Last Updated : 25 Jan, 2019 10:14 AM

 

Published : 25 Jan 2019 10:14 AM
Last Updated : 25 Jan 2019 10:14 AM

மாற்றுக் களம்: நாங்கள் இறப்பதற்காக வரவில்லை!

இரட்டைக் குவளை முறையை ஒழித்தாலும் ஒரு ஏளனப் பார்வையில்கூடத் தீண்டாமையை உணர்த்த முடியும். அறிவியல் எழுத்தாளராக உருவெடுக்கக் கனவு கண்ட ரோஹித் வெமுலாவை மூன்றாண்டுகளுக்கு முன் நட்சத்திரங்களிடம் தஞ்சமடையவைத்தது இதுபோன்ற எண்ணற்ற ஏளனப் பார்வைகளே.

தேசத்தின் பெருமைக்குரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டுவந்த தலித் மாணவரான அவரின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அவரைத் தற்கொலை என்ற எல்லைக்குத் தள்ளிய சூழலும் இன்றுவரை அங்கு மாறவில்லை.

இந்நிலையில், ரோஹித் வெமுலாவின் மூன்றாவது நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக ஜனவரி 17 அன்று தொடங்கி நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் ‘வீ ஹேவ் நாட் கம் ஹியர் டு டை’ (We Have Not Come Here To Die) ஆவணப்படம் திரையிடப்பட்டுவருகிறது. ஆனால், அவர் விளிம்புக்குத் தள்ளப்பட்டதுபோலவே அவரைப் பற்றிய படமும் ஆங்காங்கே முடக்கப்பட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நாக்பூரிலும் கடந்த வாரம் சென்னை புத்தகக் காட்சியிலும் ‘வீ ஹேவ் நாட் கம் ஹியர் டு டை’ படத்தின் திரையிடலைக் காவல் துறை தடுத்து நிறுத்தியது.

மாணவர்களை ஒன்றிணைத்த மரணம்

பிரிவினைவாத அரசியல், பெண்களின் உரிமைக்கான சட்டப் போராட்டம், சிவில் உரிமைப் பிரச்சினைகள் உள்ளிட்ட தலைப்புகள் குறித்துக் கடந்த 30 ஆண்டுகளாக ஆவணப்படங்கள் எடுத்துவரும் தீபா தன்ராஜ் இயக்கியிருக்கும் படம் இது. ‘வாட் ஹேப்பண்ட் டு த சிட்டி’ (What Happened to the City?), ‘இன்வோக்கிங் ஜஸ்டிஸ்’ (Invoking Justice), ‘ த அட்வகேட்’ (The Advocate) உள்ளிட்ட அவருடைய ஆவணப்படங்கள் ஏற்கெனவே அதிர்வலைகளை ஏற்படுத்தியவை. சிறந்த ஆவணப்பட இயக்குநருக்கான லெனின் விருது 2016-ல் இவருக்கு வழங்கப்பட்டது.

அவர் தற்போது இயக்கித் தயாரித்திருக்கும் ஆவணப்படம் ‘வீ ஹேவ் நாட் கம் ஹியர் டு டை’ ரோஹித் வெமுலாவின் மரணச் செய்தியுடன் தொடங்குகிறது. கல்வி அமைப்புக்குள் சூட்சுமமாக அரங்கேற்றப்படும் சாதிய வன்கொடுமையால் ரோஹித் வெமுலா எப்படி விளிம்புக்குத் தள்ளப்பட்டார் என்பதையும் அவருடைய மரணம் நாடு முழுவதும் மாணவர்களை எப்படி ஒன்றிணைத்திருக்கிறது என்பதையும் படம் காட்சிப்படுத்துகிறது.

