Published : 20 Jan 2019 10:14 AM
Last Updated : 20 Jan 2019 10:14 AM

கற்பிதமல்ல பெருமிதம் 40: சமையலறை பெண்ணுக்கு மட்டுமல்ல

பொங்கலுக்கு நாலு நாட்கள் அலுவலகம் விடுமுறை. ஜனவரி முதல் வாரத்திலிருந்தே அந்த நான்கு நாட்களுக்காகத் திட்டமிட்டுக்கொண்டிருந்தாள் நர்மதா.

ஒவ்வொரு முறையும் பொங்கலுக்கு ஊருக்குப் போவது வழக்கம். டிக்கெட் கிடைக்காததால் ஊருக்குப் போகும் திட்டம் கைவிடப்பட்டது. எளிமையாகச் சமைத்துவிட்டு, டி.வி. பார்க்கலாம், கொஞ்சம் வெளியே சுற்றலாம், தினமும் காலை ஏழு மணிவரை தூங்கலாம், ஆற அமர நாளைத் திட்டமிடலாம் என்று கற்பனைக் கோட்டை கட்டினாள் நர்மதா.

இவர்கள் ஊருக்குப் போகாததால், ஊரிலிருந்து வந்த உறவினர் காரில் மைத்துனர் குடும்பமும் மாமனார், மாமியாரும் வந்து சேர்ந்தனர்.

அலுவலக நாட்களிலாவது ஆறு மணிவரை தூங்க முடிந்தது. பண்டிகை நாள் என்று எல்லா நாளும் நாலரை மணிக்கே விழிக்க வேண்டியதாயிற்று.

காலையில் எட்டுப் பேருக்கு டிபன் செய்து கொண்டே மதிய சமையல் வேலையையும் கவனிக்க வேண்டியதாயிற்று. இவர்கள் மட்டுமாக இருந்த குடும்பத்தின் அன்றாட நடைமுறையில் காய்கறிகளை வெட்டுவது, சமையல் வேலை முடிந்த பிறகு மேடையைச் சுத்தம்செய்வது போன்றவற்றைச் செய்யும் கணவன், இப்போது உறவினர்கள் இருப்பதால் அடுக்களைப் பக்கம் வரவில்லை. முதல் நாள் இரண்டு, மூன்று முறை கூப்பிட்டுப் பார்த்தாள். கடுகடுப்பான முகத்துடன் வந்தவன், “யாரும் இல்லாதபோதுதான் உனக்கு உதவி செய்யறேனே, இந்த நாலு நாளாவது கூப்பிட்டு என் மானத்தை வாங்காதே” என்றான்.

“மானம் போகுதா? நம்ம வீட்டு வேலையை நாம செய்யறதுல என்ன மானம் போகுது?” என்றாள் நர்மதா.

“என் தம்பிய பாரு, ஜாலியா உட்கார்ந் திருக்கான். அவன் பொண்டாட்டி அவனைத் தொந்தரவு பண்ணலை” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

இத்தனை நாட்களாகக் கணவன் செய்தது உதவிதானா? வேலையைப் பகிர்ந்தது இல்லையா? அதுவும் உடன்பாடு இல்லாமல்தான் செய்தானா?

நர்மதாவுக்குக் கோபம் முட்டிக்கொண்டு வந்தது. சண்டை போட்டுச் சூழலை சிக்கல் படுத்தவேண்டாம் என்று அமைதியாகி விட்டாள்.

பொங்கல் முடிந்தவுடன் எல்லோரும் கிளம்பவில்லை. சனி, ஞாயிறுவரை இருந்துவிட்டுப் போகலாம் என்று திட்ட மிட்டார்கள். நர்மதாவையும் நடுவில் வந்த இரண்டு வேலை நாட்களில் லீவு எடுக்கச் சொன்னார்கள். நர்மதாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அலுவலகத் தோழி கீதாவின்மூலம், அலுவலக வேலைக்கு வரவேண்டிய கட்டாயம் இருப்பதாக போன் செய்யச் சொல்லி அலுவலகத்துக்கு வந்துவிட்டாள்.

