Last Updated : 01 Feb, 2019 03:25 PM

 

Published : 01 Feb 2019 03:25 PM
Last Updated : 01 Feb 2019 03:25 PM

புதிய பாணி வினாவுக்கும் தயார்! - ஆசிரியர் – மாணவர் - பெற்றோரின் அனுபவப் பகிர்வு

வெற்றிக்கொடி இணைப்பிதழில் ‘தேர்வுக்குத் தயாரா?’ என்ற தலைப்பின் கீழ் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை முந்தைய வாரங்களில் பார்த்தோம். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் தேர்வு செய்யப்பட்ட ஊர்களில், மாணவர், ஆசிரியர், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களை நேரில் சந்தித்து, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் மாணவர்கள் அனுபவங்களை கேட்டறியும் முன்னோடி முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மதுரையில் இதன்பொருட்டு கூடிய அமர்வில் பல்வேறு பயனுள்ள கருத்துக்களை மாணவர்-ஆசிரியர்-பெற்றோர் கூட்டாக வழங்கினர். பாடங்களை திட்டமிட்டு படிப்பதில் உரையாடல் தொடங்கியது.

திட்டமிட்டுப் படிக்கலாம்

மருத்துவக் கல்லூரி மாணவி ஜெ.ஜெஃப்லின் ஹெர்மினி: பாடங்களைப் படிக்கத் திட்டமிடுவதில் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலம் எனப் பிரித்து திட்டமிடுவது நல்லது. உதாரணத்திற்கு ஒரு பாடத்தை முடிக்க அரை நாள் என்று ஒதுக்கும்போதே, அது போன்ற வேறு பல பாடங்களுக்குமாக சேர்ந்து ஒரு வார காலத்தை நீண்ட கால அவகாசமாக திட்டமிடலாம்.

இந்த வகையில் குறுகிய அவகாசமான அரை நாளில் படிக்க முடியாமல் போனாலும், அடுத்தக்கட்ட வாய்ப்பான ஒரு வார அவகாசத்தில் இந்த விட்டுப்போன பாடத்தை முடித்து விடலாம். நமக்கு நாமே போட்டியிட்டு விளையாட்டாகவும் விரைந்து படிக்கவும் இந்த உத்தி உதவும். படிப்பதன் போக்கில் மனம் சோர்வடையவோ, குற்ற உணர்ச்சி கொள்ளவோ வாய்ப்பு வராது.

மாணவர் எம்.ஜீவா: எந்தவொரு பாடத்தலைப்பை எடுத்துக்கொண்டாலும் முழுமையாக படிப்பது அவசியமாகிறது. பாடத்தின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாட அறிமுகம் பகுதியை பெரும்பாலானோர் படிப்பதில்லை. அரையாண்டு வினாத்தாளில் அங்கிருந்தும் வினா கேட்கப்பட்டிருந்தது.

படிப்பது எவ்வளவு முக்கியமோ, அதேயளவு எழுதிப் பார்ப்பதும் முக்கியம். பலரும் படிப்பதிலேயே திருப்தி அடைந்துவிடுவார்கள். என்னதான் படித்திருந்தாலும் அதை எழுதிப் பார்த்தால்தான் புதிய தடுமாற்றங்கள் புலப்படும். எனவே ஒரு கேள்வி பதிலை படிப்பதுடன் எழுதிப் பார்ப்பது மிகவும் அவசியம். அவ்வாறு எழுதியதில் தவறுகள் தென்பட்டால் மறுபடியும் படித்து பழைய தவறுகள் நேராது எழுத முடிவதை உறுதிசெய்த பிறகே அடுத்ததுக்கு செல்ல வேண்டும்.

ஏனெனில் நமது தேர்வு முறையான எழுத்து முறையை அடிப்படையாகக் கொண்டது. பிழையின்றி முழுமையாக எழுத முடிவதே படித்ததை உறுதி செய்யும். திருப்புதல் செய்யும்போதும் முழுவதும் எழுதிப் பார்க்க முடியாது. முக்கிய பகுதிகளை மட்டும் அப்பொது எழுதிப் பார்த்தால் போதும்.

