Published : 24 Feb 2019 10:06 am

Updated : 24 Feb 2019 10:06 am

 

Published : 24 Feb 2019 10:06 AM
Last Updated : 24 Feb 2019 10:06 AM

பெண்கள் 360: ஓவியமே துணை

360

ஓவியமே துணை

ஜெர்மனியின் பிரசித்திபெற்ற ஓவியர் கேப்ரியலா முண்டர், எக்ஸ்பிரஷனிஸம் ஓவியப் பாணியின் முன்னோடிகளில் ஒருவர். 1877 பிப்ரவரி 19-ல் பெர்லினில் பிறந்தார். குழந்தையாக இருந்தபோதே கையில் தூரிகையைப் பிடித்துவிட்டார். ஓவியத்தோடு சேர்த்து பியானோவையும் பயின்றார். 21 வயதில் பெற்றோரை இழந்தார். செல்வச் செழிப்பு மிகுந்த குடும்பம் என்பதால், ஏராளமான சொத்துகளுக்கு வாரிசானார்.

doodle-2jpg

அபரிமிதமான செல்வம் அவருக்கு பெரும் துணிவையும் உறுதியான நம்பிக்கையையும் வழங்கியது. தனிமையில் வாடிய அவருக்கு ஓவியமே துணையானது. 22 வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார். அந்தப் பயணமே அவரது வாழ்வின் திருப்புமுனை. அவருக்குள் உருவான பெண்ணியச் சிந்தனைகளுக்கும் சுதந்திர தாகத்துக்கும் அந்தப் பயணமே அடித்தளம். அமெரிக்காவில் ஈராண்டுகள் வசித்தார்.

மனிதர்களையும் செடிகளையும் நிலப்பரப்புகளையும் ஓவியமாக வரைந்து குவித்தார். அவரது ஓவிய வாழ்வின் உச்சம் என்று அதைச் சொல்லலாம். ‘போர்ரெய்ட் ஆஃப் யங் வுமன்’, ‘ரெட் கிளவுட்’ போன்ற அவரது ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை. பெண்களை அவர் அளவுக்குத் தத்ரூபமாக வரைந்தவர் யாருமில்லை. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக பிப்ரவரி 19 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

மருத்துவத் துறையின் மைல் கல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டி ருந்த  27 வயது கேரளப் பெண்ணுக்குக் கருப்பையையும் ஒரு சினைப்பையையும்   நீக்கிவிட்டனர். மற்றொரு சினைப்பையை அறுவை சிகிச்சை செய்து, வயிற்றின் வலப்புறப் பகுதிக்கும் தோலுக்கும் இடையே பொருத்தியிருந்தனர். இந்நிலையில் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். அவருக்கு இருந்த ஒரு சினைப்பையில் ஊசி மூலம் கருமுட்டையை மருத்துவர்கள் வளரச்செய்தனர்.

அதை அந்தப் பெண்ணின் கணவரது விந்தணுவுடன் சோதனைக் குழாய் முறையில் இணையச் செய்து, வாடகைத் தாயின் கருப்பையில் வைத்தனர். கடந்த 16-ம்தேதி பெண் குழந்தை பிறந்தது. கருமுட்டையைப் பெண்ணின் வலப்புற வயிற்றுப்பகுதியின் தோல் வழியே உறிஞ்சி எடுத்தது பெரும் சாதனை எனவும் இப்படிச் செய்தது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை எனவும்  பெருமிதமாகக் கூறினார் இந்த சிகிச்சையை மேற்கொண்ட மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்.

mannippujpgright

மன்னிப்பு கிடையாதா?

அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹூடா முதானா. இவர் 2014-ல் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தார். ஐ.எஸ்.ஸிடமிருந்து தப்பி வெளியேறிய அவர், “அந்த அமைப்பில் சேர்ந்தது தவறுதான். என் மகனுடன்  தாய்நாட்டுக்குச் செல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். ஆனால், அவரை மீண்டும் அமெரிக்காவுக்குள் அனுமதிக்க முடியாது என்று ட்ரம்ப் தலைமையிலான அரசு தெரிவித்தது.

