சேதி தெரியுமா? - 3,00,000 புதிய விண்மீன் கூட்டங்கள் கண்டுபிடிப்பு
பிப்ரவரி 19: லோஃபர் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் புதிய விண்மீன் கூட்டங்களைக் கண்டுபிடித்திருக்கிறது. லோஃபர் கண்டுபிடிப்பில் உருவாக்கப்பட்ட புதிய வரைபடம், ‘அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ்’ இதழில் வெளியானது. 18 நாடுகளைச் சேர்ந்த 200 வானியலாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 3,00,000 புதிய விண்மீன் கூட்டங்களைக் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்தனர்.
கட்டணம் நிர்ணயிக்க முடியாது
பிப்ரவரி 20: நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாகக் கருதப்படும் (Deemed Universities) கல்வி நிறுவனங்களுக்குக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமையில்லை என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் 2019 விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு அமைக்கும் கட்டண நிர்ணய குழுக்கள்தாம் இனி ‘நிகர்நிலை’ பல்கலைக்கழகங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும். பொறியியல், மருத்துவப் பாடத்திட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5,8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு இல்லை
பிப்ரவரி 22: 1 முதல் 8-ம் வகுப்புவரை, மாணவர்களைக் கட்டாய தேர்ச்சி செய்யும் முறை அமலில் இருந்து வந்த நிலையில் தமிழ்நாடு அரசு, இந்தக் கல்வியாண்டிலிருந்தே 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தவிருப்பதாக முன்பு அறிவித்திருந்தது.
இந்த நடவடிக்கையால் கிராமப் புற மாணவர்களின் இடை நிற்றல் அதிகரிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டி கல்வியாளர்கள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் ஆகியோர் எதிர்த்தனர். இந்நிலையில், நடப்பாண்டில் இந்த மாற்றம் அமலுக்கு வராது என்று தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
உலகின் மிகவும் விலையுயர்ந்த தேர்தல்
பிப்ரவரி 22: 2019 பொதுத் தேர்தல், இந்திய வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த தேர்தலாக மட்டுமல்லாமல் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் நடக்கும் மிகவும் விலையுயர்ந்த தேர்தலாகவும் இருக்கும் என்று அமெரிக்க நிபுணர் மிலன் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் செலவு ரூ. 35,000 கோடியாக இருந்தது. தற்போது நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் செலவு இதைவிட இருமடங்கு அதிகமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 2019 பொதுத் தேர்தல் செலவு ரூ. 70,000 கோடியாக இருக்கும் என்று இவர் கணக்கிட்டுள்ளார்.
மாணவர்களைப் பாதுகாக்க உத்தரவு
பிப்ரவரி 22: புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, நாட்டின் பத்து மாநிலங்களில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீர் மாணவர்களை இந்தத் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பியது. இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானியக் குழு, நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகத் துணை வேந்தர்களுக்கு காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி அறிக்கை அனுப்பியிருக்கிறது.
