Published : 04 Feb 2019 01:24 PM
Last Updated : 04 Feb 2019 01:24 PM

முகங்கள்: ‘அப்பாச்சிப் பொண்ணு’

தங்கள் லட்சியப் பயணத்தில் எதிர்படும் இடையூறுகளைத் தன்னம்பிக்கையுடன் தகர்த்து முன்னேறும் பெண்களில் ஒருவர் பிரேமா ராணி மஞ்சுநாதன்.

சென்னையில் தனியார்  நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரிவில் பணிபுரியும் பிரேமா, மாற்றுச் சிந்தனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்கான கருவியாகப் பயணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆண்களின் அடையாளமாகக் கருதப்படும் பைக்கைத் தன் பயணத் துணையாக்க முடிவெடுத்திருக்கிறார்.

தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்கள் விரும்பியபடியே வாழ்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அண்ணன் காட்டிய வழிபிரேமா, வேலூரையடுத்த  வாணியம்பாடியைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே பைக் ஓட்டும் ஆர்வம் துளிர்விட்டது. ஆறாம் வகுப்பு படித்தபோதே பைக் ஓட்டக் கற்றுக்கொண்டார். பிரேமாவின் அண்ணன் மணிகண்டன் பைக் ரைடில் நான்கு முறை கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார். அண்ணனையே முன்னுதாரணமாகக் கொண்டு தானும் பைக் ரைடில் சாதிக்க நினைத்தார் பிரேமா. அதன் ஒரு பகுதிதான் இந்த விழிப்புணர்வுப் பயணம் எனப் பெருமிதத்துடன் அவர் கூறுகிறார்.

பெற்றோரின் ஆதரவு

“நான் 11-ம் வகுப்புப் படித்தபோது என் அண்ணன் வைத்திருந்த  அப்பாச்சி ஆர்.டி.ஆர். 160 சிசி பைக் ஓட்ட ஆசை.  அண்ணனிடம் கேட்டேன். கீழே விழாமல் ஒரு ரவுண்ட் ஓட்டிவிட்டால் பைக்கை எனக்கே கொடுத்துவிடுவதாகச் சொன்னார்” என்று சொல்லும் பிரேமா, அண்ணன் சொன்ன வார்த்தைகளைச் சவாலாக எடுத்துக்கொண்டு உடனே வண்டியில் ஏறிக் கிளம்பிவிட்டார்.

ஐந்து கி.மீ. வரை ஓட்டி சவாலில் வென்றவருக்குத் தன் பைக் சாவியை வெற்றிப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் அண்ணன். இந்நிகழ்வுக்குப் பிறகு பிரேமாவுக்கு அவருடைய அண்ணனும் குடும்பத்தினரும் உறுதுணையாக நின்றனர்.

பிரேமா பைக் ஓட்டுவதைப் பார்த்துவிட்டுப் பலரும் அவருடைய அம்மாவிடம் பிரேமாவை ஏன் பையனைப் போல வளர்க்கிறீர்கள்  என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பிரேமாவின் அம்மா, தனக்குப் பிடித்ததைத் தன் மகள் செய்வதாகவும் அதுவே தனக்கும் நிறைவு எனவும் சொல்லி அனைவரின் கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அப்பாவும் அம்மாவைப் போலவே தன் கருத்துக்கு உடன் நின்றதாகப் பெருமையோடு சொல்கிறார் பிரேமா.

சாதிக்கத் தடையில்லை

ஊரில் பிரேமாவின் அடையாளம், ‘அப்பாச்சி ஓட்டும் பொண்ணு’. “பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும் தங்களுக்குப் பிடித்தமானவற்றை எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்யலாம். ஆண்கள் தங்களுடைய லட்சியங்களைத் தொடர்வதில் எந்தத் தடையுமில்லை. ஆனால், பெண் தன் வாழ்க்கையை வாழவே பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.

இருப்பினும், பெண்கள் மனம் தளராமல் தங்கள் கனவுகளை நோக்கிச் செல்ல வேண்டும். அதற்குப் பெற்றோர்கள் மகனைப் போல மகளையும் சுதந்திரத்துடன் வளர்க்க வேண்டும்.  பெண்களுக்குச் சுதந்திரம் அளித்தாலே அவர்கள் பொறுப்புடன் முன்னேறுவார்கள்” எனச் சொல்கிறார் பிரேமா.

வாகனங்கள் பெருகிவிட்ட இந்நாளில் பலரும் சாலை விதிகளை மதிப்பதில்லை,  குறிப்பாக இளைஞர்கள். நெரிசல் மிகுந்த சாலைகளில் சாகசம் செய்வதுபோல் வண்டியோட்டுகிறார்கள். பலர் பெரும்பாலும் தலைக்கவசம் அணிவதேயில்லை. “தலைக்கவசம்தான் உயிருக்குப் பாதுகாப்பு எனப் பலரும் யோசிப்பதில்லை. அதை முன்னிறுத்தித்தான் இந்த விழிப்புணர்வுப் பயணத்தைத் தொடங்கறேன்.

பிப்ரவரில சென்னையிலிருந்து என் ஊர் வழியாக கொல்கத்தா, டெல்லி, மும்பைக்குப் போய்ப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புவதுதான் திட்டம்” என்று சொல்லும் பிரேமா பயணத்துக்கேற்ற உடல்தகுதி அவசியம் என்பதற்காக அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார். பைக் ரைடுடன் ஸ்டண்ட்டையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பிரேமாவின் லட்சியமாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x