Last Updated : 13 Feb, 2019 10:21 AM

 

Published : 13 Feb 2019 10:21 AM
Last Updated : 13 Feb 2019 10:21 AM

புத்தக அறிமுகம்: நேசிப்போம்; வாசிப்போம்!

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

அதிகம் அறியப்படாத விஷயங்களை மிக எளிமையாகவும் சுவாரசியமாகவும் சொல்கின்றன இந்தத் தொகுப்பில் உள்ள 54 கட்டுரைகள். ‘இறந்த காலத்துக்கு உயிர் உண்டா?’, ‘உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா?’, ‘பெஞ்சமின் ஏன் இப்படி இருக்கிறான்?’, ‘அங்குலிமாலா கதை’, ’கணக்கு பூதம்’, நட்சத்திரங்களுக்குப் பசித்தால் என்ன செய்யும்?’, ‘அரிஸ்டாட்டில் என்ன சொன்னார்?’, ‘தந்தத்தில் வளர்ந்த மான்’ போன்ற அனைத்துக் கட்டுரைகளும் ஏற்கெனவே வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவை. மாயாபஜாரில் ‘இடம் பொருள் மனிதர் விலங்கு’ என்ற தலைப்பில் வெளிவந்தவை.

மருதன், 184 பக்கங்கள், ரூ. 200/-, கிழக்கு பதிப்பகம், தொடர்புக்கு: 044 4200 9603.

book-1jpg100 

நட்சத்திரக் கண்கள்

‘மாயாபஜா’ரில் வெளிவந்த ’உப்பளத்துக்கு வந்த வெள்ளை யானை’, ’நீ என்ன ஆகப் போறே?’, ‘கோதையின் கதை முட்டைகள்’, ‘இறக்கை கிழிந்த வண்ணத்துப்பூச்சி’, ‘நட்சத்திரக் கண்கள்’ போன்ற கதைகளோடு இன்னும் பல கதைகள் சேர்த்து தொகுப்பாக வந்திருக்கிறது இந்த நூல். ஒவ்வொரு கதைக்கும் முழுப் பக்கப் படமும் ஓர் அறிவியல் உண்மையும் கொண்ட இந்தப் புத்தகம் சிறுவர்கள் வாசிக்க ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது.

கொ.மா.கோ. இளங்கோ, 96 பக்கங்கள், ரூ. 80/-, புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044 2433 2924.

 

குழந்தைகளுக்கு நல்ல கதைகள் -2

தேங்காயை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்லும் வியாபாரி வழியில் ஒரு சிறுவனிடம், “நல்லூர் செல்ல எவ்வளவு நேரமாகும்?” என்று கேட்கிறார். அவனோ, “வேகமாகச் சென்றால் இரண்டு மணி நேரமாகும். மெதுவாகச் சென்றால் ஒரு மணி நேரமாகும்” என்கிறான். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. வேகமாகச் செல்கிறார். சாலை சரியில்லாததால் தேங்காய்கள் கீழே விழுகின்றன. அவற்றை எடுத்துப் போட்டுக்கொண்டு செல்ல இரண்டு மணி நேரமாகிவிட்டது! பெரிய எழுத்துகளில், வழவழப்பான தாளில், கண்கவர் வண்ணப்படங்களுடன் குழந்தைகளுக்கு ஏற்றவாறு  12 சிறிய கதைகள் இதில் இருக்கின்றன.

ஏ, சோதி, 40 பக்கங்கள், ரூ. 80/-, நன்மொழிப் பதிப்பகம், தொடர்புக்கு: 93454 50749.

book-2jpg100 

தமிழ் அறிஞர்கள்

தொல்காப்பியத் தமிழை இன்றைய காலத்துக்கு ஏற்ற வகையில் வளர்த்தெடுத்து, செழுமைப்படுத்தியவர்கள் தமிழ் அறிஞர்கள். இலக்கியம், வரலாறு, தத்துவம், இறையியல் என்று ஒவ்வொரு துறையிலும் தமிழ் செழித்து வளர்ந்திருப்பதற்குக் காரணம் இந்தத் தமிழ் அறிஞர்களே! உ.வே.சா, பாரதியார், பாரதிதாசன்,

ஜி.யு.போப், கால்டுவெல், மறைமலை அடிகளார், பரிதிமாற் கலைஞர், திரு.வி.க, ரசிகமணி டி.கே.சி, மு. வரதராசனார், ம.பொ.சி, கி.வா. ஜகந்நாதன், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை, மு.மு. இஸ்மாயில் என்று 36 தமிழ் அறிஞர்களைப் பற்றி அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.

ஜனனி ரமேஷ், 440 பக்கங்கள், ரூ. 500/-, கிழக்கு பதிப்பகம், தொடர்புக்கு: 044 4200 9603.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x