அதேநேரத்தில் அவருடைய மரண வழக்கில் அரசியல் ஆதாயம் இருப்பதைச் சுதாரித்த பிறகே முற்போக்கு அமைப்புகளும் அனேக எதிர்க்கட்சிகளும் கேள்வி கேட்க முனைந்திருக்கின்றன என்பதைப் படம் தொட்டுக்காட்டுகிறது. ஒரு மரணம் கல்வி நிலையங்களுக்குள் உலாவும் சாதியப் பாகுபாட்டை எவ்வாறு பேசுபொருளாக மாற்றி இருக்கிறது என்பதை வெமுலாவின் இருப்பையும் மரணத்தையும் மையமாக வைத்துக் கடந்த மூன்றாண்டுகளில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்து ஆவணப்படுத்தி இருக்கிறார் தீபா தன்ராஜ்.

மனசாட்சியை உலுக்கிய கடிதம்

தலித் மாணவர் என்ற காரணத்தால் மட்டுமே ரோஹித் வெமுலா விளிம்புக்குத் தள்ளப்படவில்லை. இன்றைய நவீனச் சூழலில் சாதியம் எத்தனை நுட்பமாகவும் ஆழமாகவும் காலூன்றி இருக்கிறது என்பதை இனம் கண்டு அவற்றை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்பிய செயற்பாட்டாளர் அவர். இதனால்தான் அவருடைய இருப்பு ஹைதராபாத் பல்கலைக்கழகம் தொடங்கி மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள்வரை பலரின் கண்களை உறுத்தியது என்பதைப் படம் சுட்டிக்காட்டுகிறது.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக அவர் எழுதிய கடிதம் ஒட்டுமொத்த இந்திய மனசாட்சியை உலுக்கியெடுத்தது. இதை தீபா தன்ராஜ் படம் முழுவதும் பதிவு செய்திருக்கிறார். ரோஹித் வெமுலாவின் இறுதிக் கடிதத்தை மையப்படுத்தி ஆவணப்பட இயக்குநர் ராமச்சந்திரா இயக்கிய ‘ த அன்பியரபிள் பியிங் ஆஃப் லைட்னெஸ்’ (The Unbearable Being of Lightness) ஆவணப்படம் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இரும்புக்கரங்களை மீறியே 2017-ல் இணையத்தில் பதிவேற்றப்பட்டது என்பது வேறு விஷயம்.

maatru-2jpgதீபா தன்ராஜ் right

விதைக்கப்பட்டிருக்கும் போராளி

ஆவணப்படங்கள் என்றாலே படத்தில் கையாளப்படும் கருவின் சமூக, அரசியல், பொருளாதாரப் பின்புலத்தை அறிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் விளக்கும் காட்சிகள் இடம்பெறுவதுண்டு. ஆவணப்படம் என்ற வடிவத்தைச் சலிப்பூட்டக்கூடிய ஒன்றாக மாற்றுபவை இத்தகைய அம்சங்களே. ஏனென்றால் அங்கே காட்சி ஊடகத்தின் வசீகரம் அடிபட்டுப்போகிறது. இந்தச் சிக்கலைத் திறம்படக் கையாண்டிருக்கிறார் தீபா தன்ராஜ்.

தீவிரமான காட்சிகள் வழியாகவே படம் முழுவதையும் உருவாக்கியிருக்கிறார். ‘ரோஹித் வெமுலா தலித்தே இல்லையா?’, ‘வெளிவாடா என்ற பதாகையோடு வெமுலாவும் அவருடைய நண்பர்களும் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே போராட்டத்தில் இறங்கியது ஏன்?’ போன்ற கேள்விகளுக்குப் படம் அதுதொடர்பான காட்சிகள் வழியாகவே பதிலளிக்கிறது.

‘நான் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறேன்’ என்று முழங்கிய பகத்சிங்கைப் போல விதையாய் விழுந்து மாணவர் சமூகத்தை விழித்தெழ வைத்திருக்கும் ரோஹித் வெமுலாவின் வாழ்க்கையையும் மரணத்தையும் புரிந்துகொள்ள உதவும் ஆவணப்படம் இது.

தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x