Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM

ரோடியோலா என்னும் சஞ்சீவினி

இமயமலைச் சிகரத்தின் குன்றுகளில் வளரும் ஒரு மூலிகைச் செடி உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புராணக் கதைகளில் கூறப்படும் சஞ்சீவினியைப் போன்றதொரு மூலிகை இது.

அத்துடன் மலைப் பகுதியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ப உடலைத் தகவமைத்துக் கொள்ளவும், கதிரியக்கப் பாதிப்பைத் தடுக்கவும் இந்த மூலிகை உணவு உதவுவதாகத் தெரியவந்துள்ளது.

ராமாயணத்தில் லக்ஷ்மணனைக் காப்பாற்ற அனுமன் கொண்டுவந்த சஞ்சீவினி மூலிகை இந்தியாவில் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதா என விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ரோடியோலா (Rhodiola) மூலிகைச் செடிதான் ராமாயணத்தில் சஞ்சீவினி என்று குறிப்பிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

லடாக் பகுதி மக்களிடையே இந்த மூலிகைக்கு ‘சோலோ' என்று பெயர். இதன் நற்பண்புகள் பற்றி அங்குள்ளவர்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. அதேநேரம், இந்தச் செடியின் இலையைக் கீரை போலச் சமைத்து இப்பகுதி மக்கள் உண்கின்றனர். லே பகுதியைச் சேர்ந்த உயர்மலைப் பகுதி ராணுவ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மூலிகைச் செடியின் மருத்துவக் குணங்கள் குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

"உயிர்வேதி ஆயுத யுத்தத்தில் வெளியாகும் காமா கதிர்கள் உடலில் ஊறு ஏற்படுத்தாதவாறு இம்மூலிகையால் தடுக்கமுடியும்" என்கிறார் ராணுவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆர்.பி.ஸ்ரீவாஸ்தவா.

லேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினரும் இந்த அதிசய மூலிகை குறித்துக் கடந்த பத்தாண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

"குறைந்த காற்றழுத்தம், ஆக்சிஜன் குறைவு ஆகியவற்றால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவிகரமாக இருக்கும். அத்துடன் இம்மூலிகைக்கு மனஅழுத்தத்தை குணப்படுத்தும், பசியைத் தூண்டும் அம்சமும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார் ஸ்ரீவாஸ்தவா.

- தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x