நாலு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் நிம்மதியாக காபி குடிக்க முடிந்தது. மதிய உணவை நேரத்துக்குச் சாப்பிட முடிந்தது. அலுவல் வேலை பெண்களுக்குச் சுமையல்ல; வீட்டுச் சுமையிலிருந்து ஆசுவாசம் என்று தோன்றியது.

விசேஷ நாட்களில் கூடும் சுமை

பண்டிகை நாட்கள், பிறந்தநாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் வீடுகளில் என்ன நடக்கிறது? பெண்கள் அடுப்படியே கதி என்று இருக்க வேண்டியிருக்கிறது. வழக்கமாக ஒரு பொரியல், ஒரு சாம்பார் அல்லது ரசம் என்று செய்யும் வீடுகளில் கல்யாணத்துக்குச் சமைப்பதுபோல் விருந்து வைக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டுவிட்டு மலை விழுங்கிய பாம்புபோல் மதர்ப்புடன் பொழுதை மந்தமாகக் கழிப்பார்கள்.

வேலைக்குப் போகும் பெண்களின் பாடு இன்னும் சிரமம். வார விடுமுறை வரும்போது ஒட்டடையும் அழுக்கு மூலையும் சுத்தம் செய்யப்பட காத்திருப்பதுபோல், பண்டிகை நாட்களின் பெரும்பகுதியைச் சமையலறை விழுங்குகிறது.

காலை டிபன், மதியச் சாப்பாட்டுடன் உணவுத் தயாரிப்பு முடிவதில்லை. பக்கோடா, போண்டா, பஜ்ஜி என மாலை சிற்றுண்டி வேறு. மூன்றாவது நாள் ஆகும்போதே அஜீரணக் கோளாறு ஆரம்பித்துவிடும். பிறகு அதற்கான பத்திய சமையல் வேறு.

வேலைப் பகிர்வே தீர்வு

பண்டிகைகளைக் கொண்டாடுவதும், ஒன்றாக உண்டு களிப்பதும் மகிழ்ச்சிக் குரியவையே. ஆனால், மகிழ்ச்சி எல்லோருக்குமானாதாக வேண்டுமானால், வேலைப் பளுவும் பகிரப்பட வேண்டும்.

பகிர்தல் என்பதில் எல்லோரும் வேலை செய்வது ஒரு தீர்வு. எனக்குத் தெரிந்த சில குடும்பங்களிலும் சில அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் வேறு மாதிரியான தீர்வுகளை அமல்படுத்துகிறார்கள்.

உள்ளூரிலேயே இருக்கும் சகோதர, சகோதரிகளோ பெற்றோரோ திருமணம் ஆன  குழந்தைகளின்  குடும்பங்களோடு இணைந்து திட்டமிட்டுச் செயல்படுத்துகிறார்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒன்று அல்லது இரண்டு உணவுப் பொருட்களை சமைத்துக்கொண்டு ஒரு வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். அந்த வீட்டைச் சேர்ந்தவர்களும் மற்றவர்கள் வருவதற்கு முன்னதாக அவர்கள் ஒப்புக்கொண்ட உணவைச் சமைத்துவிடுகிறார்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அரட்டை அடித்தபடி சாப்பிட்டு, டி.வி. பார்த்து, கேரம் - சீட்டுக்கட்டு போன்றவற்றை விளையாடி, பொழுதை உற்சாகமாகக் கழிக்கிறார்கள்.

தேவையில்லை குற்றவுணர்வு

வேலைப்பகிர்வும் கூட்டுச் சந்தோஷமும் நம் வாழ்க்கை நெறியாக வேண்டுமென்றால், நாம் ஏற்கெனவே சுமந்துகொண்டிருக்கும் சில தளைகளிலிருந்து விடுபட வேண்டும். வீட்டு வேலை, சமையல் என்பது பெண்களின் பொறுப்பு என்பதைக் காலம் காலமாகப் பெண்களின் மண்டைக்குள்ளும் ஆண்களின் மண்டைக்குள்ளும் ஏற்றிவிட்டாரகள்.

