Published : 04 Feb 2019 12:38 PM
Last Updated : 04 Feb 2019 12:38 PM

அலசல்: சந்தா கோச்சார் வழக்கு சொல்லும் பாடம்

ஐசிஐசிஐ வங்கி, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கி. இந்த வங்கிக்கு இன்னொரு முகம் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார். ஆனால், இன்று இரண்டுமே தங்களது நம்பகத்தன்மையை முற்றிலுமாக இழக்கும் நிலை உருவாகியுள்ளது. 

2012-ம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் தீபக் கோச்சார் ஆதாயமடைந்தார் என்று வீடியோகான் மற்றும் ஐசிஐசிஐ பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளரான அர்விந்த் குப்தா குற்றம் சாட்டினார். ஆனால் அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை. 2017-ல் வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடன் வாராக்கடனான பிறகுதான் ஊடகத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

ஆரம்பத்திலிருந்தே இந்தக் குற்றச்சாட்டை வங்கியின் தலைவர் மகேந்திரகுமார் சர்மா மறுத்தார். சந்தா கோச்சார் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர் தூய்மையானவர். வங்கி அவரை 100 சதவீதம் நம்புகிறது என்று சான்றிதழ் வழங்கினார். ஒரு கட்டத்தில் நிலைமை தீவிரமானதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதி

பதி பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை குழுவை வங்கி நிர்வாகம் அமைத்தது. அப்போது, சந்தா கோச்சார் விடுமுறையில் அனுப்பப்பட்டார். விசாரணைக்குழுவின் அறிக்கை குறித்து எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், சந்தா கோச்சார், தனது விடுமுறைக் காலம் முடிந்த பிறகு பணியில் சேராமல், அக்டோபர் மாதத்தில் பதவியை ராஜினாமா செய்தார். வங்கியும் இவரது ராஜினாமாவை ஏற்று, அவருக்குப் பதிலாக சந்தீப் பாக்‌ஷியை அப்பொறுப்பில் அமர்த்தியது.

கடந்த வாரம் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் வங்கி விதிகளை மீறி சந்தா கோச்சார் நடந்து கொண்டது உறுதியானது. வீடியோகான் நிறுவனத்துடன் சேர்த்து மொத்தம் 6 நிறுவனங்களுக்கு விதிகளை மீறி கடன் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தணிக்கை முடிவுகளிலும் சந்தோ கோக்சார், தீபக் கோச்சார் தம்பதிகளுக்கு வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத்துடன் தொடர்பிருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்கும் பதிவானது.

பொதுவாக வங்கியின் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உறவினர்களுக்கு கடன் வழங்கும்போது அதற்கு ஒப்புதல் அளிக்கும் குழுவில் சம்பந்தப்பட்டவர் இடம்பெறக் கூடாது என்பது வங்கி விதி. ஆனால் வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியபோது சந்தா கோச்சாரும் இருந்துள்ளார். 

மேலும், 2012-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கடன், 5 ஆண்டுகளுக்குப் பிறகு வாராக்கடனாகிறது. ஆனால், இதற்கு பொறுப்பேற்க வேண்டியவருக்கு போனஸ் பங்குகள் வழங்கப்படுகின்றன. குற்றச்சாட்டு எழுந்த நிலையிலும் அவரைப் பாதுகாக்கவே வங்கி நிர்வாகம் முயற்சித்தது.

ஆனால், இப்போது குற்றச்சாட்டு உறுதியானதும், அவருக்கு வழங்கப்பட்ட போனஸ் பங்குகளை திரும்பப் பெறப் போவதாகவும், அவரது ராஜினாமாவை பதவி நீக்கமாகவும் அறிவித்துள்ள சந்தர்ப்பவாத நிகழ்வாகவே தெரிகிறது. பிரச்சினை கவனத்துக்கு வந்தபோதே, விசாரணைக் கமிஷனை நியமித்திருக்கலாம். அவ்விதம் நியமித்திருந்தால் வங்கிப் பங்குகளை சரிவிலிருந்து தடுத்திருக்கலாம்.

முன்கூட்டியே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல், சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது முறையல்ல. எனவே இந்த விஷயத்தில் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு ஐசிஐசிஐ வங்கி நிர்வாகத்துக்கு உள்ளது. கறை படிந்தவர்களை காக்க நினைப்பதும் வங்கிக்குத்தான் களங்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், பிரச்சினை வெளியான சமயத்திலிருந்து இதுவரை வாயே திறக்காத சந்தா கோச்சார், பங்குகளை திரும்பப் பெறப் போவதாக அறிவித்தவுடன் வங்கியின் முடிவு ஏமாற்றமளிக்கிறது, அதிர்ச்சியாக உள்ளது என்று கூறுவதும் சரியில்லை. தன் மீது தவறில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x