

ஜனவரி 23: சென்னையில், ஜனவரி 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். இந்த ஒப்பந்தங்களால் வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் பத்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியா: புதிய மன்னர் அறிவிப்பு
ஜனவரி 24: மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா அகமது ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். மலேசியாவின் மன்னராக இருந்த சுல்தான் முகமது வி, அவரது ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்பே இரண்டு ஆண்டுகளில் கடந்த ஜனவரி 6 அன்று பதவி விலகியதால் தற்போது பஹாங் மாகாணத்தின் ஆட்சியாளரான சுல்தான் அப்துல்லா மலேசிய மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஜனவரி 31 அன்று மலேசியாவின் மன்னராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி.-சி44 ஏவுகணை வெற்றி
ஜனவரி 24: இஸ்ரோவின் 46-வது பி.எஸ்.எல்.வி. சி-44 ஏவுகணை ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணையில் ராணுவத்துக்கு உதவும் மைக்ரோசேட்-ஆர், தகவல் தொடர்புக்கு உதவும் மாணவர்கள் உருவாக்கிய கலாம்சேட்-வி2 என்ற இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
10% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஜனவரி 25: பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்ஜீவ் கன்னா அடங்கிய அமர்வு விசாரித்தது. 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியலமைப்பின் அடிப்படைகளை மீறுவதாகவும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளுக்கு முரணானதாக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக, மத்திய அரசு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
எழுத்தாளர் கிருஷ்ணா சோப்தி மறைவு
ஜனவரி 25: ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் கிருஷ்ணா சோப்தி டெல்லியில் மறைந்தார். அவருக்கு வயது 93. ‘டார் சே பிச்சுடி’, ‘மித்ரோ மர்ஜானி’, ‘ஜிந்தகிநாமா’, ‘திலோதானிஷ்’ ‘ஐ லட்கி’ ‘குஜராத் பாகிஸ்தான் சே குஜராத் ஹிந்துஸ்தான்’ போன்றவை அவரது புகழ்பெற்ற படைப்புகள். 1925-ல் பாகிஸ்தான் பகுதியில் உள்ள குஜராத்தில் பிறந்த இவர், பெண் அடையாளம், பாலியல்பு தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி எழுதியவர்.