Last Updated : 18 Feb, 2019 11:00 AM

 

Published : 18 Feb 2019 11:00 AM
Last Updated : 18 Feb 2019 11:00 AM

சபாஷ் சாணக்கியா: அடங்கணும்..!

உங்களுக்கு  நிச்சயம் ‘தீயினால் சுட்டபுண் உள்ளாறும்...' எனத் தொடங்கும் குறள் தெரிந்திருக்கும். அதில் அடுத்து வரும் வார்த்தைகள் என்னவென்று கேட்டால், ‘ஆறாதே நாவினால் சுட்ட வடு' என்று  உடனே சொல்லி விடுவீர்கள்.

அது சரி, இந்தக் குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது தெரியுமா? ‘அடக்கமுடைமை' என்கிறீர்களா? நல்லது, அத்துடன், ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்...' ‘யாகாவாராயினும் நாகாக்க...' என்று தொடங்கும் குறள்கள் எந்த அதிகாரத்தில் வருகின்றன என்பதையும்  சொல்லுங்களேன். ஆமாம், இவையும் அதே அதிகாரத்தில் தான் வருகின்றன.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் எனக் கூறிய வள்ளுவர், செல்வர்களுக்கு பணிதலே  ஒரு செல்வம் போன்றது என்கிறார். ஆமாங்க நிறையப் படித்தவன் அடக்கமாக இருப்பதும், அதிகாரம் இருப்பவன் அமைதியாக இருப்பதும், பெரும் பணக்காரன் ஆடம்பரம் செய்யாதிருப்பதும் அவர்களுடைய மதிப்பைப் பன்மடங்கு கூட்டுமல்லவா?

ஐயா, அடக்கமின்மை என்பது உள்மனதில், எண்ணத்தில் தோன்றுவது. ஆனால் அது ஒருவரது வார்த்தைகளாலும் செயல்களாலுமே வெளிப்படுவது.  அகங்காரமும் ஆணவமும் அதன் அடுத்தடுத்த நிலைகள் தானே?

‘ஓர் உயர்ந்த மனிதன் என்பதற்கான முதல் அடையாளம்  தன்னடக்கம் தான்' என ஆங்கிலேய கலை விமர்சகர் ஜான் ரஸ்கின் சொல்வது, நமது மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தன்னடக்கத்தை நினைத்துப் பார்த்தால் புரிந்துவிடும்.

உங்கள் அலுவலகத்தில், சுற்றுவட்டாரத்தில், உறவினர்களிடையே பார்த்து இருப்பீர்கள். சிலர் தங்களை மற்றவர்களை விட உயர்வாகவே எண்ணிக் கொள்வார்கள், காண்பித்துக் கொள்வார்கள். அது ஒருவிதமான அடக்கி ஆளுதல் (over powering) முன்னிலைப் படுத்திக் கொள்ளுதல் (dominance).

அப்படிப்பட்டவர்களால், சகமனிதர்களை தங்களுக்கு இணையாக நினைத்துப் பார்க்க முடியாது. அவர்கள் செயல்கள் எல்லாம், ‘எனக்குத் தெரியாததா என்ன, நான் சொல்வதைக் கேளுங்கள்' எனும் ரீதியிலேயே இருக்கும். அத்தகையவர்கள் தங்கள் எண்ணங்களை, நோக்கங்களை மற்றவர்கள் மேல் திணித்துக் கொண்டே இருப்பார்கள்!

‘அடக்கம் என்பது உங்களைக் குறைவாக எண்ணிக் கொள்வதில்லை; உங்களைப் பற்றியே  நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை குறைத்துக் கொள்வது தான்' என ஆங்கிலேய எழுத்தாளர் சி எஸ் லூயிஸ் சொல்வதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்!

