Published : 06 Jan 2019 10:17 AM
Last Updated : 06 Jan 2019 10:17 AM

கற்பிதமல்ல பெருமிதம் 38: திருமணம் ஏன் எதற்கு எப்படி?

சிந்து காதல் திருமணம் செய்தவர். ஆனால், மணமான ஆறு மாதத்துக்குள் திருமண வாழ்வில் கசப்புதான் மிஞ்சியது. தொடர்ந்து கசப்பைச் சுவைக்க விரும்பாமல் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க நினைத்தார். அவருடைய கணவனுக்கு அதில் உடன்பாடில்லை. அவர் போகுமிடமெல்லாம் துரத்தித் துரத்தி வந்து பயமுறுத்தினார். சிந்து யார் வீட்டில் தங்கினாலும், அங்கு வந்து பிரச்சினை செய்தார்.

அந்தப் பெண்ணுக்கும் பையனுக்கும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே காதல். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்ததாக அவன் நம்பினான். ஆனால், கல்லூரி போக ஆரம்பித்த பிறகு அவள் பேச்சில், செய்கையில் மாறுதல் தெரிய ஆரம்பித்ததாக அவன் உணர்ந்தான். அவள் கல்லூரி இறுதி ஆண்டை முடிக்கும்போது அவர்களுக்குள் அடிக்கடி ஏற்பட்ட சண்டையில் உறவு முறிந்தது. அவள் வேறொருவனை மணந்தபோது அவன் நொறுங்கிப் போனான்.

காதல் என்பது இரு மனங்களின் மனமொத்த சங்கமம் என்று அவள் நம்பினாள். காதலித்தவன் நமக்குள் ரகசியங்கள் எதற்கு, ஒளிவு மறைவு இல்லாததாக நம் உறவு இருக்க வேண்டும் என்று அவன் சொன்னதை நம்பினாள். தன் மொபைல் போன் தொடர்பு எண்கள், மின்னஞ்சலின் கடவுச்சொல் என எல்லாவற்றையும் காதலில் மயங்கிய தருணத்தில் காதலனிடம் பகிர்ந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இருவருக் குமான உரையாடலில் அவளுடைய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இருந்த பேச்சின் சாராம்சம் வெறுப்பாக, கோபமாக அவனிடம் வெளிப்பட்டது.

காதல் ஏன் வன்மம் ஆகிறது? காதல் ஏன் சந்தேகம் ஆகிறது? இருவர் எதற்காகக் காதலிக்கிறார்கள்? காதலில் முதன்மையாக இருப்பது புரிதல் சார்ந்த உறவின் அடிப்படையா? உருவம் சார்ந்த இனக்கவர்ச்சியா? 18, 20 ஏன் 22, 23 வயது வரைகூட இங்கே பலருக்கும் முதிர்ச்சி வருவதில்லை? இளம் விஞ்ஞானியாக வேலை செய்துவந்த ஒருவர் என்னிடம் சொன்னார்.

“ஒரு பொண்ணை அவ ஸ்கூல் படிக்கறப்பவே மடக்கிடணும். காலேஜ்லாம் போய்த் தெளிவானால், நம்மளைக் கேள்வி கேட்க ஆரம்பிச்சுடுவாங்க”. அன்றைக்குப் பேருந்தில் எனக்கு முன் சீட்டில் இரண்டு கல்லூரி மாணவிகள் பேசிக்கொண்டார்கள். “பைக் வச்சிக்கிட்டு, காசு தாராளமாகச் செலவழிக்கிறவனா அமைஞ்சா நல்லது.

காலேஜ் முடியறவரை ஜாலியா காதலிக்கலாம்” என்றாள் ஒரு பெண். என்ன கணக்கு பாருங்கள்!

காதலின் வகைகள்

அறியாத வயதுப் பெண்ணைக் காதலில் மடக்கிவிட வேண்டும் என்று ஆண் நினைக்கிறான். கல்லூரி வாழ்க்கைவரை ஜாலியாக இருக்கவே காதல் என்று அந்தப் பெண் நினைக்கிறாள். காதலில்தான் எத்தனை வகை? தான் காதலிப்பவன்/ள் மோசமாக இருந்தாலும், தன் அன்பால் அவனை/ளை மாற்றிவிடலாம் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அவன்/ள் மோசமானவனாக இருந்தாலும், காதல் என்பது புனிதமானது, ஒரு முறைதான் வரக்கூடியது என்று தெரிந்தே பிரச்சினைகளில் போய்ச் சிலர் மாட்டிக்கொள்கிறார்கள்.

காதலால் வரக்கூடிய வன்மம், காதலிக்கும் இருவருக்குள் மட்டும் வருவதில்லை. அதையொட்டி முன்னாள் காதலி, காதலன், பெற்றோர் இவர்கள் மேலும் பாய்கிறது. இதற்கெல்லாம் காரணங்கள் என்ன?

காதலின் இலக்கு எது?

ஒருவருக்குப் பூக்கள்மீது காதல், நகையின் மீது காதல், வீடு, கார் போன்ற பொருட்களின் மீதெல்லாம் காதல் வரும்போது என்ன நடக்கிறது? அதை அடையும்வரை மனம் அதற்காக ஏங்குகிறது. வாழ்க்கையில் உழைத்தோ, வேறு குறுக்கு வழிகளிலோ அதை அடைய நினைக்கிறார்கள். பொருட்கள் மீதான இதே நுகர்வு கலாச்சாரம்தான் ரத்தமும் சதையுமாக இருக்கும் மனித உறவுக்குள்ளும் நீள்கிறது.