மாணவர் விக்னேஷ்: பாடங்களை படிப்பது எழுதுவதைவிட முந்தைய வருட வினாத்தாள்களில் பயிற்சி பெறுவது அவசியம். இந்த வினாத்தாள்கள் நாம் படித்த லட்சணத்தை சுயமாக உரசிப்பார்க்க உதவும். இந்த மாதிரித் தேர்வுகள் நாம் படித்ததை தேர்வு நோக்கில் முழுமையடையச் செய்வதுடன் பொதுத்தேர்வு குறித்த பதட்டத்தையும், அச்சத்தையும் போக்கும். புதிதாக கேட்க வாய்ப்புள்ள மறைமுக வினாக்களை இந்த முந்தைய வினாத்தாள்களில் இருந்து நாமே உருவாக்கியும் பழகலாம்.

நுழைவுத் தேர்வு பயிற்சியாளர் ஆர்.ஏ.சுகுமார்: படிக்கத் தொடங்கும்போதே பாடங்களைப் பொறுத்து தங்களது பலம் மற்றும் பலவீனமான பாடப் பகுதிகளை மாணவர்கள் அடையாளம் காண வேண்டும். பலம் வாய்ந்த பாடப் பகுதியில் அதிக மதிப்பெண்கள் பெற பயிற்சியை மேலும் தொடரலாம். அதே சமயம் பலவீனமான பகுதியை அலட்சியப்படுத்தாது கூடுதல் நேரத்தை ஒதுக்கி, சந்தேகங்களைப் போக்கிக்கொண்டு அதிலும் தேற முயற்சிக்க வேண்டும்.

தனக்கான பலகீன பாடப்பகுதி குறித்த எச்சரிக்கை உணர்வு தேர்வறை வரை மாணவருக்கு உதவும். அதன் அடிப்படையில் மதிப்பெண்களை இழக்காதிருக்கவும், கடின வினாவை சாய்ஸில் விடவும் இந்தத் தெளிவு உதவும்.   

இயற்பியல் ஆசிரியர் ஜெ.சகாய பிரான்சிஸ் பிரசன்னா: பிளஸ் 2 மாணவர்கள் தங்களது பாடச் சுமை குறித்து கவலைப்படுவார்கள். அடுத்தடுத்து வெவ்வேறு பாடங்களை படிப்பது, பின்னர் அனைத்தையும் சேர்த்துப் படிப்பது என செல்லும்போது குழம்பவும் செய்வார்கள். அடுத்தடுத்த பாடத் தலைப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி படித்தால், படிப்பதிலும் அவற்றை நினைவுகூர்வதிலும் ஒரு ஒழுங்கு பழகும்.

இடையிலிருந்து தேவையான பாடக்கருத்தை உருவி நினைவுகூரவும் இந்த தொடர்புபடுத்தி படிப்பது உதவும். ஒப்பிட்டு படிப்பது, வேறுபடுத்தி படிப்பது, சங்கிலித் தொடராக இணைத்துப் படிப்பது என பலவகையிலும் இந்த தொடர்ச்சியை தங்கள் வசதிக்கேற்ப மாணவர்கள் உருவாக்கிக் கொள்ளலாம். மொத்தப் பாடத்தையும் நினைவுகொள்ள மனவரைபடம் போன்றவை உதவும்.

இந்த தொடர்புபடுத்தல் விரைவான நினைவுகூரலுக்கு உதவுவதுடன் ஒரே மாதிரியான பாடத் தலைப்புகளில் மாணவர்களுக்கு குழப்பம் நேராதிருக்கவும் உதவும்.

வேதியியல் ஆசிரியர் என்.கண்ணன்: பாடத் தலைப்புகளுக்கு இடையே தொடர்புபடுத்திப் படிப்பதுபோல தொடர்புடைய பல்வேறு பாடங்களையும் அடையாளம் கண்டு ஒன்றன் தொடர்ச்சியாக மற்றதை படிக்கலாம். இந்தத் தயாரிப்பு விரைவான படிப்புக்கு உதவுவதுடன், ஒரே மாதிரியான வினாக்களுக்கு இடையிலான நுட்பமான வேறுபாடுகளை அறிந்துகொள்ள உதவும். பாடக்கருத்துக்களை முழுதாகவும், செறிவாக எழுதவும் உதவும்.

