பூட்டான் சென்ற தமிழ் என்.சி.சி.மாணவி

பூட்டான் சென்ற தமிழ் என்.சி.சி.மாணவி
Updated on
1 min read

பூட்டான் நாட்டின் இளையோர், விளையாட்டுத் துறை சார்பில் இளையோர் பரிமாற்றத் திட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியாவிலிருந்து 12 என்.சி.சி. மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில் திருச்சியைச் சேர்ந்த ஆர்த்தி ராமு தென்னிந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே மாணவி.

திருச்சியில் பிளஸ் 2 முடித்த இவர், தற்போது கோவையில் உள்ள பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் கல்லூரியில் இளநிலை இயற்பியல் மூன்றாம் ஆண்டு பயின்றுவருகிறார்.

எதிர்காலப் போர் விமானி!

போர் விமானங்களை இயக்கும் பைலட்டாக வேண்டும் என்பது இவருடைய சிறுவயதுக் கனவு. இதனால் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே தேசிய மாணவர் படையில் (என்சிசி) சேர்ந்திருக்கிறார். 2012-ல் டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டிக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான அறுவர் கொண்ட குழுவுக்குத் தலைமை ஏற்றார்.

bhutan-2jpg

பிளஸ் 2 முடித்த பிறகு என்.சி.சி.யில் ஃபிளையிங் ஸ்குவாடு பிரிவு உள்ள கல்லூரியைத் தேடிக் கோவையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்துவருகிறார்.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் என்.சி.சி. சார்பில் பங்கேற்றார். இதில் கலந்துகொள்ள 10 முகாம்களில் கலந்துகொண்டு ஒவ்வொரு முகாமிலும் சிறந்த என்.சி.சி. வீராங்கனையாகத் திகழ வேண்டும். அப்படித் திகழ்ந்தால்தான் அடுத்தடுத்த முகாம்களில் பங்கேற்க முடியும். இப்படியாகக் குடியரசு தின விழா அணிவகுப்பில் நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்ற 2 ஆயிரம் பேரில் 100 பேர் மட்டுமே வெளிநாடுகளுக்கு இளையோர் பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்க முடியும். இத்தனை நிலைகளைக் கடந்து எப்படி பூட்டானுக்குச் சென்றார் என்பதை விவரிக்கிறார் ஆர்த்தி.

படிகளைக் கடந்தால் பறக்கலாம்!

“முதலில் எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல், அளிக்கப்படும் தலைப்பில் உடனடியாக உரையாடுதல், தனித்தனிக் கவாத்துப் பயிற்சி (Individual Drill), கலை நிகழ்ச்சி, துப்பாக்கிச் சுடுதல், நேர்காணல் ஆகியவற்றில் அதிகப் புள்ளிகள் பெற வேண்டும். இவற்றில்

அதிகப் புள்ளிகள் பெற்றதால் இளையோர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பூட்டான் நாட்டுக்குச் செல்லத் தேர்வானேன்.

இதன் மூலம் பூட்டானின் 111-வது தேசிய விழாவில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது. பூட்டானின் கல்வி அமைச்சர், ராணுவத் தளபதி, ஸ்கவுட் மாணவர்கள், இந்தியத் தூதர், நேபாள நாட்டிலிருந்து வந்திருந்த என்.சி.சி. மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பூட்டானின் பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறை, அரசு நிர்வாகம், இந்தியா செய்துவரும் உதவிகள் உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொண்டோம்.

என்.சி.சி.யில் இடம்பெற்றுள்ளதன் மூலம் பொது அறிவு, தன்னம்பிக்கை, ஒழுக்கம், நேர மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு நற்பண்புகளைக் கற்றுக்கொண்டேன். இரண்டு முறை சிறிய ரகப் பயிற்சி விமானத்தை உடனிருந்து இயக்கும் வாய்ப்பையும் பெற்றேன். பெற்றோர், கல்லூரி நிர்வாகம், பயிற்சியளித்த என்.சி.சி. அலுவலர்கள் அனைவரின் ஒத்துழைப்பாலேயே இந்தப் பயணம் சாத்தியமாயிற்று” என்கிறார் பூட்டானில் வீறுநடை போட்டுவிட்டு பறக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் ஆர்த்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in