Last Updated : 18 Feb, 2019 11:11 AM

 

Published : 18 Feb 2019 11:11 AM
Last Updated : 18 Feb 2019 11:11 AM

வண்ணங்கள் ஏழு 42: கோமதியாக மாறிய கோபால்

யேசு பிரான், அன்னை மரியாள், அம்மன், கிருஷ்ணன் எனத் தெய்வ ரூபங்களை, களிமண்ணைக்கொண்டு தத்ரூபமாக வடிக்கும் கலைஞர் கோமதி. கல்லிலே கலைவண்ணம் காணும் சிற்பிகளைப் போல் இவர் தொடும் களிமண், கலைச் சிற்பமாகிறது.

சென்னை, ஜாபர்கான்பேட்டையில் இருக்கும் கோமதியை ஆடி மாதம், நவராத்திரி போன்ற நாட்களில் களிமண் உருவங்கள் செய்வதற்கு நாடிவருகின்றனர். களிமண் உருவங்கள் செய்யும் வேலை இல்லாதபோது என்ன செய்வீர்கள் என்று கேட்டால், அவர் பட்டியலிட்ட ஒரு நாளின் வேலைகள் நம்மை மலைக்க வைக்கின்றன.

vannam-2jpg

“கிருபா அம்மாவின் எச்.ஐ.வி. தடுப்பு தன்னார்வ அமைப்பிலும் தற்போது பணி புரிந்து வருகிறேன். எங்கள் பகுதி சுய உதவிக்குழுவிலும் இணைந்து பணியாற்றி வருகிறேன். இதன்மூலம் அம்மா உணவகத்திலும் வேலை செய்து வருகிறேன். காலை ஆறு மணி தொடங்கி 12 மணிக்குத் திரும்பி விடுவேன். அதற்குப் பிறகு சைதாபேட்டை அலுவலகத்தில் எச்.ஐ.வி. விழிப்புணர்வுப் பணிக்குச் சென்று விடுவேன். ஐந்து மணிக்கு மேல் பல்லாவரத்தில் ஒரு மருத்துவரின் கிளினிக்கில் டோக்கன் கொடுக்கும் பணியைச் செய்கிறேன். இதுதான் எனது ஒரு நாளைய ஷெட்யூல்” என்கிறார் கோமதி.

கோமதிக்குச் சொந்த ஊர் திண்டிவனம். அப்பா, அம்மா வைத்த பெயர் கோபால். கோபால் 13 வயதிலேயே தன்னைப் பெண்ணாக உணர்ந்திருக்கிறார்.

“அண்ணன், அக்காவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அண்ணன் வீட்டில்தான் இருக்கிறேன். அண்ணியின் கையால்தான் சாப்பிடுகிறேன். அண்ணனின் மகளைத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறேன்.

என்னுடைய பெண் தன்மை யால் பள்ளி இறுதிவரைகூடப் படிக்க முடியவில்லை. அதன் பிறகு வேலைக்குச் சென்ற இடத்திலும் இது தொடர்ந்தது. ஷூ கம்பெனியில் வேலைக்குச் சென்றபோது நான் வளர்த்திருந்த முடியை இரவு தூங்கும்போது, பசை கொண்டு தரையில் ஒட்டிவிட்டனர். அதன் பிறகு தலைமுடியைக் கத்தரித்துத்தான் எடுக்க முடிந்தது. எனக்குச் சிறுவயதிலேயே ஆன்மிகத்தில் ரொம்பவும் ஈடுபாடு இருந்தது. களிமண்ணில் விதவிதமான உருவங்களைச் செய்துவந்தேன்.

இதை யாரிடமும் நான் கற்றுக்கொள்ளவில்லை. நானே இந்தக் கலையை வளர்த்துக் கொண்டேன். ‘ஸ்வாம்’ எனும் அமைப்பில் உதவியாளராகச் சேர்ந்தேன். அதோடு என்னுடைய குரு ராஜி மாரியாத்தாவின் அறிமுகம் கிடைத்தது. என்னுடைய அப்பா, அம்மாவுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் எனக்கு அவர் உதவினார். அவர் தன்னுடைய மகளாகத்தான் என்னை நினைக்கிறார். அவரின் மூலமாகப் பல கோயில்களில் திருவிழாக்களின் போதும் ஆலய விழாக்களை ஒட்டியும் சிலைசெய்து கொடுப்பேன்” என்னும் கோமதியின் வாழ்விலும் ஒரு காதல் கடந்து சென்றிருக்கிறது.

காதல் தந்த தெளிவு

“எனக்கும் ஒரு பையனின் மேல் காதல் இருந்தது. அவனுக்கு டிரைவிங் கற்றுக்கொடுத்து வேலை வாங்கிக் கொடுத்தேன். அவனுடைய கூரை வீட்டுக்குத் தளம் போட்டுக் கொடுத்தேன். ஆனால், என்னை மோசம் செய்துவிட்டு எனக்குத் தெரியாமல் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். அதில் எனக்கு வருத்தம் இல்லை. எனக்குச் சொல்லாமல் செய்துகொண்டான் என்பதில்தான் வருத்தம். சொல்லியிருந்தால் நானே அவனுக்குத் திருமணம் செய்துவைத்திருப்பேன். அதிலிருந்து எல்லோரிடமும் ஒரு இடைவெளியோடுதான் பழகுகிறேன். பிரிவு கொடுக்கும் வலியை நான் மீண்டும் அனுபவிக்க விரும்பவில்லை” என்கிறார்  கோமதி தெளிவுடன்.

நூரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை சமூகப்பணி கல்லூரியின் நிறுவனர் மேரி கிளப்வாலா ஜாதவின் நினைவைப் போற்றும் வகையில் 24-ம் ஆண்டு நினைவுச் சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடந்தது.

vannam-3jpg100 

கல்லூரி தன் வைரவிழா (2012) ஆண்டிலிருந்து சிறந்த சமூக சேவகருக்கு நிறுவனரின் பெயரில் அமைந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான விருது ‘சௌத் இண்டியா பாசிட்டிவ் நெட்வொர்க்’ அமைப்பின் நிறுவனரான  நூரி சலீமுக்கு   வழங்கப்பட்டது. பாராட்டுச் சான்றிதழுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொண்ட இவ்விருது கல்லூரித் தலைவரால் நூரிக்கு வழங்கப்பட்டது.

நூரி 2,500-க்கும் மேற்பட்ட எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தை நிறுவி நடத்திவருகிறார். சமூகச் செயற்பாட்டாளரான இவரையும் திருநங்கை களை மேம்படுத்தி அவர்களைச் சமுதாயத்தின் ஓர் அங்கமாக்கும் பணியையும் கௌரவித்துக் கல்லூரி இவ்விருதை வழங்கியது.

தமிழ்நாடு அரசு இவரின் சேவையை அங்கீகரிக்கும் விதத்தில் தமிழ்நாடு திருநங்கை (டிரான்ஸ்ஜெண்டர்) நல வாரியம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இவரை அங்கீகரித்துள்ளது.

 

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x