என்னைப் பொறுத்தவரை பாடம் நடத்தும்போதே பாடப் புத்தக வரிசையைவிட இந்த வரிசையையே பின்பற்றுவேன். இதனால் அடிப்படை அளவிலேயே மாணவர்கள் தெளிவுபெற்று விடுவார்கள்.

விலங்கியல் ஆசிரியர் ஆர்.ஸ்டெல்லாரூபி: புதிய வினாத்தாள் மாதிரி, மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறனை சோதிக்கும் வகையிலே அமைந்துள்ளது. சென்ற வருடம் வரை மனப்பாடம் செய்தே தேர்வெழுதி பழகிய மாணவர்கள் தற்போது புதிய மாற்றத்தை கடினமாகக் கருகிறார்கள். பாடப்பகுதியில் எதைப் படித்தாலும் அவை சொல்லவரும் கருத்தினை சுருக்கமாக அருகிலேயே எழுதி வைத்துக்கொள்வது இந்த புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த உதவும்.

வினாவினை மாற்றிக்கேட்டாலும் திணறாது பாடக்கருத்தினை எழுத முடியும். இனி வரும் மாணவர்கள் கீழ் வகுப்புகளில் இருந்தே மனன முறைக்கு மாறாக, புரிந்துகொள்வதன் அடிப்படையில் கற்று வருவதால் அவர்களுக்கு பிரச்சினை இருக்காது. இடையில் மாட்டிக்கொண்ட தற்போதைய பிளஸ் 2 மாணவர்கள் மட்டும் புதிய மாற்றத்துக்கு தங்களை தகவமைத்துக்கொள்ள முன்வர வேண்டும்.

கணித ஆசிரியர் எம்.துரைபாண்டி: கணக்குப் பாடம் கடினமாக இருக்கிறது, படிக்க அதிக நேரமாகிறது, படித்தாலும் தேர்வறையில் மறக்கிறது என்ற புகார்களை மாணவர்கள் எழுப்புகிறார்கள். கணக்குப் பாடம் உண்மையில் மற்றப் பாடங்களைவிட எளிமையானது. சுவாரசியமானதும்கூட. புரிந்துகொள்ளாது படிக்க முயற்சிப்பவர்களுக்கே இந்த தடுமாற்றம் தட்டுப்படும்.

அவர்கள் கணக்குப் பாடத்தை அதிகாலையில் படிக்கப் பழகலாம். கணக்கு அடிப்படையிலான இயற்பியல், வேதியியலின் பாடத்தலைப்புகளுக்கும் இது பொருந்தும். சந்தேகங்களை உடனுக்குடன் போக்குவதுடன், சூத்திரங்கள், பாடக் கருத்துக்களை தொடர்புபடுத்தி படிக்கும்போது எளிதில் நினைவில் தங்கும். கணக்கில் தினசரி திருப்புதலை தொடர்வதும் முக்கியம். இந்த முறையை பின்பற்றினால் கணக்குப் பாடம் எளிமையாகும்.

மாணவி ஜிதேந்திரகௌரியின் தந்தை மோகன் இடைமறித்து, “பாதி கணக்கை தீர்க்கும்போதே அதுவரையிலான கணக்கிடல் சரியானதா, பிழையானதா என்பதை தெரிந்துகொள்ள வழியிருக்கிறதா?” என்ற ஐயத்தை எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆசிரியர் துரைப்பாண்டி, “பாடக் கருத்தை புரிந்திருப்பதுடன், கணித அடிப்படைச் செயல்களில் மாணவர்கள் தெளிவாக இருந்தால் கணக்கின் படிநிலைகளில் பெரும்பாலும் தவறு வராது.

