Last Updated : 12 Feb, 2019 11:07 AM

 

Published : 12 Feb 2019 11:07 AM
Last Updated : 12 Feb 2019 11:07 AM

தேர்வுக்குத் தயாரா? - 75-க்கு 75 மதிப்பெண்கள் எளிது (10-ம் வகுப்பு - அறிவியல்)

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வைப் பொறுத்தவரை பாடத்திலிருந்து கேட்கப்படும் குறிப்பிட்ட வினாக்களுக்கு மட்டும் கொஞ்சம் மெனக்கெட்டுத் தயாரானால், 75-க்கு 75 என்ற மதிப்பெண் இலக்கு எளிதாகும்.

ஒரு மதிப்பெண்: உள் வினாக்களில் கவனம்

ஒரு மதிப்பெண் பகுதியின் 15 வினாக்களில் 10 அல்லது 11 மட்டுமே பாடப் புத்தகத்தின் பின்பகுதி வினாக்களில் இருந்து கேட்கப்படும். ஏனைய 5 அல்லது 4 வினாக்கள் பாடங்களிலிருந்து கேட்கப்படும். இந்த 5 மதிப்பெண்கள் மாணவர்களின் செண்டம் முயற்சிக்குச் சவாலாக அமையும். ஒரு மதிப்பெண் பகுதியின் கணக்கு வினாக்கள் 15, 16, 17 ஆகிய பாடங்களில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது.

இவை நேரடியான வினாக்களாக இல்லாமல் சற்று மாற்றியும் கேட்கப்படலாம். எனவே, வினாக்களைப் பலமுறை வாசித்துப் பொருளறிந்த பின்னர், விடையளிப்பது அவசியம். புளூபிரிண்ட் வழிகாட்டுதலின்படி 7, 10 ஆகிய பாடங்களில் இருந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் இடம்பெறாது. எனினும், இவ்வினாக்கள் 2 மதிப்பெண் பகுதியில் இடம்பெற வாய்ப்புண்டு.

2 மதிப்பெண்: ‘சாய்ஸ்’ கவனம்

கொடுக்கப்பட்ட 32-லிருந்து 20 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டிய 2 மதிப்பெண் பகுதியிலும் பாடங்களிலிருந்து 7 வினாக்கள்வரை கேட்கப்படலாம். 1, 5, 6, 8, 9, 15, 16, 17 ஆகிய பாடங்கள் எளிமையானவை என்பதால் இந்தப் பாடத்தின் அனைத்து 2 மதிப்பெண் வினாக்களுக்கும் மாணவர்கள் தயாராகலாம்.

படங்கள், பொருத்துக, கோடிட்ட இடங்கள், சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல், பிழைகளை நீக்குதல் போன்ற வினாக்களுக்கு முன்னுரிமை தந்து பதிலளிப்பது இப்பகுதியில் முழு மதிப்பெண் பெற உதவும். கூற்று, காரணங்களைக் கண்டறிதல், விதிகள், கணக்குகள் போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும்போது கவனம் தேவை. 2 மதிப்பெண் பகுதியின் படங்கள் 3, 4, 5, 16, 17 ஆகிய பாடங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன.

5 மதிப்பெண் : தேவை கூடுதல் கருத்துகள்

முழு மதிப்பெண்ணுக்குக் குறிவைக்கும் மாணவர்கள் 2, 7, 10, 15 ஆகிய பாடங்களின் வழக்கமான வினாக்களுடன், அந்தப் பாடங்களிலிருந்து கேட்கப்பட வாய்ப்புள்ள 5 மதிப்பெண் வினாக்களையும் அடையாளம் கண்டு பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

இந்தப் பகுதி வினாக்களுக்குப் பதில் அளிக்கும்போது கூடுதலாக ஓரிரு பாயிண்டுகள் எழுதுவது நல்லது. மெல்லக் கற்போர் 2, 7, 17 ஆகிய பாடங்களின் பின் பகுதியில் உள்ள வினாக்களில் கவனம் செலுத்தினால் இந்தப் பகுதியில் கணிசமான மதிப்பெண்களைப் பெறலாம்.

