Last Updated : 16 Feb, 2019 11:57 AM

 

Published : 16 Feb 2019 11:57 AM
Last Updated : 16 Feb 2019 11:57 AM

கட்டிடங்களின் கதை 13: இதுவும் மும்பையின் அடையாளம்

இன்றைக்கு வானுயர்ந்த கட்டிடங்களைவிட வித்தியாசமான கட்டிடங்களே மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றன. அந்த வகையில் மும்பையில் முட்டை வடிவத்தில் உள்ள வாத்வா (Wadhwa) நிறுவனத்தின் அலுவலகம் உலகின் பார்வையைத் தன்பக்கம் ஈர்க்கத் தவறவில்லை.

மும்பையின் முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனமான வாத்வா நிறுவனத்துக்காக இந்தக் கட்டிடத்தை சைபர்டெக்சர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும்,

21- நூற்றாண்டின் சிறந்த கட்டிடக் கலைஞர்களில் ஒருவருமான கட்டிட வடிவமைப்பாளர் ஜேம்ஸ் லா ஜேபி வடிவமைத்துள்ளார். மும்பையில் உள்ள மற்ற கட்டிடங்களைவிடத் தன்னுடைய கட்டிடம் தனித்து விளங்க வேண்டும் என விஜய் வாத்வா கேட்டுக்கொண்டார். அதற்காகத் தனித்துமான வடிவமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது சைபர்டெக்சர் நிறுவனத்தின் முட்டை வடிவக் கட்டிடம் மும்பையின் தனித்த அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

கடந்த 2010-ல் திறக்கப்பட்ட இந்தக் கட்டிடம் மொத்தம் முப்பத்து இரண்டாயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் பதிமூன்று மாடிகள் உள்ளன. அதேபோல் வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டும் அடித்தளத்தில் மூன்று அடுக்குகள் உள்ளன. இங்கு மொத்தம் 400 வாகனங்களை நிறுத்த முடியும். இந்த முட்டை வடிவக் கட்டிடம் விசாலமான  இடங்களை உட்புறத்தில் கொண்டது.

அலுவலக ஊழியர்கள் தங்களுக்குப் பிடித்த இயற்கைக் காட்சியைச் செயற்கைத் தொடு திரை மூலம் மாற்றிக்கொள்ளலாம். அதற்காகப் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உடலைப் பரிசோதிக்கும் கருவி

இந்தக் கட்டிடத்தில் ஊழியர்களின் உடல்நிலையைக் கண்காணிக்கத் தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக சைபர்டெக்சர் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட தானியங்கி மின் கருவிகள் கட்டிடத்தின் கழிவறையில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின்னணுக் கருவியின் மூலம் உடல் எடை, ரத்த அழுத்தம் ஆகியவை பரிசோதிக்கப்படும். பரிசோதனையின் முடிவுகள் மருத்துவர்களுக்கு நேரடியாக அனுப்ப வழி செய்யப்பட்டுள்ளது.

மின்சார ஆற்றலைக் குறைக்கும் வகையில் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் தகடுகள், காற்றாலை ஆகியவை கட்டிடத்துக்குத் தேவையான மின்சாரத் தேவையை முழுமையாகப்  பூர்த்தி செய்கின்றன. நிலத்தடி நீரைப் பயன்படுத்திக் கட்டிடத்துக்குத் தேவையான குளிரூட்டும் வசதி வழங்கப்படுகிறது. அதேபோல் கட்டிடத்தின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள இயற்கைத் தோட்டம் கட்டிடத்தின் வெப்பத்தைக் குறைக்க உதவுகிறது.

கட்டிடத்தில்  பயன்படுத்தப்படும் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மேற்புறத்தில் உள்ள தோட்டம் மற்றும் கட்டிடத்தின் வெளியே உள்ள புல்வெளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

தண்ணீர்க் குழாய் வீடு

இந்தக் கட்டிடத்தைத் தொடர்ந்து மும்பையின் வேறு சில கட்டிடங்களையும் சைபர்டெக்சர் நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த ஜேம்ஸ் லா ஜேபி பிரிட்டிஷ் ராயல் இன்ஸ்டிடியூட் மையத்தில் தன்னுடைய முதுகலைக் கட்டிடவியல் படிப்பை முடித்தார். ஹாங்காங்கில் பெரிய தண்ணீர்க் குழாய்களைக் கொண்டு இவர் உருவாக்கிய ஓபட் ட்யூப் ஹவுஸ்ஸின் மூலம் உலக கட்டிடவி யலாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

தன்னுடைய புதுமையான கட்டிட வடிவமைப்பால் சிறுவயதிலேயே புகழின் உச்சிக்குச் சென்றவர். உலகப் பொருளாதார மையத்தின் சார்பில் இளம் உலகத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப் படுகிறார். புதுமையான கட்டிட வடிவத்துக்கான எடிசன் விருது, ஆசிய விருது போன்ற பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.

“21-ம் நூற்றாண்டின் கட்டிடங்கள் 20-ம் நூற்றாண்டின் கட்டிங்களில் இருந்து வேறுபட்ட வையாக இருக்க வேண்டும். அதுவெறும் கான்கிரீட், கண்ணாடி, இரும்பு ஆகியவற்றில் இருந்து மட்டும் வேறுபடாமல் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்கள், மல்டிமீடியா ஆகிய புதுப்புது விஷயங்களை உட்புகுத்தியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் கட்டிடவியல் துறைக்கான புதிய வெளிச்சம் கிடைக்கும்” என்கிறார் கட்டிட வடிவமைப்பாளர் ஜேம்ஸ் லா ஜேபி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x