Published : 25 Feb 2019 10:55 AM
Last Updated : 25 Feb 2019 10:55 AM

டாடாவின் புதிய காருக்கு என்ன பெயர்?

டாடா நிறுவனத்திடமிருந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் மாடல் டாடா 45 எக்ஸ். இந்த டாடா 45எக்ஸ் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும். இந்தக் கார் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த டாடா 45எக்ஸ் காரின் செயல்திறன்கள், அளவுகள், வசதிகள் ஆகியவை குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இதன் புகைப்படங்கள் வெளியாகி இதன் வடிவமைப்பு மீதான ஒரு ஆர்வத்தை கிளப்பிவிட்டது.

இந்நிலையில் டாடா நிறுவனம், இந்த மாடலுக்கு வைத்திருக்கும் பெயர் குறித்து ஒரு டீசரை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கிறது. இந்த மாடலின் பெயர் ஆறு எழுத்து வார்த்தை எனவும், முதல் எழுத்து ‘A’ எனத் தொடங்கும் எனவும், அது ஒரு கடல் பறவையைக் குறிக்கும் பெயர் எனவும் கூறியுள்ளது.

அதன்படி கணிக்கும்போது பலர் ‘அக்யூலா’ என்ற பெயரை முன்வைத்தனர். இத்தாலியில் ‘அக்யூலா’ என்றால் பருந்து என்று அர்த்தம்.  சந்தையில் உள்ள டிகோர், விரைவில் அறிமுகப் படுத்தப்படவுள்ள மைக்ரோ எஸ்யுவி காரான ஹார்ன்பில், சமீபத்தில் அறிமுகமான ஹாரியர் என வரிசையாக பறவையின் பெயர்களை தன்னுடைய கார்களுக்கு சூட்டி வருகிறது டாடா.

ஆனால், சனிக்கிழமை மூன்றாவது எழுத்து 'T' எனக் குறிப்பிட்டுள்ளது. எனவே அக்யூலா என்பது சரியான பெயராக இருக்க முடியாது. பலரும் என்ன பெயராக இருக்கும் என்று பெரும் ஆராய்ச்சியில் உள்ளனர். இன்று 25-ம் தேதி இந்தக் காரின் பெயர் என்ன என்பதை டாடா மோட்டார்ஸ் வெளியிட உள்ளது.

அடுத்த மாதம் நடக்க உள்ள ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ள ‘டாடா 45எக்ஸ்’, இந்திய ஷோரூம்களுக்கு இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஹோண்டா ஜாஸ், ஹுண்டாய் ஐ20, மாருதி சுசூகி பாலெனோ ஆகியவற்றுக்குப் போட்டியாக இந்த கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா 45 எக்ஸ் முழுமையான எலெக்ட்ரிக் வெர்ஷனாகவும் வரவுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x