மேலும் கணக்குகளை அடிக்கடி போட்டுப்பார்த்து பயிற்சி செய்தவர்களுக்கு, படி நிலைகளில் இடறுவதை உள்ளுணர்வே காட்டிக்கொடுக்கும். அவர்கள் மீண்டும் ஒருமுறை ஆரம்பத்திலிருந்து கணக்கினை சரிபார்த்தால் பிழை பிடிபடும். குழப்பமோ, நேரவிரயமோ ஏற்பட்டால் அந்தக் கணக்கை அப்படியே விட்டு அடுத்த வினாக்களுக்கு சென்றுவிட வேண்டும். தேர்வின் நிறைவாக விட்டுப்போன கணக்கை புதிதாக சரிபார்த்தால் பிரச்சினை புரியும்.

அப்போதும் இடறினால், அந்தக் கணக்கை சாய்ஸில் விட்டு வேறு கணக்கை போடத் தொடங்கலாம். எந்தச் சூழலிலும் தேர்வறையில் ஒரு வினா தொடர்பான தடுமாற்றம் அடுத்த வினாவினை தொற்றாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று விளக்கினார்.

கணினி அறிவியல் மாணவி எம்.ஜிதேந்திர கௌரி: வகுப்பில் எவ்வளவு சிரத்தையுடன் பாடங்களை கவனிக்கிறோ படிப்பது அத்தனை எளிதாகும். உதாரணத்திற்கு கம்யூட்டர் சயின்ஸ் பாடத்தை வகுப்பில் உற்று கவனித்ததை வைத்தே விரைவாக படித்துவிடுவேன். இதனால் நான் சிரமமாக கருதும் இயற்பியல், கணக்குப் பாடங்களை படிக்க கூடுதல் நேரம் கிடைக்கிறது.

பொதுவாக வினாக்களின் அடிப்படையிலே பலரும் பாடங்களை படிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை எந்தவொரு பாடத்தலைப்பானாலும் முழுமையாக படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். உதாரணத்திற்கு கணக்குப் பாடத்தை எடுத்துக்கொண்டால் பயிற்சி, எடுத்துக்காட்டு வினாக்களுக்கு அப்பால் உள்ள பாடப் பகுதியையும் பார்ப்பேன்.

இதனால் வினாவை மாற்றி கேட்டாலோ, புதிதாக ஒரு வினாவை உருவாக்கி கேட்டாலோ தயக்கமின்றி என்னால் பதில் அளிக்க முடியும். மேலும் ஒரு ஃபார்முலா மறந்துபோனால் கூட, பாடக்கருத்துக்களின் அடிப்படையில் அதனை தருவித்து பயன்படுத்த முடியும். புதிய பாணி வினாத்தாளுக்கு இந்த வகையிலான தயாரிப்பு மிகவும் முக்கியம். மேலும் சிலர் முக்கிய வினாக்களாக குறிவைத்து படிப்பார்கள். அந்த வினாவை ஒட்டிய பாடத்தின் பிற பகுதிகள் குறித்து தெளிவில்லாது இருப்பார்கள்.

இதனால் அந்த முக்கியக் கேள்வியையே சற்று மாற்றிக் கேட்டால் தடுமாறிப்போவார்கள். மாறாக என்னுடைய பாணியில் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. அதே சமயம் கடைசிக் கட்ட திருப்புதலின்போது இந்த வகையான சாவகாச படிப்பு உதவாது. அப்போது மட்டும் ஏற்கனவே படித்ததன் அடிப்படையில் முக்கியமான பகுதிகளை குறிவைத்து விரைவாகப் படிக்கலாம்.

இவர் முடித்த ’கடைசிக்கட்ட திருப்புதல்’ என்பதில் அடுத்த சுற்றுக்கான உரையாடல் தொடங்கியது.

இப்போது தொடங்கி எப்படி படிக்கலாம்:

மாணவர் எம்.ஜீவா: இதுவரை ஏதேனும் முக்கியமான பாடப்பகுதியை படிக்காதிருந்தால் அதை படிப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்கவேண்டும். ஏற்கனவே படித்த பாடங்களை திருப்புவதற்கான நேரத்தில் இருந்தும் அதனை பங்கிடலாம். புதிதாக படிப்பதற்கு கூடுதல் நேரம்; பழையதை படிக்க குறைவான நேரம் என்பது இப்போதைக்கு உதவும்.

