Published : 26 Feb 2019 10:32 AM
Last Updated : 26 Feb 2019 10:32 AM

வேலை வேண்டுமா? - இந்திய உணவுக் கழகப் பணிக்கு 2,104 காலியிடங்கள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவுக் கழகத்தில் (Food Corporation of India) ஜூனியர் இன்ஜினீயர் (சிவில், மெக்கானிக்கல்),  உதவியாளர் (பொது, கணக்கு, தொழில்நுட்பம், கிடங்கு), சுருக்கெழுத்துத் தட்டச்சர்  ஆகிய பதவிகளில் வெவ்வேறு பிராந்தியங்களில் 2,104 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

ஜூனியர் இன்ஜினீயர் சிவில் பிரிவுக்குச் சிவில் இன்ஜினீயரிங் பாடத்தில் பட்டம் அல்லது டிப்ளமா வேண்டும். அதேபோல, மெக்கானிக்கல் பிரிவுக்குச் சம்பந்தப்பட்ட பாடத்தில் பட்டம் அல்லது பட்டயம் அவசியம்.  உதவியாளர் (பொது), உதவியாளர் (கிடங்கு) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பும் அதோடு கூடுதலாகக் கணினி அறிவும் அவசியம்.

உதவியாளர் (கணக்கு) பதவிக்கு பி.காம். பட்டமும் கணினி அறிவும் தேவை. உதவியாளர் (தொழில்நுட்பம்) பதவிக்கு பி.எஸ்சி. (விவசாயம், தாவரவியல், விலங்கியல், உயிரி வேதியியல், உயிரித் தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், உணவு அறிவியல்) பட்டம் வேண்டும். சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்குப் பட்டப் படிப்புடன் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி அறிவு ஆகியவை தேவை.

தகுதி

வயது வரம்பு, ஜூனியர் இன்ஜினீயர் பதவிக்கு 28, உதவியாளர் பதவிக்கு 27, சுருக்கெழுத்துத் தட்டச்சர் பணிக்கு 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனினும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகள், ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.  விண்ணப்பதாரர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

முதலாவது நடத்தப்படும் பொதுத் தேர்வும் அதைத் தொடர்ந்து வெவ்வேறு பணிகளுக்கு ஏற்ப நடத்தப்படும் 2-வது தேர்வும் ஆன்லைன் வாயிலாகவே  நடைபெறும். தகுதியுடையோர் இந்திய உணவுக் கழகத்தின் இணையதளத்தைப் (www.fci.gov.in) பயன்படுத்தி மார்ச்  25-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்தமுள்ள 4 பிராந்தியங்களில் ஏதேனும் ஒரு பிராந்தியத்தில் உள்ள காலியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் விண்ணப்ப முறை, கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதிகள்,  தேர்வுமுறை,  தேர்வுக்கான பாடத்திட்டம்,  பிராந்தியங்கள் வாரியாகக் காலியிடங்கள் போன்ற விவரங்களை இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x