இதுபோல  மற்றவர்களை அடக்கி ஆள நினைப்பது, ஆள்வது, தலைவன் போல நடந்து கொள்வது என்பதெல்லாம் சில பறவைகளிடமும் விலங்குகளிடமும் காணப்படுகிறதாம். சாதாரணமாக இதைக் கோழிகளிடம் பார்த்து இருப்பீர்கள். ஒரு பலமான  கோழி மற்ற கோழிகளை விரட்டி விட்டு இரையை சரிகட்டும். ஆங்கிலத்தில் இதை pecking order என்கிறார்கள்.

பல அலுவலகங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும்  நடப்பது தானே இது? சிலர் புதிதாக உள்ளே நுழைவார்கள், மற்றவர்களைப் புறந் தள்ளுவார்கள். தாமாகவே தமக்கு இல்லாத, கொடுக்கப்படாத அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டு  ஆட்டம் போடுவார்கள். தங்களைத் தலைவன் என்று சொல்லாமல் சொல்வார்கள். ‘மற்றெல்லா நற்குணங்களுக்கும் அடிப்படையானது அடக்கம் தான்' என சீனத் தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ் சொல்வது சரி தானே?

ஒருமுறை சென்னை புறநகர் குடியிருப்புப் பகுதி ஒன்றில் மாலையில், நானும் எனது நண்பரும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தோம். அங்கு 4 முதல் 7 வயதிற்குள்ளான சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.அதில் கொஞ்சம் உயரமாக, பருமனாக இருந்த பையன் தன் சகாக்களிடம் ‘இங்க பாருங்கடா, நீங்கள் எல்லாம் சின்னப் பசங்க. நான் செகண்ட் படிக்கிறேன். நான் சொல்றபடி கேளுங்க. இல்லாட்டி ஆட்டத்தில் சேர்த்துக்க மாட்டேன்...' என்கிற ரீதியில் பேசி மற்ற சிறுவர்களை மிரட்டிக் கொண்டு இருந்தான்!

இந்த ‘நான், எனது, என்னால்... ' எனும் எண்ணங்கள் எல்லாம் சிறு வயது முதலே வந்து விடுகின்றன என்பதை நீங்களும் பல இடங்களில் பார்த்து இருப்பீர்கள்.

எனக்குத் தெரிந்த அரசாங்க அதிகாரியின் மகன் ஒருவரைக்  கல்லூரியில் சேர்த்து இருந்தார்கள். அவர்  கட்டவிழ்த்த கோவில் காளை போல யாருக்கும் கட்டுப்படாமல் இருப்பார். எதற்கெடுத்தாலும் ‘எங்க அப்பாவால் முடியும், எங்க அப்பாவிடம் சொல்லிவிடுவேன்.. ' எனப் பேசுவார். இதனால் எரிச்சல் அடைந்த மற்ற மாணவர்கள் அவரைக் கண்டால் விலகி ஓடி விடுவார்கள். அவர் வாங்கிக் கொடுக்கும் சமுசா டீக்காக ஒரிருவர்களைத் தவிர மற்றவர்கள் அவரிடம் சேர்வதில்லை!

‘தன்னடக்கம் உங்களை உண்மையானவனாகக் காண்பிக்கும்; தற்பெருமையோ உங்களை செயற்கையானவனாக ஆக்கிவிடும்' என்கிறார் தாமஸ் மெர்டன் எனும் அமெரிக்க எழுத்தாளர்! இந்த அடக்கம் இருக்கிறதே, அது எல்லோருக்கும் அவசியமான ஒரு குணமில்லையா? அது இல்லையென்றால், ஒருவரிடம் எத்தனை அழகு, அறிவு, அதிகாரம், படிப்பு, பதவி, பணம்  எது  எவ்வளவு இருந்தாலும், அவரைக் கண்டாலே மற்றவர்களுக்குப் பிடிக்காதில்லையா?

உண்மையைச் சொல்லப் போனால் அவரைப் பார்த்தாலே எரிச்சல் படுவார்கள். அவரை வெறுப்பார்கள்; தவிர்ப்பார்கள் அல்லவா?

‘அடக்கம் இல்லாதவனை எல்லோரும் வெறுப்பார்கள்' என்பது சாணக்கியர் கூற்று. இது என்றென்றும் உண்மை தானே?

- somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x