Published : 01 Jan 2019 11:24 AM
Last Updated : 01 Jan 2019 11:24 AM

வேலை வேண்டுமா? - ரயில்வேயில் 14 ஆயிரம் பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் இளநிலைப் பொறியாளர், பணிமனை பண்டகக் காப்பாளர், வேதியியல் மற்றும்  உலோகவியல் உதவியாளர் ஆகிய பதவிகளில் 14,033 காலிப்பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ரயில்வே  அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தகுதி

இளநிலைப் பொறியாளர் (பொது) பதவியில் 13,034 காலியிடங்கள் உள்ளன. இதற்குச் சம்பந்தப்பட்ட  பொறியியல் பாடப் பிரிவில் பட்டப் படிப்பு அல்லது பாலிடெக்னிக் டிப்ளமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலைப் பொறியாளர் (தகவல்  தொழில்நுட்பம்) பதவியில் 49 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பதவிக்கு பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., பி.ஜி.டி.சி.ஏ., பி.டெக். (இன்பர்மேஷன் டெக்னாலஜி,  கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிமனை பண்டகக் காப்பாளர் பதவியில் 456 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பதவிக்கு ஏதேனும் ஒரு பொறியியல் பாடத்தில் பட்டம் அல்லது  டிப்ளமா பெற்றிருக்க வேண்டும். வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் பதவியில் 494 காலியிடங்கள் இருக்கின்றன. இதற்கு, இயற்பியல்,  வேதியியல் பாடங்களில் பி.எஸ்சி. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் அவசியம். 

தேர்வு முறை

மேற்குறிப்பிட்ட அனைத்துப் பதவிகளுக்கும் வயது வரம்பு 18 முதல் 33 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5  ஆண்டுகளும் ஓ.பி.சி. எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு  தளர்த்தப்படும். தகுதியானோர் எழுத்துத் தேர்வு (ஆன்லைன்வழி), சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு  கிடையாது. எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடையும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, ஆன்லைன்வழித் தேர்வு, அதற்கான பாடத்திட்டம், தேர்வுக் கட்டணம், தேர்வு மையம், சம்பளம் உள்ளிட்ட விவரங்களைச் சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.rrbchennai.gov.in) விளக்கமாக அறிந்துகொள்ளலாம். பொறியியல் பாடத்தில்  பட்டம் மற்றும் டிப்ளமா பெற்றவர்களும், பி.எஸ்சி. பட்டதாரிகளும் இந்திய ரயில்வே துறையில் சேர இது அருமையான வாய்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x