை மாற்றும் வகையில் மேற்கொண்டுள்ள முயற்சிகள் கவனம் பெற்று வருகின்றன. அவற்றில் சில:

இடைத்தரகர்களுக்கு முற்றுப்புள்ளி?

விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை நேரடியாகவே சந்தையில் விற்க, மின்னணு ஒருங்கிணைக்கும் திட்டம் (e-NAM) மூலம், நாடு முழுவதும் விவசாய மண்டிகள் இணைக்கப்பட்டுவருகின்றன. இடைத்தரகர்களுக்கான செலவைக் குறைப்பதன் மூலம் விவசாயிகள் பலன் காணத் தொடங்கியுள்ளனர். மாநில அளவில் 2014-ம் ஆண்டு கர்நாடக  மாநிலத்தில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, 2016-ம் ஆண்டு சில மாற்றங்களோடு இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 16 மாநிலங்களில் உள்ள 585 மண்டிகள் இணைக்கப்பட்டு, 2018 டிசம்பர் இறுதிவரை, ரூ. 58,930 கோடி மதிப்புள்ள விவசாயப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. e-NAM மூலம் சுமார் 63.75 லட்சம் சிறுவிவசாயிகள் தங்களது பொருட்களுக்கான சந்தை விலையைப் பெற்றுப் பயனடைந்துள்ளனர். இது மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு 2022-ம் ஆண்டில், நாட்டில் உள்ள அனைத்து மண்டிகளும் ஒருங்கிணைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, ஒரு தமிழக விவசாயி செல்பேசி வழியாகவே இந்தியாவில் எந்த மூலையிலும் உள்ள சந்தை விவரத்தை அறிந்து, அதற்கேற்பதன் விளைபொருட்களை விற்க முடியும்.

சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம்

கடந்த ஜூலை 2018 மாதத்தில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவுவிலை உயர்வு (MSP Hike), சதவிகித அடிப்படையில் சிறுதானியங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களுக்குச் சுமார் 40-50% வரை உயர்த்தப்பட்டுள்ளது. கரும்பு, நெல் போன்ற பயிர்களுடன் ஒப்பிடும்போது, சிறுதானியங்களைப் பயிரிடக் குறைந்த அளவே நீர் தேவைப்படுகிறது.

சிறுதானியங்கள் ஆரோக்கியமான உணவு எனக் காலத்தால் நிரூபிக்கப்பட்டவை. கடந்த 20, 30 ஆண்டுகளாக அரிசியையே முக்கிய உணவாக ஏற்றுக்கொண்டதனால் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவதைப் பார்த்தோம். உற்பத்தியை ஊக்குவிப்பதோடு நின்றுவிடாமல் பொதுவிநியோகம் (PDS) மூலமாகவும் சிறுதானியங்கள் மக்களைச் சென்றடையவைக்கும் திட்டம் உற்பத்தி, தேவை என்ற இருநிலைகளிலும் சிறந்த பலனைஅளிக்கவல்லது.

மாத உதவித்தொகை

சிறு, குறுவிவாசயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் (PMKSN) இடைநிலை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாத உதவித் தொகையாக 500 ரூபாய் வழங்கும் இத்திட்டம் விவசாயக் கடன் தள்ளுபடிக்கு மாற்றாகக் கருதப்படுகிறது. பல்வேறு புள்ளியியல் விவரங்கள் விவசாயக் கடன் தள்ளுடியில் சுமார் 10-15 % விவசாயிகளே பயனடைகின்றனர் என மதிப்பீடு செய்கின்றன. பணக்கார விவசாயிகளும், விவசாய சார்பு பெருநிறுவனங்களுமே விவசாயக் கடன் தள்ளுடியில் பயனடைகின்றனர் என்பது போன்ற குறைகள் களையப்பட்டது இந்த திட்டம்.

நீண்டகால நோக்கு

இது தவிர வேப்பெண்ணெய் தடவிய உரம் வழங்குதல், பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மண் வள ஆய்வுத்திட்டம் போன்ற வேறு பல திட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயப் பொருளாதாரத்தின் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வு காணும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகக் கருதலாம்.

இந்தியா போன்ற பலமொழிகள் பேசப்படும் ஒரு நாட்டில், திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது, சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுவது இயல்புதான். சரியான அணுகுமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் காலப்போக்கில் அவற்றைச் சரிசெய்ய முடியும் என்று தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x