Published : 04 Feb 2019 01:04 PM
Last Updated : 04 Feb 2019 01:04 PM

யு டர்ன் 05: ஆப்பிள் கம்பெனி – சுந்தர காண்டம்

ஸ்டீவ் அடுத்து அரங்கேற்றியவை, இதுவரை பிசினஸ் உலகமே கண்டிராத புதுமைகள்.

ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் எலெக்ட்ரானிக் வியாபாரிகள் மூலமாக விற்கப்பட்டன. இவர்கள் ஐ.பி.எம், டெல், காம்பாக் போன்ற போட்டியாளர்களின் கம்ப்யூட்டர்களையும் விற்பனை செய்தார்கள். ஐ மாக் விற்பதில் வியாபாரிகள் தனியான ஆர்வம் காட்டவில்லை. சொந்தக் கடைகளைத் திறந்தால், இதற்குத் தீர்வு காணலாம் என்று ஸ்டீவ் நினைத்தார். இத்தகைய கடைகள் எல்லாமே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தன. ஆகவே, பிற டைரக்டர்கள் எதிர்த்தார்கள். திறந்தே தீருவேன், என்று நம் முரடன் முத்து அடம் பிடித்தார். திறந்தார்.

கம்ப்யூட்டர் கடைகளில், தயாரிப்புகள் ஷெல்ஃப்களில் அடுக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் தொடக்கூட முடியாது. விற்பனையாளர்தான் விளக்குவார். ஸ்டீவ் இதை மாற்றினார். மேசைகளில் இருக்கும் கம்ப்யூட்டரை நீங்களே இயக்கலாம், ஈ மெயில் அனுப்பலாம், இணையதளத்தில் பவனி வரலாம். எந்த விற்பனைப் பிரதிநிதியும் உங்கள் அருகே வரமாட்டார்கள், உங்களை ஒன்றுமே கேட்கமாட்டார்கள்.

ஏதோ, உங்கள் வீட்டுக்குள் நுழைந்து, உங்கள் கம்ப்யூட்டரை இயக்கியதுபோல், முழு சுதந்திரம். ஏதாவது சந்தேகம் வந்தால், அதற்கென்றே இருக்கும் ஜீனியஸ் (Genius – மேதைகள் என்று அர்த்தம்) என்னும் ஊழியர்கள் தீர்த்துவைப்பார்கள்.

அடுத்து ஆப்பிள் நுழைந்த துறை இசை. கம்ப்யூட்டரின் உபயோகம் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏராளமான ஐ மாக் உரிமையாளர்கள் சிடி-க்கள், இணையதளங்கள் ஆகியவற்றிலிருந்து பாடல்களை டவுன்லோட் செய்து கம்ப்யூட்டர்களில் சேமித்தார்கள். இதற்காக ஆப்பிள் 2001 -இல் ஐ ட்யூன்ஸ் என்னும் மென்பொருள் உருவாக்கினார்கள்.

ஐ ட்யூன்ஸ் உருவாக்கத்துக்காக, ஸ்டீவ் ஏராளமான எம்.பி. 3 ப்ளேயர்கள் பயன்படுத்தினார். அவற்றில் ஒரு குறைபாடு, பதினாறு பாட்டுகளுக்குமேல் சேமிக்க முடியாது. குறை களைய,இந்தத் துறையில் குதிக்க ஸ்டீவ் முடிவெடுத்தார். பல மாத பகீரத முயற்சிகள். பளிச் வெள்ளையாய், கண்ணுக்குக் கவர்ச்சியாய், கைக்கு அடக்கமாய், ஒலித்தெளிவுக்கு இலக்கணமாய் மியூசிக் ப்ளேயர் தயாரானது.