தேர்ச்சி எளிது

ஒரு மதிப்பெண் பகுதிக்குப் புத்தக வினாக்கள் மூலமே 10 மதிப்பெண்களை உறுதி செய்யலாம். 1, 5, 6, 8, 9 ஆகிய பாடங்களின் 2 மதிப்பெண்களை முழுமையாகப் படித்தால் இந்தப் பகுதியில் குறைந்தது 10 வினாக்களுக்கு விடையளிக்க முடியும். கூடுதல் மதிப்பெண்களுக்கு ஏனைய பாடங்களின் முக்கிய 2 மதிப்பெண் வினாக்களைப் படித்துக்கொள்ளலாம்.

5 மதிப்பெண்களைப் பொறுத்தவரை முந்தைய பொதுத் தேர்வு வினாத்தாள்களின் வினாக்களைப் படிக்கலாம். படங்களை வரைவதன் மூலமே அதற்கான மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். முந்தைய பொதுத் தேர்வு வினாக்களில் அடிக்கடி கேட்கப்படும் படங்களைக் குறித்து வைத்துக்கொண்டு அவற்றில் பயிற்சி பெறுவதும் இந்தத் தயாரிப்புகளுக்கு உதவும்.

thervu-2jpgபாடக் குறிப்புகளை வழங்கியவர்: இரா.சக்திவேல், பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்), அரசு உயர்நிலைப் பள்ளி, செல்லப்பன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.right

பொதுவான கவனக் குறிப்புகள்

முந்தைய பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் மட்டுமன்றி கடந்த 2 வருடங்களின் அரையாண்டு, காலாண்டு, திருப்புதல், மாதத் தேர்வுகளின் வினாத்தாள்களில் இருந்தும் பயிற்சி பெறலாம். இதுவரை தேர்வெழுதிய விடைத்தாள்களைத் தொகுத்து, அவற்றில் தம்முடைய தவறுகளை அடையாளம் காண்பதுடன் அடுத்த தேர்வுகளில் அவற்றைத் தவிர்க்க முயல்வதும் அவசியம். செய்முறைத் தேர்வுகளுக்கான பயிற்சியிலிருந்து 8 மதிப்பெண்கள்வரை எழுத்துத் தேர்வில் இடம்பெற வாய்ப்புள்ளது.

தற்போதைய முறையில் தேர்வு எழுதுவதற்கான நேர அவகாசம் தாராளமாக இருப்பதால், மாணவர்கள் எவ்விதப் பதற்றமும் இன்றித் தேர்வை எதிர்கொள்ளலாம். கேள்விகளைப் பலமுறை வாசித்துப் பொருளறிந்த பின்னரே உரிய விடையை எழுத வேண்டும். படங்களை வரையும்போது நன்றாக அறிந்த பாகங்களை மட்டும் குறிக்க வேண்டும். ஒரு பக்கத்துக்கு அதிகபட்சமாக 2 படங்களுக்கு மேல் வரைவதைத் தவிர்க்க வேண்டும். படங்கள் வரைவதற்கு வழக்கமான பென்சில் தவிர்த்து வண்ண பென்சில், ஸ்கெட்ச் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

கணக்கீடுகள் செய்யும்போது விடைகளை எடுத்து எழுதுவதுடன் உரிய அலகுகள் இடப்பட்டுள்ளனவாஎன்பதைச் சரிபார்ப்பது அவசியம். சூத்திரங்களுக்குத் தனி மதிப்பெண் உண்டு என்பதால் அவற்றை எடுத்து எழுதுவது அவசியம். ‘சரியா தவறா’ வினாக்களுக்கு விடையளிக்கும்போது, ‘சரி’அல்லது ‘தவறு’ என்று எழுதிய பிறகே உரிய விடையை எழுத வேண்டும். ஒரு மதிப்பெண் தவிர்த்து ஏனைய மதிப்பெண் வினாக்களுக்குப் பதில் அளிக்கும்போது பொருத்தமான தலைப்பிடுவது நல்லது. முடிந்தவரை ஒரு வினாவுக்கான விடையை அதே பக்கத்துக்குள் முடியுமாறு எழுத இப்போதிருந்தே பயிற்சி பெற வேண்டும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x