Last Updated : 24 Feb, 2019 10:05 AM

 

Published : 24 Feb 2019 10:05 AM
Last Updated : 24 Feb 2019 10:05 AM

வண்ணங்கள் ஏழு 43: சுபிக்‌ஷா என்றால் ஓய்வில்லாப் போராட்டம்!

‘என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்’ என்பது பைபிள் வாசகம். ‘என் சமூகம் அறக்கட்டளை’ என்னும் பெயரிலேயே கோயம்புத்தூரில் அறக்கட்டளையைத் தொடங்கி, திருநங்கை கள் சமூகம் முன்னேறுவதற்குப் பலவிதங் களிலும் காரணமாக இருப்பவர் சுபிக்க்ஷா.

கோவை மாவட்டத்தில், ‘உழைக்க வேண்டும்; என் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தால் போதும். எந்த வேலையாக இருந்தாலும் சரி பொய் சொல்லக் கூடாது. பாலியல் தொழிலில் ஈடுபடக் கூடாது’ என்ற முடிவோடு இருக்கும் திருநங்கைகளுக்கு ஆட்டோ ஓட்டுதல் உட்படப் பலவிதமான பணி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறார் சுபிக்‌ஷா.

 “என்னைத் திருநங்கைகளுக்கு மட்டுமே உதவுபவராகப் பார்க்காதீர்கள். சமூகத்துக்கு என்னால் முடிந்த அளவுக்குப் பயனுள்ள விஷயங்களைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அதில் முதன்மையாக நான் சார்ந்திருக்கும் திருநங்கை சமூகத்துக்கும் பொதுச் சமூகத்துக்கும் பாலமாக இருந்து அவர்களுக்கான உதவிகளைச் செய்துவருகிறேன்” என்கிறார் சுபிக்‌ஷா.

தமிழக அரசின் நலவாரிய உறுப்பினர் மற்றும் தென்னிந்திய திருநங்கைக் கூட்டமைப்பின் இணைச் செயலாளரான இவர், திருநங்கைகளின் கல்வி, வேலை வாய்ப்பு மேம்பாட்டுக்காக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துவருகிறார். மத்திய அரசு கொண்டுவந்த திருநங்கை மசோதா 2016-ஐ எதிர்த்து நாடாளுமன்ற நிலைக்குழு வரை சென்று பலகட்டப் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்.

மேலும், இந்த மசோதாவால் திருநங்கைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற தங்களது கருத்தை மத்திய அரசுக்குத் தொடர்ந்து பல வழிகளில் வலியுறுத்திவருகிறார். கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி நடத்தப்படும் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியை ஒருங்கிணைத்து வருகிறார்.

மாவட்டம் தோறும் இருக்கும் திரு நங்கைகளின் (ஜமாத்) தலைவிகளுக்குச் சட்ட ஆலோசகராகச் செயல்படுகிறார். திருநங்கை களுக்குக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கி இந்தியாவின் முன் மாதிரி மாநிலமாகத் தமிழகம் விளங்க வேண்டும் என்பதை நலவாரிய உறுப் பினர் என்ற முறையில் தமிழக அரசுக்கு வைக்கும் கோரிக்கை யாகக் குறிப்பிடுகிறார் சுபிக்‌ஷா.

கடந்தாண்டு கோவையில் இவர் களது அமைப்பின் மூலம் திருநங்கைக்கான அடையாள அட்டை 86 பேருக்கு வழங்கப் பட்டது. திருநங்கைகளுக்குத் தமிழக அரசு வழங்கும் சுய வேலைவாய்ப்புக்கான ஊக்கத் தொகையை (ரூபாய் 20 ஆயிரம்) 15 பேருக்கு இவர் பெற்றுக் கொடுத்துள்ளார்.

மேலும், அரசு சாரா அமைப்புடன் இணைந்து திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்கித் தருவதுடன் சமையல் சார்ந்த பணி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். சில திருநங்கைகள் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டி ருக்கின்றனர். உயர் கல்வி படிப்பதற்கும் அறக் கட்டளை சார்பாகச் சில திருநங்கைகளுக்கு இவர் உதவிவருகிறார்.

திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக இந்தியாவின் பிற மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களிலும் சுபிக்‌ஷா தவறாமல் பங்கெடுத்துவருகிறார். தொடர்ச்சியான போராட்டங்கள், செயல்பாடுகள் குறித்துக் கேட்டால், “நமக்கான உரிமையை வேறு எப்படித்தான் பெறுவது?” எனக் கேட்கிறார் சுபிக்‌ஷா.

திருநங்கையின் மரணம் செய்தி இல்லையா?

vannam-4jpg

தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜாத்தி எனும் திருநங்கையை மருது என்னும் இளைஞர் கொடூரமாகக் கொன்ற சம்பவம் அண்மையில் நடந்தது.

வெகு சொற்பமான நாளிதழ்களும்  ஊடகங்களுமே இந்தச் செய்தியை வெளி யிட்டன. பெரும்பான்மையான ஊடகங்களால் ஒரு செய்தியாகக்கூட ஒரு திருநங்கையின் மரணத்தைக் கடந்துபோக முடியவில்லை என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் கிரேஸ் பானு.

அந்த முகநூல் பதிவிலிருந்து சில வரிகள்:

“ஒரு திருநங்கையைக் கோயிலுக்குள் நுழைந்து கொடூரக் கொலை செய்திருக் கின்றன ஆணாதிக்க வெறி பிடித்த சில மிருகங்கள். இங்கே இறந்தவள் ஒரு திருநங்கை என்பதால் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவோ குறைந்தபட்சம் அந்தச் செய்தியைப் பற்றி அறிந்துகொள்ளவோகூடத் தயாரின்றி கடந்துசெல்லும் உங்கள் கள்ள மௌனத் தீண்டாமைக் கொடுமையை எம் பாலினத்தோர் இன்னும் எத்தனை நாள்தான் சுமப்பது?

மானுட வேடம் பூண்டோரே... உங்களுடன் அனைத்துப் போராட்டக் களங்களிலும் பயணிக்கும் நாங்களும் மனிதர்களே! எமக்கு ஒரு அநீதி நிகழும்போது வேடிக்கை பார்த்து மௌனத் தீண்டாமையைப் பரிசளிக்கும் உங்களின் பாலாதிக்கப் புத்தி உலக அருவருப்புகளில் முதன்மையானது”.

இது குறித்து கிரேஸ் பானுவிடம் கேட்டபோது, “அகாலத்தில் மறைந்த திருநங்கைகள் நினைவு நாளை நவம்பர் மாதத்தில் அனுசரிக்கிறோம். தாரா தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் திருநங்கைகளின் அகால மரண எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. திருநங்கைகளின் இப்படிப்பட்ட அகால மரணங்களுக்கு எதிராகச் சட்டபூர்வமான நடவடிக்கைகள் கடுமையாக இருக்க வேண்டும்” என்றார்.

 

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x