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ கூறும்போது, “முதானா அமெரிக்கக் குடிமகள் இல்லை. அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை. நாங்கள் அவரை அமெரிக்காவில் அனுமதிக்க முடியாது. அவரிடம் அதிகாரபூர்வமான பாஸ்போர்ட்கூட இல்லை” என்று தெரிவித்தார். ஆனால், முதானாவின் உறவினர்கள் அவர் அமெரிக்காவில்தான் பிறந்தார் என்றும் அவரிடம் முறையான பாஸ்போர்ட் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

லாரெஸ் விருது பெற்ற யுவா

மொனாக்கோவைச் சேர்ந்த ‘லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி’,  விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு விருது வழங்கிக் கவுரவித்துவருகிறது. இந்த விருதுகள் 2000-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது கடந்த திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இதில் விளையாட்டுக்கான நல்லெண்ண விருதுக்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ‘யுவா’ என்ற தன்னார்வ அமைப்பு தேர்வு செய்யப்பட்டது.

2009 முதல் செயல்பட்டுவரும் இந்த அமைப்பின் மூலம் 450 வீராங்கனைகள் கால்பந்துப் பயிற்சி பெற்றுள்ளார்கள். இந்த அமைப்பு, ஊரகப் பகுதியில் உள்ள கால்பந்து வீராங்கனைகளை அடையாளம் கண்டு பயிற்சி அளித்து, அவர்களது திறமையை வளர்த்துவருகிறது. இந்த அமைப்பின் மூலம் பயிற்சி பெற்ற ஹேமா, நீதா, ராதா, கோனிகா ஆகியோர் விருதைப் பெற்றுக்கொண்டனர். இந்தியாவைச் சேர்ந்த அமைப்புக்கு இந்த விருது கிடைப்பது இது மூன்றாவது முறை.

எண்ணமும் சொல்லும்: நல்லெண்ணத்தை விதைப்போம்

Kalki koechlin எனும் என் பெயரை காக்லின், கோச்லின், கோ-எக்லின் என்றெல்லாம் உச்சரிக்கிறார்கள்.  ஆனால், அதை கல்கி கேக்லா என்று உச்சரிப்பதே சரியான முறை.

kalkijpg

என் பெற்றோர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும், நான் மனத்தளவில் இந்தியக் குடிமகளாகவே இருந்தேன். சிறு வயதில் நண்பர்களுடன் விளையாடும்போது, வெளிநாட்டவர்களைப் பார்த்து ‘ஏய் வெள்ளைக்காரனைப் பாரு’ என நானும் கத்தியிருக்கிறேன்.

ஆனால், நான் வளர்ந்த பிறகு மற்றவர்களால் நானும் வெளிநாட்டவராகப் பார்க்கப்பட்டது எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. முடியை ஆண்கள் போல் கத்தரித்துக்கொண்ட பிறகும் எனக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என்னைப் பொறுத்தவரையில் போகிறபோக்கில் சொல்லும் சாதாரணச் சொற்களே மிகவும் மோசமான பாலியல் அத்துமீறல்.

பெண்களை ஒடுக்க முயலும் ஆணாதிக்கச் சிந்தனையை இந்தத் தலைமுறையினரிடம் இருந்து அகற்ற முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், வருங்காலத் தலைமுறையினரிடம் இருந்து அந்த எண்ணத்தை அகற்ற முடியும். அதை அவர்கள் மனத்தினுள் இன்றே நாம் விதைக்க வேண்டும்.

- கல்கி கேக்லா நடிகை, இயக்குநர்.


பெண்கள் 360கூகுள் டூடுல்நாட்டு நடப்புபொது அறிவு தகவல்ஓவியமே துணைகேப்ரியலா முண்டர்மருத்துவத் துறை மைல் கல்புற்றுநோய் பாதிப்பு கமலா செல்வராஜ்ஹூடா முதானாலாரெஸ் விருது லாரெஸ் உலக விளையாட்டு அகாடமிவிளையாட்டுக்கான நல்லெண்ண விருதுயுவா தன்னார்வ அமைப்பு எண்ணமும் சொல்லும்Kalki koechlin கல்கி கேக்லா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author