Published : 06 Feb 2019 10:47 AM
Last Updated : 06 Feb 2019 10:47 AM

அன்றாட வாழ்வில் வேதியியல் 17: உலகை இணைக்கும் எர்பியம்

பிப்பெட்: வணக்கம் பியூ. சிலிக்கான் சில்லு பத்தி நீ சொன்னதுதான் என் மனசுக்குள்ள இன்னும் ஓடிக்கிட்டு இருக்கு.

பியூரெட்: ஆமா, பிப். இன்றைய உலகை ஆட்சி செய்துகொண்டிருக்கும் கணினி, மின்னணு சாதனங்களுக்கு குட்டியூண்டு சிலிக்கான் சில்லுகள்தான் அடிப்படை.

பிப்.: அறிவியல் நிகழ்த்தும் பல மாயாஜாலங்களில் இதுவும் ஒண்ணு.

பியூ.: அது மட்டுமில்ல, சிலிக்காவை அடிப்படையாகக் கொண்ட கண்ணாடி இழைகள், தொலைத்தொடர்பு வசதிகளுக்கான ஆப்டிகல் ஃபைபராகவும் பயன்படுகின்றன.

பிப்.: இந்த வாரம் புதுத் தனிமம் பத்தி ஏதும் சொல்லப் போறது இல்லையா?

பியூ.: சொல்லப் போறேன். சிலிக்கான் எப்படி தொலைத்தொடர்புக்கு உதவுதோ, அதே மாதிரி உதவும் மற்றொரு தனிமம்தான் எர்பியம்.

பிப்.: பேரே கேள்விப்பட்ட மாதிரி இல்லையே.

பியூ.: புதுசாத்தான் இருக்கும். எர்பியம் கண்டுபிடிக்கப்பட்டதே ஒரு சிக்கலான கதை.

பிப்.: வேதியியல் கண்டறிதல் கதையா, சொல்லு சொல்லு.

பியூ.: ஸ்வீடன் நாட்டில் உள்ள கிராமம் யிட்டர்பி. அந்த ஊர்ல 1843-ல் பல தனிமங்கள் கண்டறியப்பட்டுச்சு. அப்படிக் கண்டறியப்பட்டதில் எர்பியமும் ஒண்ணு. ஸ்வீடன் வேதியியலாளர் கார்ல் குஸ்தாஃப் மொசாண்டர், இந்தத் தனிமத்தைக் கண்டறிந்தார். யிட்ரியா என்ற உலோகத்தின் ஆக்சைடு காடோலினைட் என்ற கனிமத்தில் இருப்பதாக மொசாண்டர் முதல்ல நினைச்சார்.

பிப்.: அப்புறம் என்ன ஆச்சு?

பியூ.: அதிலிருந்து யிட்ரியா, எர்பியா, டெர்பியான்னு மூன்று வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன. பெயர்கள் மட்டுமில்லாம பண்புகளிலும்கூட எர்பியாவும் டெர்பியாவும் குழப்பிக்கொள்ளப்பட்டன.

பிப்.: அந்தக் குழப்பமெல்லாம் தீரவேயில்லையா?

பியூ.: குழப்பங்களைத் தீர்த்து வைக்கிறதுதானே அறிவியலோட வேலை. குழப்பம் தீர்ந்தாலும், இன்றைக்கும் இயற்கையான எர்பியாவைக் கண்டறிவது சிக்கலான விஷயமாகவே இருக்கு. அது பெரும்பாலும் சேர்மமாவே இருக்கு.

பிப்.: கண்ணாடி இழைன்னு ஏதோ ஆரம்பிச்சியே பியூ, மறந்திட்டியா?

பியூ.: ஆமா, கண்ணாடி இழைத் தொடர்பில் ஒளி இழை சமிக்ஞைகளை மிகப் பெரிய அளவில் பெருக்கித் தரக்கூடிய இயல்பை எர்பியம் கொண்டிருக்கு. அதனால நீண்ட தொலைவு தொலைபேசி, தகவல் தொடர்பு இழைகளில் எர்பியம் பெருமளவு பயன்படுது. அதோட சிலிக்காவையும் சேர்த்துப் பயன்படுத்துறாங்க.

பிப்.: பேரு கொஞ்சம் வித்தியாசமா இருந்தாலும், உலகை இணைக்கிறதுல எர்பியத்தை அடிச்சுக்க முடியாதுன்னு சொல்ல வர்ற.

பியூ.: அது மட்டுமில்ல, வெல்டிங் பற்றவைக்கும் தொழிலாளர்களுக்கான காப்புக் கண்ணாடிய பார்த்திருக்கியா?

பிப்.: ஆமா, பழுப்பும் சிவப்பும் கலந்த நிறத்துல இருக்கும்.

பியூ.: அதைத் தயாரிக்க எர்பியம் பயன்படுது. மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அகச்சிவப்புக் கதிர்களைக் கிரகித்துக்கொள்ளும் ஆற்றலை எர்பியம் பெற்றிருக்கு. சிவப்புக்கும் எர்பியத்துக்கும் இடையிலான தொடர்பு ரொம்ப வலுவானது.

பிப்.: அந்தத் தொடர்பைப் பத்தி இன்னும் கொஞ்சம்தான் சொல்லேன்.

பியூ.: எர்பியம் ஆக்சைடு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். குளிர்கண்ணாடி மட்டுமில்லாம கண்ணாடி, பீங்கான் போன்றவற்றில் இளஞ்சிவப்பு நிறத்தை ஏற்றுவதற்கான நிறமேற்றியா இது பயன்படுது. அதே மாதிரி எர்பியத்தால் உறுதிப்படுத்தப்பட்ட ஸிர்க்கோனியம் மூலம் இளஞ்சிவப்பான செயற்கை வைரக் கற்கள் உருவாக்கப்படுகின்றன.

பிப்.: இப்படியே போனா பஞ்சுமிட்டாய், ரோஜாப்பூ எல்லாம் எர்பியத்தின் நண்பர்களாகிவிடும் போலிருக்கே.

 

chemistry-2jpg

இந்த வாரத் தனிமம்: எர்பியம்

குறியீடு: Er

அணு எண்: 68

வெள்ளி நிற உலோகமான எர்பியம், ஓர் அரிய தனிமம். காடோலினைட், யக்ஸேனைட், ஸெனோடைம், ஃபெர்குசோனைட், பாலிகிரேஸ், புளோம்ஸ்ட்ரான்டைன் ஆகிய கனிமங்களில் எர்பியம் காணப்படுகிறது. தோல், பல் மருத்துவ சிகிச்சைகளில் லேசர் ஒளிக்கற்றைகளைச் செலுத்துவதற்கு எர்பியம் கலப்பு உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வனேடியம் எனும் வேதிப்பொருளுடன் சேர்க்கப்படும்போது, அதன் கடினத்தன்மையைக் குறைத்து, செயல்பாட்டுக்கு உகந்த கலப்பு உலோகங்களை உருவாக்கவும் எர்பியம் உதவுகிறது.


தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x