ஐ பாட் (iPod) என்று பெயர் வைத்தார்கள். 2001 – ஆம் ஆண்டில் அறிமுகம். ஐ பாட் விலை 399 டாலர். கம்ப்யூட்டர் கம்பெனிக்கு மியூசிக் பற்றி என்ன தெரியும்? எல்லா பிளேயர்களும் 100 டாலர் விலைக்கு விற்கும்போது, 399 டாலர் ஐ பாட்யார் வாங்குவார்கள்? என்றெல்லாம் கேள்விகள், கேலிகள். இவற்றுக்கு விற்பனை பதில் சொன்னது. கடந்த 17 வருடங்களில் 39 கோடிக்கும் அதிகமான ஐ பாட்கள் இசைப் பிரியர்களுக்கு அளவில்லா ஆனந்தம் அளித்துக்கொண்டிருக்கின்றன.

ஐ பாட் வெற்றி தந்த வேகம். ஆப்பிள் தன் இசைப் பயணத்தில் அடுத்த அடியை எடுத்து வைத்தது. ஏராளமானவர்கள் இணையதளங்களிருந்து தங்களுக்குப் பிடித்த பாட்டுக்களை டவுன்லோட் செய்து கம்ப்யூட்டர்களில் சேமித்துக் கொண்டிருந்தார்கள். சில சமயங்களில் நேர்மையாகப் பணம் கொடுத்து, பெரும்பாலான சமயங்களில் திருட்டுத்தனமாக. இந்த ஒலிப்பதிவின் தரம் மகா மட்டம்.

இந்தத் திருட்டால் மியூசிக் கம்பெனிகளின் சி.டி. விற்பனை சரிந்துகொண்டிருந்தது. திருட்டு டவுன்லோடை நிறுத்தும் வழியும் அவர்களுக்குத் தெரியவில்லை.

ஸ்டீவ் மூளை லைட் பளிச். ரெக்கார்ட் கம்பெனிகள் டவுன்லோட் செய்யும் ஏகபோக உரிமையை ஆப்பிளுக்குக் கொடுக்கவேண்டும். ஆப்பிள், ஐ ட்யூன்ஸ் என்னும் ஆன்லைன் ஸ்டோர் மூலம் இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும். வாடிக்கையாளர் தரும் பணத்தை ரெக்கார்டிங் கம்பெனிகளும், ஆப்பிளும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும். பலகட்டப் பேச்சு வார்த்தைகள். மியூசிக் ரெக்கார்டிங் கம்பெனிகள் சம்மதித்தார்கள். 2003 – ஆம் ஆண்டில் இந்தச் சேவையை ஆப்பிள் ஆரம்பித்தது.

ஒரு பாட்டுக்கு டவுன்லோட் கட்டணம் வெறும் 99 சென்ட்கள் மட்டுமே. (சுமார் 7 ரூபாய்.) ஜூஜூபிஅமவுன்ட். வசூலில் 70 சென்ட் ரெக்கார்ட் கம்பெனிகளுக்கு, 29 சென்ட் ஆப்பிளுக்கு. ஐ ட்யூன்ஸ் ஸ்டோரில் இன்று டவுன்லோட் செய்யக் கிடைப்பவை – 4,30,00,000 பாடல்கள், 45,000 சினிமாக்கள், 3000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும்பல பொழுதுபோக்கு அம்சங்கள். ஆப்பிளின் லாபப்பாதையில் ஐ ட்யூன்ஸ் முக்கிய திருப்புமுனை.

ஐ பாட் விற்பனை வருடத்துக்கு வருடம் எகிறிக்கொண்டிருந்தது. 2005 - இல் ஆப்பிளின் லாபத்தில் 45 சதவிகிதம் ஐ பாட் உபயம். இந்த மாதிரியான இமாலய வெற்றி சாதாரணமாகத் திமிரைக் கொடுக்கும். போட்டிகளைத் தூசாக நினைக்கவைக்கும். இது சறுக்கலின் முதற்படி. ஸ்டீவுக்கோ இந்த மாபெரும் வெற்றி மனத்தில் பாதுகாப்பின்மையை, பயத்தை ஏற்படுத்தியது.