பெற்றோர் பிரகாஷ்: தான் கடினமாக கருதும் பாடத்தை தினந்தோறும் திருப்புதல் செய்ய குறைந்தபட்ச நேரத்தையேனும் மாணவர்கள் ஒதுக்க வேண்டும். உதாரணத்திற்கு கணக்குப் பாடத்தை தொடர்ச்சியாக திருப்புதல் செய்தால்தான் தேர்வுக்கு உதவும்.

மாணவர் விக்னேஷ்: தேர்வு நெருக்கத்தில் புதிதாக படிக்க முடியாது. அதே சமயம் முக்கிய பாடப் பகுதிகளை தவிர்க்கவும் முடியாது. எனவே இதைக் கணக்கிட்டு தேர்வுக்கு சற்று முன்பாகவே முக்கியப் பாடப்பகுதிகளை திட்டமிட்டு முடித்துவிட வேண்டும். அதிலும் இந்த வருடம் தேர்வுகளுக்கு இடையே விடுமுறை மிகவும் குறைவு என்பதால், அதற்கேற்ப கடைசி நேர திருப்புதலுக்கு இப்போதே அட்டவணை போட்டு ஒவ்வொன்றாக முடித்துவிட வேண்டும்.

பள்ளி முதல்வர் கே.விஜயராகவன்: விக்னேஷ் குறிப்பிட்டது போல முந்தைய வினாத்தாள் அடிப்படையில் தயாராவது சிறப்பான உத்தி. ஆனால், இந்த வருடம் முதல்தான் புதிய வினாத்தாள் மாதிரி வருகிறது என்பதால், அரசு மற்றும் பல்வேறு தரப்பில் வெளியாகி உள்ள மாதிரி வினாத்தாள்களில் பயிற்சி மேற்கொள்ளலாம். கடைசி நேரத்தில் முழுவதுமான மாதிரித் தேர்வு எழுத நேரம் இருக்காது.

எனவே, தெரிந்த வினாக்களை விட்டு, தெரியாத வினாக்களை மட்டும் குறிவைத்துப் படித்து பதில் எழுதிப் பழகலாம். முந்தைய வருட வினாத்தாள்களின் மூலமாக அடிக்கடி கேட்ட வினாக்கள், ஒரே வினா எந்த வகையில் எல்லாம் மாற்றி கேட்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம். புளூபிரிண்ட் இல்லாத தேர்வென்பதால், மாதிரி வினாக்களே நமது திருப்புதலை கூர்மையாக்க உதவும்.

புதிய மாதிரி வினாத்தாளில் கேட்கப்பட உள்ள புதுமையான வினாக்கள் குறித்து மாணவர்கள் அதிகம் கவலைகொள்ளத் தேவையில்லை. முதலில் புத்தகத்திலிருந்து நேரிடையாக கேட்கப்படும் 80 சதவீத வினாக்களுக்கு தயாராக வேண்டும். 20 சதவீத வினாக்கள் குறித்த பதட்டத்தில் 80 சதவீத வினாக்கள் பாதிக்கும் சூழலை தவிர்க்க வேண்டும்.

உழைப்புக்கேற்ற மதிப்பெண்களை சிந்தாது அள்ள விரும்பும் மாணவர்கள் Error Note எனப்படும் குறிப்பேட்டினை பராமரிக்க வேண்டும். வகுப்புத் தேர்வு, திருப்புதல் தேர்வு, வீட்டில் எழுதிப் பார்ப்பது என தேர்வுகள் எதுவானாலும் அதில் வெளிப்படும் தேர்வு சார்ந்த தனது குறைகள் மற்றும் தவறுகளை பட்டியலிட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தடுத்த தேர்வுகளில் இந்தப் பிரத்யேக தவறுகளை தவிர்க்கப் பழக வேண்டும். நன்றாக படிக்கும் மாணவர்களின் விடைத்தாளை ஒப்பிட்டும் தனக்கான தவறுகளை அடையாளம் காணலாம். தவறுகளை அடையாளம் காணத் தொடங்கினாலே அவற்றில் பெரும்பாலனவை நீங்கத் தொடங்கும். மதிப்பெண் சரிவும் ஏற்படாது.   

