Published : 29 Jan 2019 10:47 AM
Last Updated : 29 Jan 2019 10:47 AM

துணிந்து கனவு காண்: டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் புதுமை யோசனைப் போட்டி

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. ‘துணிந்து கனவு காண்’ என்ற புதுமை யோசனைப் போட்டியை அறிவித்துள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் கருத்துருக்களையும் புதிய சிந்தனைகளையும் பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்பு செயல்திறனை அதிகரிக்க, பொதுமக்களிடமிருந்தும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிடமிருந்தும் புதுமையான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் யோசனைகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை பரிசுத்தொகையும் ராணுவ விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலும் கிடைக்கும்.

யார் விண்ணப்பிக்கலாம்?

18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் இதில் கலந்துகொள்ளலாம். இந்தியத் தொழில் கொள்கை, முன்னேற்றத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியர்களால் நடத்தப்படுகிற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இதில் பங்கு பெறலாம்.

பரிசுத்தொகை

தனிநபர்களுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் தனித்தனியாக மூன்று பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் வெல்லும் தனிநபர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.4 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும். நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ. 8 லட்சம், மூன்றாவது பரிசாக ரூ. 6 லட்சம் வழங்கப்படும்.

தேர்வுமுறை

இரண்டடுக்குத் தேர்வு முறையில் யோசனைகள் தேர்ந்தெடுக்கப்படும். துறைசார்ந்த வல்லுனர்கள் முதல் சுற்றில் யோசனைகளை ஆய்வு செய்வார்கள். பிறகு மற்றொரு வல்லுனர் குழு பரிசுக்குரிய யோசனைகளைத் தேர்ந்தெடுக்கும்.

எந்தெந்த தலைப்புகளில் விண்ணப்பிக்கலாம்

ரோபோ

# விலங்குகளைப் போல பல கால்களுள்ள ரோபோக்கள் எந்த நிலப்பரப்பிலும் இயங்கும். இப்படிப்பட்ட உணரி நுட்பங்கள், கட்டுப்பாடு ஆகியவைகளைப் பற்றிய புதுமையான யோசனைகள்.

# கருவிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் கட்டுபாடுப் பற்றிய யோசனைகள்.

# ஆளில்லா விமானங்கள் தொடர்பான புதுமையான யோசனைகள்.

# ஆளில்லா விமானங்களும் தரை சார்ந்த ரோபோக்களும் கூட்டாக இயங்கி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டிய தேவை உண்டு. இவை சார்ந்த யோசனைகள்.

இணையத் தாக்குதல் தடுப்பு

இணையத் தாக்குதல்களை எதிர்கொள்ள ஆழ் கற்றல் கருவி கற்றல் நுட்பங்கள் சார்ந்த இணையத் தாக்குதல் தடுப்பு யோசனைகள்.

ராணுவவீரர் அணிந்து கொண்டு செல்லும் வகையிலான தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் சார்ந்த யோசனைகள்.

எல்லைப் பாதுகாப்புப் பணியில் பயன்படும் அறிவாற்றலுடைய உணரிகள் அவை சார்ந்த தொழில்நுட்பங்களைப் பற்றிய யோசனைகள்.

ஏவுகணைத் தொழில்நுட்பம்

ஏவுகணைகளின் இறக்கை வால் ஆகிவற்றை இயக்கும் கருவிகள் அளவில் சிறியதாக்கப்பட்டால் ஏவுகணையும் மிகச் சிறியதாக வடிவமைக்கப்படலாம். இது தொடர்பான யோசனைகள்.

காம்போஸிட்ஸ் எனப்படும் கூட்டுக் கலவை விமானத்திலும் ஏவுகணைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இக்கூட்டுக்கலவையால் செய்யப்பட்ட பாகங்களின் புதுமையான இணைப்பு தொழில்நுட்ப யோசனைகள்.

மருத்துவத் தொழில்நுட்பங்கள்

போர்க் களத்தில் காயம்பட்டவரின் உயிர்காக்க ரத்தத்தை உறைய வைக்கும் நுட்பங்கள் தொடர்பான ஆலோசனைகள் தேவை.

ஆக்சிஜன் குறைவு படும் உறுப்புகளுக்குத் திசுக்களின் மூலமாகச் செயற்கையாக ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் நுட்பம் தேவை.

இவற்றைத் தாண்டியும் புதுமையான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிப்பது எப்படி?

உங்கள் யோசனையை 500 சொற்களில் எழுதி www.drdo.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சுய குறிப்பு, யோசனையைப் பற்றிய சுருக்கம், யோசனையைச் செயல்படுத்த தேவைப்படும் கால அவகாசம், நீங்கள் முன்மொழியும் யோசனை இந்தியப் பாதுகாப்புக்கும் விண்வெளிக்கும் எந்த வகையில் உதவும் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். பரிசுத்தொகை எப்படிப் பயன்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒரு தனிநபரோ நிறுவனமோ அதிகபட்சமாக ஐந்து யோசனைகளை அனுப்பலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 பிப்ரவரி 2019.

துணிந்து கனவு காண்போம்!

- வி.டில்லிபாபு, தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x