Last Updated : 02 Feb, 2019 12:08 PM

 

Published : 02 Feb 2019 12:08 PM
Last Updated : 02 Feb 2019 12:08 PM

எகிறும் புற்றுநோய்

நாளுக்குநாள் புற்று நோயாளி களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிய புற்று நோயாளிகளாகப் பதிவு செய்து கொள்வதாகத் தேசியப் புற்றுநோய்த் தடுப்பு, ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2018-ம் ஆண்டில் மட்டும் 7,88,821 பேர் புற்றுநோயால் உயிரிழந்திருக்கிறார்கள்.

இவர்களில் ஆண்கள் 4,13,519; பெண்கள் 3,71,302. வாய், நுரையீரல், இரைப்பை, குடல், உணவுக்குழாய் புற்றுநோயால் ஆண்கள் அதிகம் உயிரிழந்திருக்கிறார்கள். மார்பகம், வாய், கருப்பை வாய், நுரையீரல், இரைப்பைப் புற்றுநோயால் பெண்கள் அதிகம் உயிரிழந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

 

மூளைக்கும் வந்தாச்சு பேஸ்மேக்கர்

இதயத் துடிப்பைச் சீராக்க பேஸ்மேக்கர் கருவி பயன்படுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது மூளைக்கான பேஸ்மேக்கர் கருவி ஒன்றை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருவிக்கு ‘வாண்ட்’ (Wand) என்று பெயரிட்டுள்ளார்கள். ‘வயர்லெஸ் ஆர்டிஃபேக்ட்-ஃப்ரீ நியூரோ மாடுலேஷன் டிவைஸ்’ என்பதன் சுருக்கம்தான் ‘வாண்ட்’.

இந்தக் கருவி மூளையில் நடக்கும் ஒழுங்கற்ற மின்னோட்டச் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் மூளையின் மின்னோட்டத்தைத் தூண்டவும் பயன்படுகிறது. இந்தக் கருவி ஒரே நேரத்தில் மூளையில் மின்னோட்டத்தைத் தூண்டவும் மின் சமிக்ஞைகளைப் பதிவுசெய்யவும் உதவும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வலிப்பு, பார்கின்சன் நோய்க்கான சிகிச்சை முறையைச் சிக்கல் இல்லாமல் மேற்கொள்ள இந்தக் கருவி உதவும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

 

உடல்பருமனைக் குறைக்கும் லவங்கம்

udaljpg100 

உணவில் சுவைக்கும் நறுமணத்துக்கும் பயன்படுத்தப்படும் லவங்கப்பட்டையில் உடல்பருமனைக் குறைக்க உதவும் எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லவங்கத்தில் உள்ள ‘சின்னமால்டிஹைடு’ (Cinnamaldehyde) என்ற எண்ணெய்ப் பொருள்தான் உடல் கொழுப்பை அதிகரிக்கும் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு உடல்பருமனைக் குறைக்கிறது என்கிறார் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜீன் வூ.

உடலிலுள்ள கொழுப்பு செல்களைச் சூடாக்கி, அதன் மூலம் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் சின்னமால்டிஹைடு கொடுக்கிறது. இந்தப் பரிசோதனையை எலிகளுக்குக் கொடுத்துப் பரிசோதித்ததில், சின்னமால்டிஹைடு உடல் பருமனுக்கு எதிராகச் செயல்பட்டது தெரியவந்திருக்கிறது. மனிதர்களிடம் மேற்கொண்ட ஆய்விலும் இதே முடிவு கிடைத்திருப்பதால், சின்னமால்டிஹைடு எண்ணெய் உடல்பருமன் பிரச்சினையைத் தடுக்கும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் ஜீன் வூ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x