Published : 10 Feb 2019 12:28 PM
Last Updated : 10 Feb 2019 12:28 PM

சூழல் காப்போம்: எல்லாம் எவர்சில்வர் மயம்

நான் சென்னையில் வசித்தாலும் எங்கள் வீட்டில் எப்போதும் கிராமத்து வாடை வீசிக்கொண்டே இருக்கும். காரணம் கடந்த பத்து வருடங்களாக எங்கள் வீட்டில் பாலித்தீன் பைகளைத் தவிர்த்துத் துணிப்பையைத்தான் பயன்படுத்திவருகிறோம். எண்ணெய், பால், நெய் ஆகியவற்றுக்கு உலோகப் பாத்திரங்களையே பயன்படுத்திவருகிறோம். தண்ணீர் குடிப்பதற்கு பிளாஸ்டிக் பாட்டில்களுக்குப் பதிலாக எவர்சில்வர் பாட்டில்களைப் பயன்படுத்துகிறோம். அதேபோல் குளியலறைக்கும் கழிவறைக்கும் சில்வர் வாளி. பெரும்பாலும் மண்சட்டிகளில்தான் சமைக்கிறேன். சமையலறைக் கழிவுகளில் மக்கும் குப்பையைத் தனியே பிரித்து உரமாக்கிவிடுகிறோம். பிளாஸ்டிக்கைத் தவிர்த்து, சூழுலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்தினால் இயற்கை எவ்வளவு அழகானது என்பதை உணரமுடியும்.

- பொன்.சுமதி, சென்னை.

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ பிளாஸ்டிக் நம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்டது. அடுப்படி முதல் வாசல்வரை கலர் கலராக பிளாஸ்டிக்கின் ஆக்கிரமிப்பு. உடனே இதையெல்லாம் தூக்கிப் போட மனசு வராது. அவற்றுக்கு மாற்றாகக் கண்ணாடி, பீங்கான், எவர்சில்வர் போன்றவற்றில் பாத்திரங்கள் கிடைக்கின்றன. ஆனால், நமக்கு விருப்பமான டிசைனிலும் தேவையான அளவுகளிலும் கிடைப்பது சிரமம் என்பதாலேயே பலரும் அவற்றைத் தவிர்த்துவருகின்றனர். ஆனால், மனம் இருந்தால் மார்க்கம் உண்டுதானே. அதனால், நான் மாற்றத்தை அடுப்படியில் இருந்து தொடங்கினேன். பரணிலிருந்த ஜாடியை எடுத்து அதில் புளியைப் போட்டுவைத்தேன். பீங்கான் ஜாடி வாங்கி உப்பைப் போட்டேன். ஊறுகாய் பாட்டிலில் மிளகாய் வற்றலுக்கு இடம்கொடுத்து பிளாஸ்டிக் ஒழிப்பில் என் பங்குக்குப் பிள்ளையார் சுழி போட்டுவிட்டேன். சூழல் காப்போம்; சுகமாய் வாழ்வோம்.

- எம். கோமதி, நெல்லை.

plsatic-6jpgright

நான் வெளியே செல்லும்போது சணல் தோள்பையை உபயோகிக்கின்றேன். அதனுள் மூன்று மஞ்சள் பைகள் எப்போதும் இருக்கும். மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைத் தனித்தனியாக வாங்க வசதியாக இருக்குமே.

என் ஸ்கூட்டியில் எப்போதும் இரண்டு  மஞ்சள் பைகளை வைத்திருப்பேன். பிளாஸ்டிக் ஒழிப்புச் சட்டம் வந்ததுமே செயல்படுத்த ஆரம்பித்துவிட்டதால் இப்போது நன்கு பழகிவிட்டது. குழந்தைகளின்  மதிய உணவு டப்பா, தண்ணீர் பாட்டில் என எல்லாம் எவர்சில்வர் மயம். 

என் வீட்டில் வேலை செய்பவரின் மகன் சைக்கிளில் டீ வியாபாரம் செய்கிறார். பிளாஸ்டிக் கப்பைப் பயன்படுத்தக் கூடாது என்றதும் என்ன செய்வது என யோசித்தார்.

சிறிய எவர்சில்வர் டம்ளர்களை வாங்கிக்கொண்டு வாளியில் நீரை நிரப்பி அவ்வப்பொழுது கழுவிக்கொள்ளலாம் என நான் சொன்னதை அவரும் கடைப்பிடிக்கிறார். சிறுதுளி பெரு வெள்ளம் என்பது போல அனைவரும் தங்களால் முடிந்த அளவில் முயன்றால் நிச்சயம் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும்.

- பானு பெரியதம்பி, சேலம்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பில் என் பங்கு

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உதவும் வகையில் நீங்கள் பின்பற்றும் நடைமுறைச் செயல்பாட்டைத் தகுந்த ஒளிப்படங்களுடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சலும் அனுப்பலாம். உங்கள் ஆலோசனை இயற்கையைப் பாதுகாப்பதுடன்  மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x