வாரம் முழுவதும் வேலைக்குச் செல்வதால், வீட்டில் உள்ளவர்களுக்குச் சரிவர சமைக்க முடியவில்லை என்ற குற்றவுணர்வால் உந்தப்பட்டு விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் பெண்கள் இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்கிறார்கள்.

யார் சுயநலவாதிகள்?

குடும்பத்தில் யாரும் வெளியாட்கள் வராத நாட்களில் கொள்கைரீதியாக ஏற்றுக்கொண்டோ சண்டை வேண்டாம் என்று ‘சமரசம்’ செய்வதாக நினைத்துக்கொண்டோ வீட்டு வேலையில் ‘உதவும்’ ஆண்கள், வேறு ஆட்கள் வரும்பொழுது ‘தன்மான’ச் சிங்கங்களாக வேலை செய்யாமல் கெத்து காட்டுகிறார்கள். இதை உடைக்க வேண்டும். வேலைப் பகிர்வு சமரசம் அல்ல; நியாயம். குடும்பத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வீடு சம்பந்தப்பட்ட வேலைகளைப் பகிர்வதுதான் குடும்பம் என்ற அமைப்புக்கான நியாயம். அந்த நியாயத்துக்குக் கட்டுப்படாதவர்கள் சுயநல வாதிகள். உடன்   இருப்பவர்களின் நலனை, தன்மானத்தை மதிக்கத் தெரியாதவர்கள்.

வீட்டு வேலை அனைவருக்கும் பொது

வீட்டு வேலை செய்யத் தெரியாத ஆண், திருமணம் செய்வது குறித்து யோசிக்க வேண்டும். திருமணத்துக்கு முன் பெண்களுக்கு வீட்டு வேலைகளைப் பழக்குவதுபோல், ஆண்களுக்கும் பழக்க வேண்டும். வீட்டு வேலை செய்தால் ‘கெத்து’ போய்விடும் என்ற எண்ணம் மாறி, பெண்களுக்கு வரும் குற்ற வுணர்வைப்போல் ஆண்களுக்கும் சற்றே வளர்ந்த குழந்தை களுக்கும் வர வேண்டும்.

வெவ்வேறு குடும்பங்கள் இணைந்து உண்ணும்போதும் ஆண், பெண் வேலைப் பகிர்வு நிகழ வேண்டும்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உணவுப் பகிர்வு சாதி, மதம் கடந்த பார்வை வந்தால்தான் சாத்தியம். திரும்பவும் எங்க சாதியைச் சேர்ந்தவருடன்தான் பகிர்வு என்பதும் மாற வேண்டும். சைவம், அசைவ உணவுப் பழக்கம் அவரவர் தேர்வாக இருக்கலாம். ஆனால், அதில்கூட பக்கத்தில் இருப்பவர் அசைவம் சாப்பிட்டால் குமட்டும் என்று டிராமா பண்ணுவதைக் கடக்க வேண்டும். பக்கத்து வீட்டின் அசைவ நெடியை அருவருப்பாகப் பார்த்தவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் குழந்தைகள் வீட்டுக்கும் பேரக் குழந்தைகள் வீட்டுக்கும் போகும்பொழுது சகிக்கப் பழகுகிறார்கள்.

ஓரளவு வசதி இருப்பவர்கள் இப்போதெல்லாம் தீபாவளி நேரத்தில் இனிப்பு, காரம் போன்றவற்றைக் கடைகளில் வாங்குகிறார்கள். முடிந்தவர்களுக்கு இதுவும் தீர்வுதான். சமையலறை பெண்களின்  உலகம் மட்டுமல்ல; உண்ணும் அனைவருக்குமானது.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com
| ஓவியம்: அ. செல்வம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x