வேதியியல் ஆசிரியர் என்.கண்ணன்: முதல்வர் ஐயா சொன்னதுபோல 80 சதவீத மதிப்பெண்களை மாணவர்கள் முதலில் உறுதிசெய்ய வேண்டும். அதற்கான தயாரிப்பில் முழுமையாக இறங்கும்போது 20 சதவீத இதர வினாக்களும் குறிப்பிட்ட அளவில் அடங்கிவிடும். மேலும் 80 சதவீத மதிப்பெண் நம்பிக்கையுடன் கிரியேட்டிவ் வினாக்களை பார்க்கும்போது அவற்றை புரிந்துகொள்வதும் எளிதாகும்.

கடைசிக்கட்ட திருப்புதல் மேற்கொள்ளும் மாணவர்கள் இன்றிலிருந்து தேர்வுக்கு எத்தனை நாள் இருக்கிறது, அதில் ஒரு பாடத்திற்கு எத்தனை நாள் ஒதுக்க முடியும், அதிலும் கடினமான பாடத்திற்கு கூடுதலாகவும் எளிமையான பாடத்திற்கு சற்றுக் குறைவாகவும் என திட்டமிட்டு படிக்கத் தொடங்க வேண்டும்.

இந்தத் தயாரிப்பு முதலில் தேர்வு பயத்தை போக்கி தெளிவைத் தரும். பெரும்பாலான தேர்வுகளுக்கு ஒரேயொரு நாள் மட்டுமே விடுமுறை உள்ளது. அந்த அவகாசத்தில் முழு பாடத்தை திரும்ப வாசிக்க கூட போதாது. எனவே முக்கியக் குறிப்புகள், வரையறைகள், படங்கள், சூத்திரங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டே திருப்புதலை கொண்டு செல்ல முடியும். மனவரைபடம் அடிப்படையிலான திருப்புதல் குழப்பம் தவிர்க்கும்.

பள்ளி முதல்வர் விஜயராகவன்: பத்தியாக படிப்பதைவிட இம்மாதிரி மனவரைபடம் அடிப்படையில் திருப்புதல் மேற்கொள்வது குறைந்த நேரத்தில் அதிக பாடங்களை படிக்க உதவும். முக்கியமான பெயர்கள், கருத்துக்கள், விதிகளை சுருக்கமாக எழுதிப் பார்ப்பது, அவசியம்.

மாணவி நேதா டாலி க்ரேஸ்: அப்படி எழுதிப் பார்ப்பதுடன் அதிலிருந்து தனது தவறுகளை அடையாளங்கண்டு, அடுத்த தேர்வில் அவை களையப்படும் வரை எழுதிப் பார்ப்பதை தொடர வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் ஒரு சில கேள்விகளுக்கு முழுவதுமாகவும், சில கேள்விகளுக்கு அரைகுறையாகவும் படித்திருப்பார்கள். நேரம் ஒதுக்கி இந்த அரைகுறையில் முக்கியமான பகுதிகளை இப்போது படித்துவிடலாம்.

தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் உதவுவது குறித்து உரையாடல் திரும்பியது:

பெற்றோர் எப்படி உதவலாம்?

பெற்றோர் இ.தியோ பிரகாஷ்: தேர்வு நெருக்கம் தரும் அழுத்தத்தில் பிள்ளைகளின் உறக்கம், சாப்பாடு போன்றவற்றில் ஒழுங்கு தவறும். பெற்றோர் அதனை கண்காணித்து முறைப்படுத்தினால், மாணவர்கள் தங்களின் உழைப்புக்கு உரிய பலனைப் பெறுவார்கள்.

கௌரியின் தந்தை ஜி.மோகன்: என் மகளின் பள்ளி நேரம் காலை 8 முதல் மாலை 6 மணி வரை இருக்கும். அதன் பின்னரும் நுழைவுத் தேர்வு தயாரிப்புக்கான வகுப்புகள் அவருக்கு காத்திருக்கும். இதனால் சில சமயம் வீட்டில் படிக்க முடியாது தூங்கிவிடுவார். நாங்களும் தொந்தரவு செய்ய மாட்டோம். ஆனால் தன்னால் முடிந்த நேரத்தில் படிக்க அமர்ந்ததும், அந்த சொற்ப நேரத்தில் மனதைக் குவித்து விரைவாக படித்துவிடுவார்.