செல்போன்கள் இல்லாதவர்களே இல்லையோ என்னும்படி, 2005 - இல் 83 கோடி செல்போன்கள் உலகம் முழுக்க விற்பனையாயின.

பெரும்பாலானோர் இவற்றில் இருந்த காமெராவில் போட்டோக்கள் எடுத்தார்கள். காமெராக்கள் வாங்குவதை நிறுத்தினார்கள். இதேபோல், செல்போன்களில் எம். பி.3 பிளேயர் வந்துவிட்டால் ஐ பாட் காணாமல் போய்விடும் என்பது ஸ்டீவின் பயம். செல்போன் தயாரிக்க முடிவு செய்தார்.

அனைவரையும் தனக்கு ஒன்று வேண்டும் என்று ஏங்கவைக்க, செல்போனில் என்னென்ன வித்தியாசங்கள் காட்டலாம்? ஸ்டீவும், குழுவினரும் தங்கள் மூளை நியூரான்களுக்கு ஓவர்டைம் கொடுத்தார்கள். மனித உடலின் அவயவங்களில், கை விரல்கள் அற்புதமான படைப்பு என்பது ஸ்டீவின் எண்ணம். ஒரு நாள் அவர் குழுவினரிடம் சொன்னார், “நம் செல்போனில் கீ போர்ட் இருக்கக்கூடாது. விரல்களால் தொட்டால் செயல்படும்படி வடிவமைக்க வேண்டும்.” தயங்கினார்கள்.

“முடியாது” என்னும் வார்த்தை ஸ்டீவ் அகராதியில் கிடையாது. விடாப்பிடியாக நின்றார். கடும் முயற்சி. முடியாதது நடந்தது. எல்லா இயக்கங்களும் ஸ்விட்ச்களால் அல்ல, கை விரல் வருடலால்.

ஸ்டீவுக்குத் திடீரென மூளையில் இன்னொரு மின்வெட்டல். செல்போன் திரை பிளாஸ்டிக்கில் இருக்கக்கூடாது, கண்ணாடியில். கீழே விழுந்தால் உடையாத கொரில்லா கிளாஸ் (Gorilla Glass) என்னும் ஸ்பெஷல் கண்ணாடியை நெடும் தேடலுக்குப் பின் கண்டுபிடித்தார்கள்.

வேலை தொடங்கியதிலிருந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. யாருக்குமே நம்பிக்கையில்லை – ஒருவரைத் தவிர. அவர், ஸ்டீவ். ஜனவரி 2007. ஐ போன் வெளி வந்தது. அழகில் கொஞ்சும் கிளி. பயன்படுத்தச் சகலகலாவல்ல கருவி. இதுவரை 140 கோடி ஐ போன்கள் விற்பனையாகியிருக்கின்றன. ஆப்பிள் கம்பெனியின் தலையெழுத்தை ஐ போன் மாற்றியெழுதியது.

மியூசிக் பிளேயரும், செல்போனும் புது அவதாரம் எடுத்துவிட்டபோது, கம்ப்யூட்டர் மட்டும் பின் தங்கலாமா? 2010 - இல் ஐ பேட் (iPad) என்னும் குளிகைக் கம்ப்யூட்டரைக் களமிறக்கினார். இன்றுவரை விற்பனை 36 கோடிக்கும் மேல்.

இப்படி ஆப்பிள் கம்பெனி தூள் கிளப்பிக்கொண்டிருக்கும்போது, ஸ்டீவின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தூள் தூளாக்கும் சுனாமி. 1997. அடிக்கடி சோர்வடையத் தொடங்கினார். மருந்துகள் சாப்பிட்டார். பிரச்சினைகள் குறைந்தவுடன், மருந்துகளையும், டாக்டரிடம் போவதையும் நிறுத்தினார். 2003. மறுபடியும் வயிற்று வலி. பட்டியலாகப் பரிசோதனைகள். கணையத்தில் புற்றுநோய். அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே வழி என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஸ்டீவ் ஒத்துக்கொள்ளவில்லை.

