

பொதுத் தேர்வு என்ற முறைக்குள் நம் மாணவர்கள் முதன்முறையாக அடியெடுத்து வைப்பது பத்தாம் வகுப்பின் இறுதியில்தான். அதிலும் மொழித் தாளே அதன் முதல் படி. வருடம் முழுவதும் படித்துத் தயாரான தமிழ் மொழித் தாளில் தேர்வையொட்டி கவனத்தில் கொள்ள வேண்டியவை:
தமிழைப் பொறுத்தவரை திருத்தமான கையெழுத்தில் அடித்தல் திருத்தல் இன்றி எழுதுவது அவசியம். பக்கத்துக்கு 15 முதல் 20 வரிகள் எழுதலாம்.
அதிக மதிப்பெண்களுக்கு அனைத்துப் பாடங்களையும் புரிந்து படிப்பது அவசியம். அலகிடுதலில் நிறைவாக ஓரசைச் சீர் எழுதுவது அவசியம். கட்டுரை எழுதும்போது உள் தலைப்புகள் குறிப்பிட்டு எழுத வேண்டும்.
முதல் தாளின் வினா அமைக்கும் பகுதியில் கவனக் குறைவில் தவறிழைப்பதையும் இரண்டாம் தாளில் கதை அல்லது கவிதை எழுதுதலில், இரண்டையும் எழுதுவது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
பா நயம் பாராட்டலில் எதுகை, மோனை ஆகியவற்றைத் தனியாக அடிக்கோடிட்டுக் காட்டலாம்.மொழிபெயர்ப்புப் பகுதியில் ஒரே பத்தியாக எழுதாமல் தனி வாக்கியங்களாக எழுதுவது நல்லது. படிவம் நிரப்புதலில் 3 விதப் படிவங்களில் உரியதை அடையாளம் கண்ட பிறகு பதிலளிக்கத் தொடங்கலாம்.
‘சரியான விடைக்கு வினா அமைக்கும்’ பகுதியில் ‘யார், எங்கே, எது’ உள்ளிட்ட வார்த்தைகளைக்கொண்டே வினா அமைக்க வேண்டும். 2 மதிப்பெண் பகுதியில் இடம்பெறும் ‘கூற்று வினா’ பெரும்பாலும் தொடர்நிலைச் செய்யுளில் இருந்தே கேட்கப்படும்.
பாடலில் இருந்து வினாக்களுக்கு விடையளிக்கும் பகுதியில் பாடலின் ஆசிரியர், உரிய தலைப்பு, பாடலில் இடம்பெறும் எதுகை மோனைகள், பாடலில் இடம்பெறும் இலக்கணக் குறிப்புகள், கடினச் சொல்லுக்குப் பொருள் காணல் உள்ளிட்ட வகை வினாக்களே இடம்பெறும்.
உரைநடை பத்தி கொடுத்து அதிலிருந்து வினாக்கள் கேட்கப்படுவதில், 4 வினாக்கள் பத்தியின் உள்ளிருந்தும், ஏனைய ஒன்று பத்திக்கான தலைப்பு குறித்ததாகவும் அமையும். பத்தியின் மையப்பொருளையே தலைப்பாக்க வேண்டும். கட்டுரைகள் அதிகபட்சம் 3 பக்கங்களுக்குள் அமைவதுடன், அவசியமான மேற்கோள்கள், பாடல் வரிகள் ஆகியவற்றைச் சேர்ப்பது நல்லது.
கடிதம் பகுதியில் கூட்டு விண்ணப்பம் தொடர்பான கடிதம் அடிக்கடி இடம்பெறுகிறது. கடிதம் எழுதுதலில் அதன் அமைப்பு, படிநிலைகளைச் சரியாக எழுதுவது மதிப்பெண் இழப்பைத் தடுக்கும்.
மாற்றிக் கேட்கப்படும் வினாக்கள்
வினாத்தாள் அமைப்பில் நேரடியான மாற்றங்கள் இல்லாதபோதும், வினாக்கள் கேட்கப்படும் விதத்தில் மாற்றங்கள் இருக்கும். இதன்படி புளூ பிரிண்ட் அடிப்படையில் பாடத்தின் பின்பகுதி வினாக்களில் இருந்து கேட்பதற்கு அப்பால், பாடத்தின் உள்ளிருந்தும் வினாக்களை எதிர்பார்க்கலாம். மனப்பாடம்செய்வதைத் தவிர்த்து, வினாத்தாளின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துப் பதிலளிக்கும்படியான வினாக்கள் இடம்பெறும்.
குறிப்பாக, ஒரு மதிப்பெண் செய்யுள் பகுதியில் நூல் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு ஆகியவற்றையும் படிப்பது முக்கியம். இவற்றுடன் 2 மதிப்பெண் பகுதியில் குறிப்பிட்ட செய்யுள் பகுதியின் உள்ளடக்கக் கருத்தை எழுதத் தெரிந்திருப்பது அவசியம். பாடத்தின் பின்பகுதி வினாக்களைச் சில மாற்றங்களுடன் கேட்கவும் வாய்ப்புள்ளது.
எனவே, வினாக்களை நன்கு வாசித்து அவை வேறு எவ்வகையில் கேட்கப்படலாம் என்பதையும் உணர்ந்து படிப்பது முக்கியம். உதாரணத்துக்கு, அரையாண்டுத் தேர்வில் ‘கடல் வணிகம் பற்றி எழுதுக?’ என்ற புத்தக வினா, ‘கடல் வணிகத்தில் தமிழர் எவ்வாறு சிறந்து விளங்கினர்?’ என்பதாகக் கேட்கப்பட்டிருந்தது.
கடினமாகக் கருதும் இரண்டாம் தாளின் இலக்கணப் பகுதியில் இந்த வகையிலான கவனம் சற்றுக் கூடுதலாகத் தேவைப்படும். இலக்கணப் பகுதியையும் புரிந்து படிப்பது அவசியம். அரபு எண்களுக்கான தமிழ் எண்கள் எழுதுவதை நேரடியாக கேட்காமல், ஒரு வினாவில் அவை அடங்கி இருக்குமாறு கேட்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு.
தேர்ச்சி நிச்சயம்
முந்தைய வினாத்தாள்களின் முக்கிய வினாக்களைத் தொகுத்துப் படித்தாலே தேர்ச்சி எளிது. 1, 2 மதிப்பெண் வினாக்கள் படிப்பதற்கும் எழுதுவதற்கும் சுலபமானவை. மனப்பாடப் பகுதி, எளிதான உரைநடைப் பகுதி வினாக்கள் போன்றவை தேர்ச்சிக்கு அடிப்படையானவை.
இரண்டாம் தாளில் பா நயம் பாராட்டுதலில் எதுகை மோனை ஆகியவற்றை வரிசைப்படுத்துவது மூலமும், வங்கிப் படிவம், கடிதம் எழுதுதல் ஆகியவற்றிலும் சராசரிக்கான மதிப்பெண்களை எட்டலாம். தமிழை இதுவரை படிக்காதவர்கள்கூட இனியேணும் தங்கள் வசதிக்கேற்ப 20 நாட்களை ஒதுக்கித் தினசரி ஒரு பிரிவுக்கு நேரமும் கவனமும் செலுத்தினால் தமிழில் தாராள மதிப்பெண்களை உறுதி செய்யலாம்.