டிவி, செல்போன் கவனச் சிதறல் இன்றி அவர் முழுமையாக படிக்க எங்களால் ஆன உதவிகளை செய்துவிடுவோம். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது போதிய ஓய்வின்றி ஏனோதானோவென்று நீண்ட நேரம் படிப்பதை விட, களைப்பின்றி குறைவான நேரம் படித்தாலே பாடங்களை வெற்றிகரமாக முடித்துவிடலாம். 

ஆர்.ஏ.சுகுமார்: மாணவர்களை மன அழுத்தம் பாதிக்காது பெற்றோர்கள் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். அதற்கான வீட்டுச் சூழலில் கவனம் செலுத்துவதுடன், முதலில் தங்களால் மாணவர்களுக்கு மனச்சோர்வும் நெருக்கடியும் நேராது உதவ வேண்டும். அவசியமெனில் மன அழுத்தம் போக்குவதற்கான ஆலோசகர் உதவியை நாடவும் தயங்கக் கூடாது.

நுழைவுத் தேர்வுக்கு தயாராவது

பெற்றோர் பிரகாஷ்: என்னுடைய மகன் வருடத்தின் தொடக்கத்திலிருந்தே நீட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகளை பெற்று வருகிறார். இதரப் பாடங்களில் ஒன்றாக நீட் தயாரிப்பையும் தினசரி நேரம் ஒதுக்கி படித்து வந்தார். ஆனால் பள்ளியில் திருப்புதல் தேர்வுகள் தொடங்கியதிலிருந்து நீட் தயாரிப்புகளை ஒதுக்கிவிட்டு, பொதுத்தேர்வுக்கு மட்டுமே கவனம் செலுத்த வைக்கிறோம். பொதுத்தேர்வு முடிந்ததும் முழுமையாக நீட் தயாரிப்பில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதனால் இரண்டு தேர்வுகளும் ஒன்றை மற்றொன்று பாதிக்காது.

மாணவி எம்.ஜிதேந்திரகௌரி: ஐ.ஐ.டி, என்.ஐ.டி பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகிறேன். பிளஸ் 2 பொதுத்தேர்வையும் நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்பையும் ஒன்றாக மேற்கொள்ளவில்லை. பிளஸ் 2 முடித்த பிறகு தனியாக அதற்கென்று பயிற்சி பெறப்போகிறேன். இதனால் பிளஸ் 2 தேர்வில் என்னால் அதிக மதிப்பெண்களை எடுக்க முடியும். அந்த நம்பிக்கை நுழைவுத் தேர்வுக்கும் உந்துதலாய் அமையும்.

கிரியேட்டிவ் வினாக்களை எதிர்கொள்வது எப்படி?

ஆசிரியர் பிரசன்னா: செய்முறை பயிற்சிகள் மற்றும் தேர்வுகளுக்குத் தயாராவதை கிரியேட்டிவ் வினாக்களுக்கான தயாரிப்பாகவும் திட்டமிடலாம். நடைமுறை பயன்பாடுகள், கருத்துக்கள், விளைவுகள் சார்ந்தே கிரியேட்டிவ் வினாக்கள் கேட்கப்படுவதால், அந்த பாடக் கருத்துக்களுடன் தொடர்புடைய செய்முறைப் பயிற்சியின்போது தங்களது புரிந்துகொள்ளலை மேலும் விரிவு செய்ய முடியும்.

ஆர்.ஏ.குமார்: பாடத்தின் எந்தப் பகுதியையும் ஒதுக்காது வாசித்து பாடக் கருத்தினை உள்வாங்க வேண்டும். மாணவர் ஜீவா குறிப்பிட்டதுபோல பாடத்தின் தொடக்கத்திலுள்ள அறிமுகம் பகுதியை பெரும்பாலானவர்கள் கவனிப்பதில்லை. பாடத்தை புரிந்துகொள்ள அதுவே நல்லத் தொடக்கமாக அமையும். அங்கிருந்தும் வினாக்களை உருவாக்கி கேட்க வாய்ப்புண்டு. இந்த வகையில் ஒவ்வொரு பாடத் தலைப்பின் கீழும் ஏராளமான வினாக்களை தொகுத்து அதில் தேர்வுக்குத் தயாராகலாம்.