இயற்கை வைத்தியம் குணப்படுத்தும் என்று கலிபோர்னியாவின் பல நிஜ, போலி இயற்கை வைத்தியர்களிடம் போனார். ஒரு வருடம் ஓடியது. வயிற்று வலி தாங்கவே முடியவில்லை. புற்றுநோய் கல்லீரலிலும் பரவி விட்டது. குடும்பத்தாரின் வற்புறுத்தலால், அறுவை சிகிச்சைக்குச் சம்மதித்தார். கணையத்தின் ஒரு பகுதியை நீக்கினார்கள். கீமோதெரபி என்னும் கதிரியக்க சிகிச்சை தொடங்கியது.

2008 - இல் சிறுநீரகம் செயலிழந்தது. விபத்தில் உயிரிழந்த இளைஞன் ஒருவனின் சிறுநீரக உபயத்தால், மார்ச் 2009 - இல் ஸ்டீவுக்கு மாற்று சிறுநீரகச் சிகிச்சை நடந்தது. ஆறே மாதங்கள் ஓய்வு. செப்டம்பரில் அலுவலகம் வரத் தொடங்கிவிட்டார். ஆகஸ்ட் 24, 2011. ஆப்பிள் டைரக்டர்கள் கூட்டம். ஸ்டீவ் வந்தார். அக்டோபர் 5, 2011. ஸ்டீவ் வாழ்க்கை முடிந்தது.

1997 முதல் நோய்கள், வலிகள், அறுவை சிகிச்சைகள். ஆப்பிள் கம்பெனிக்கு மறுவாழ்வு தந்த அட்டகாசத் தயாரிப்புகளான ஐ மாக் கம்ப்யூட்டர், ஆப்பிள் ஸ்டோர்ஸ், ஐ பேட், ஐ ட்யூன்ஸ், ஐ போன், ஐ பாட், ஆகிய அத்தனையும், மரணம் தன் கதவைத் தட்டிக்கொண்டேயிருக்கும்போது ஸ்டீவ் உருவாக்கியவை.

கீழே விழுந்துவிட்டீர்களா? புதுச்சக்தியோடு நீங்கள் எழுந்து நிற்க, ஸ்டீவ் அனுபவங்கள் தரும் டானிக் - Stay Hungry, Stay Foolish (பசியோடு இருங்கள், முட்டாள்களாக இருங்கள்).

அப்படியென்றால்…..

உங்கள் வெற்றிகளில் எப்போதுமே திருப்திப்படாதீர்கள். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்கிற பசி வெறியாக உங்கள் அடிவயிற்றில் எரியட்டும். சமுதாயம் ஏற்படுத்தி வைத்திருக்கும் மரபுகளை உடையுங்கள். செம்மறியாட்டுக் கூட்டமாக எல்லோரும் போகும் பாதையில் நடக்காமல் புதிய பாதை போடுங்கள்.

மரபுகளை மீறும்போது, உலகம் உங்களைக் கேலி செய்யும், முட்டாள் என்று சொல்லும். நீங்கள் அடியெடுத்து வைக்கும் பாதை சரியானதென்று உங்கள் உள்ளுணர்வு சொன்னால், உங்கள் பயணத்தைத் தயக்கமே இல்லாமல் தொடருங்கள். அந்த நான்கு பேர் கணிப்பில் “முட்டாள்களாகவே இருங்கள்.“

இந்தப் பசியும், புதுமைத் தேடலும் இருந்தால், சிங்கநடைபோட்டுச் சிகரத்தில் ஏறலாம், சிகரத்தில் ஏறி அந்த விண்ணையும் தொடலாம்.

(புதிய பாதை போடுவோம்!)
- slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x