எப்பாடுபட்டாவது தனக்கு வேண்டியதை அடைந்தே தீர வேண்டும் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். தான் விரும்பும் பொருட்களை அடைந்த பின் அதை அதீதப் பற்றுடன் பற்றிக்கொள்கிறார்கள். அல்லது அடைவது மட்டுமே லட்சியம் என்று செயல்படுபவர்கள் அதை அடைந்தவுடன் அதன் மீதான ஈர்ப்பை இழந்துவிடுகிறார்கள். இப்படித்தான் மனித உறவுகளையும் கையாள்கிறார்கள்.

ஒருவர் மீதான அதீதப் பற்று, பற்றுக் கொண்டவரையும் கஷ்டப்படுத்துகிறது. அதை அவர் யார் மேல் செலுத்துகிறாரோ அவர்களையும் நெருக்குகிறது. அதேபோல் அடைந்தவுடன் வரும் ஈர்ப்புக் குறைவு உறவுகளில் யாரோ ஒருவருக்கோ இருவருக்குமோ ஏமாற்றத்தைத் தருகிறது.

எப்படிச் சிந்திப்பது?

மனித மனம் தொடர்பான விஷயங்களுக்கு ரெடிமேடாகத் தீர்வுகள் சொல்லிவிட முடியாது. சிந்தனைகளை ஒருமுகப்படுத்திச் சிந்திக்கத் தெரிய வேண்டும். எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதைச் சிந்திக்கத் தெரிய வேண்டும்.

பொதுவாக, நாம் சிந்திக்கும்போது ஏற்கெனவே எடுத்துவிட்ட முடிவுகளை நியாயப்படுத்தும்படியாகவே சிந்திப்போம். இது மனித இயல்பு. ஆனால், இதை விடுத்து வேறுவிதமாகச் சிந்திக்கத் தெரிய வேண்டும். இந்த உறவால் எனக்கு என்ன ஆதாயம்? நான் இழக்கப்போவது என்ன என்ற லாப நஷ்டக் கணக்கல்ல உறவு.

நான் யார், என்னுடைய வாழ்க்கையின் கனவு என்ன, நான் எந்த மாதிரி நபராக அறியப்பட/இருக்க விரும்புகிறேன், என்னை நான் எப்படிச் செதுக்கிக்கொள்ளப் போகிறேன், இந்த மொத்தச் செயல்பாட்டில் நான் எந்த மாதிரி நபருடன் என் வாழ்வை இணைத்துக்கொள்ளப் போகிறேன், அவர்கள் கனவு என்னுடையதாக இல்லாவிட்டாலும் அடிப்படை அறம்சார்ந்த விஷயங்களில் அன்றாட வாழ்வின் நிலைப்பாடு என்ன, இதில் இருவரின் பார்வையும் வாழ்வியல் நோக்கமும் வேறாக இருக்குமானால் பரஸ்பரப் புரிதல் அடிப்படையில் எதைச் சரிசெய்யப் போகிறேன்,  எவையெல்லாம் இருவரது வாழ்க்கையின் அடிப்படை ஆதார நம்பிக்கைகளைப் புரட்டிப்போடும் எனச் சிந்திக்க வேண்டும்.

தெளிவோடு காதலிப்போம்

கோளாறானவர்தான்; ஆனால், எனக்கு இவர்மேல் காதல் வந்துவிட்டதே என்ன செய்வது என்றால் கோளாறு அந்த நபரிடம் இல்லை. நம்மிடம்தான் இருக்கிறது என்று பொருள். முதலில் நன்றாகத்தான் இருந்தான்; காதலிக்கும்போது காட்டிய முகம் வேறு என்றால் அந்த ‘உண்மையான’ முகத்தை உணராமல்போனது நம் கோளாறுதான். நமக்குள் தெளிவில்லை.

நமக்குள் குழப்பங்கள் இருக்கும்போது, கண்மூடித்தனமாக நம்பிவிட்டுப் பின்  நான் சரி, அவர்கள்தான் கோளாறு என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அந்த நபர் கோளாறானவர் என்று மற்றவர்களுக்குத் தெரிந்தது எப்படி உணர்வும் உள்ளுமாகக் காதலித்தவருக்குத் தெரியவில்லை? ஒன்று அடி முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது ‘அதிபுத்திசாலியாக’ இந்த உறவின் பிணைப்பு குறித்த உள்நோக்கங்களுடன் செயல்பட்டு இருக்க வேண்டும்.

காதலிப்பதற்கு முன் உங்களை நீங்களே ஓராயிரம் முறை கேள்வி கேட்டுச் செதுக்கிக்கொள்ளுங்கள்.  உங்களை நீங்கள் உணர்ந்துகொண்ட பின் உங்களுக்கான துணையின் தேவை பற்றி யோசியுங்கள். ஏனென்றால், இன்று பல திருமணங்களில் துணையின் தேவை பற்றி உணராமலே பலரும் அதற்குள் இறங்கிவிடுகிறார்கள். எல்லோருக்கும் ஏதாவது ஒரு உறவின் வசீகரம் வேண்டியிருக்கிறது.

எல்லா டி.வி. தொடர்களிலும் வருகிற வசனம், “எனக்குன்னு யார் இருக்கா?” என்பதாகவே இருக்கிறது. இதற்காகவா நாம் உறவைத் தேடுகிறோம்? உண்மையில் சொல்லப்போனால் யாரும் யாருக்காகவும் இல்லை. நமக்காக நாமே இல்லாதபோது நமக்காக வேறு யாரோ எப்படி இருக்க முடியும்? முதலில் நமக்கான நாம் யார் என்று உணர்வோம்; பின்னர் செய்வோம் காதலை.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
| ஓவியம்: அ. செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x