ஆசிரியர் ஆர்.ஸ்டெல்லாரூபி: ஒரு வினாவுக்கான விடையை படிப்பதுடன் அந்த வினாவினை வேறு எவ்வாறெல்லாம் கேட்க வாய்ப்புண்டு என்றும், அந்த விடையிலிருந்து வேறெந்த வினாக்களை எழுப்பலாம் எனவும் மாணவர்கள் கலந்து பேசி படிக்கலாம். ஆசிரியர் மேற்பார்வையில் வகுப்பறையிலோ, தனித்து நண்பர்களாகவோ கூடியமர்ந்து படிப்பின் போக்கில் இதையும் விவாதித்தபடி செல்லலாம்.

பொதுத் தேர்வுடன் நுழைவுத் தேர்வுக்கும் தயாராகும் மாணவர்கள் இன்னொரு உத்தியை பரிசீலிக்கலாம். தங்கள் வசமிருக்கும் முந்தைய வருடங்களின் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள்களை பார்வையிட்டால், இந்த 20 சதவீத வினாக்கள் எப்படியெல்லாம் கேட்க வாய்ப்புண்டு என்பதை புரிந்துகொள்ள முடியும்.

மாணவி எம்.ஜிதேந்திர கௌரி: எங்கள் வகுப்பில் கிரியேட்டிவ் வினாக்களை குறிவைத்து விளையாட்டு அடிப்படையில் தயாராகிறோம். ஒரு பாடத்தை ஆசிரியர் நடத்தி முடித்ததும், அதன் உள்தலைப்புகளுக்கு ஏற்ப வகுப்பை அணியாக பிரித்து விடுவோம். அடுத்தநாள் அந்தத் தலைப்பில் நாங்களாக உருவாக்கிய புதுப்புது கேள்விகளை எதிரணி மீது வீசுவோம். அவர்களும் இதேப்போல பதிலடி வினாக்களை கொடுப்பார்கள்.

பாடத்தை கவனித்த சூட்டிலும், விளையாட்டில் வெல்ல வேண்டும் என்ற வேகத்திலும் அனைவரும் புகுந்து விளையாடுவோம். அதன் பிறகு வழக்கமான தேர்வுக்கான படிப்பில் இறங்குவோம். இதன்மூலம் புத்தக வினாக்களுடன், புதிய கிரியேட்டிவ் வினாக்களும் எங்களுக்கு அத்துப்படியாகி விடும். படிப்பு போரடிக்கும்போது அல்லது சோர்வாக உணரும்போது இம்மாதிரி ஜாலியாக படிக்கலாம்.

மருத்துவ மாணவி ஜெ.ஜெஃப்லின் ஹெர்மினி: இந்த கிரியேட்டிவ் பாணியிலான படிப்பே உயர்கல்வியில் உதவும். பிளஸ் 2-வில் மனப்பாடம் செய்த ’டாப்பர்ஸ்’ பலரும் மருத்துவப் படிப்பில் தடுமாறுகிறார்கள். புரிந்துகொண்டு படித்தவர்கள், உயர் கல்வியிலும் சாதிக்கிறார்கள். எனவே கிரியேட்டிவ் முறையிலான பாடத் தயாரிப்பை மாணவர்கள் சுமையாக கருதாது விரும்பி படிப்பது எதிர்காலத்துக்கும் உதவும்.    

பள்ளி முதல்வர் கே.விஜயராகவன்: பாடத்தை அவ்வப்போது முழுமையாக வாசித்துப் பழகினால் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்களை அடையாளம் காண முடியும். ஆனால் இதற்கு தனியாக நேரம் ஒதுக்க முடியாது. அந்தச் சூழலில் முதல் வாசிப்பை அப்படியே செல்போனில் பதிவு செய்துகொண்டால், அடுத்த முறைகளில் ஓய்வு நேரத்தில், தூக்கத்திற்கு முன்பு, பள்ளிக்கு கிளம்பும் போதெல்லாம் அதை ஒலிக்கச் செய்து பலனடையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x