Last Updated : 28 Jan, 2019 01:02 PM

 

Published : 28 Jan 2019 01:02 PM
Last Updated : 28 Jan 2019 01:02 PM

ஆடும் களம் 35: ஸ்குவாஷ் விளையாட்டின் சென்னை முகம்

ஜோஷ்னா சின்னப்பா... உலக அளவில் சென்னையை ஸ்குவாஷ் விளையாட்டின் அடையாளமாக்கியவர். இளம் வயதிலேயே தேசிய அளவில் முத்திரை பதித்த வீராங்கனை. புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பைப் பெற்றவரும் இவரே.

ஜோஷ்னாவின் பூர்வீகம் கர்நாடகத்தில் உள்ள குடகு. ஆனால், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஜோஷ்னாவுக்கு எட்டு வயதானபோது, அவர் வயதுடைய சிறுமிகள் எல்லாம் ஓடிப் பிடித்து விளையாடுவதில் ஆர்வம் காட்டினர். ஆனால், ஜோஷ்னாவோ மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்புக்கு பாட்மிண்டன், டென்னிஸ் விளையாடச் சென்றுகொண்டிருந்தார். இரண்டுமே அவருக்கு அத்துப்படி. ஜோஷ்னாவின் கொள்ளுத் தாத்தா மேஜர் கரியப்பா, தாத்தா, அப்பா அஞ்சன் சின்னப்பா மூவருமே ஸ்குவாஷ் வீரர்கள். அவர்கள் வழிவந்த ஜோஷ்னாவுக்கும் ஸ்குவாஷ் மீது இயல்பாகவே ஆர்வம் பிறந்தது.

முத்தான முதல் சாதனை

ஜோஷ்னாவுக்குப் பத்து வயதானபோது ஸ்குவாஷ் அவரை முழுவதும் ஆக்கிரமித்து விட்டது. எதிர்காலத்தில் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனையாக உருவெடுக்க வேண்டும் என்ற ஆசை அந்த வயதிலேயே அவருக்குள் ஊடுருவியது. அந்தக் காலகட்டத்தில் ஸ்குவாஷ் என்ற விளையாட்டே பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அந்த விளையாட்டுதான் தனது எதிர்காலம் என்பதைச் சிறுவயதிலேயே தீர்மானித்து விட்டார் ஜோஷ்னா.

ஸ்குவாஷ் விளையாட்டை ஆத்மார்த்தமாக விளையாடத் தொடங்கிய ஜோஷ்னா, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய ஸ்குவாஷ் போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்தார். ஸ்குவாஷ் விளையாட்டில் இதுதான் அவருடைய முத்தான முதல் சாதனை. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் எந்த வீரர், வீராங்கனையுமே 14 வயதில் தேசிய அளவில் வெற்றிவாகை சூடியது இல்லை. இந்தச் சாதனை இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படவும் இல்லை.

சர்வதேசப் பயணம்

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய பிறகு 2004-ல்தான் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை ஜோஷ்னா பதிவுசெய்தார். 19 வயதுக்குட்பட்ட பிரிட்டிஷ் ஸ்குவாஷ் ஓபன் டைட்டில் பட்டத்தை வென்று நாடு திரும்பினார். ஸ்குவாஷ் விளையாட்டில் புகழ்பெற்ற தொடராகப் பார்க்கப்படுவது பிரிட்டிஷ் ஓபன் டைட்டில். அந்த டைட்டிலை வென்ற முதல் இந்திய வீராங்கனையானார் ஜோஷ்னா. 2008-ல் என்.எஸ்.சி. சூப்பர் சாட்டிலைட் டூர் பட்டம், 2010-ல் ஐரோப்பிய டூர் பட்டம் என ஸ்குவாஷில் ஜோஷ்னா வென்ற பட்டங்கள் அவரை மேலும் உச்சத்துக்குக் கொண்டுசென்றன. ஐரோப்பிய டூர் பட்ட இறுதிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சக வீராங்கனை தீபிகா பலிக்கல்லைத் தோற்கடித்து ஜோஷ்னா பட்டம் பெற்றார்.

வேகத்தடையாக வந்த காயம்

சர்வதேசப் போட்டிகளில் அழுத்தமாகத் தடம் பதித்துவந்த வேளையில், அவரது பயணத்துக்கு வேகத்தடையாக வந்து நின்றது அவருக்கு ஏற்பட்ட காயம். 2012-ல் ஏற்பட்ட காயம் அவரது ஸ்குவாஷ் வாழ்க்கையைத் தற்காலிகமாக முடக்கியது. முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை, பிறகு ஓய்வு என எட்டு மாதங்கள் ஸ்குவாஷ் பக்கமே அவரால் தலைவைக்கக்கூட முடியவில்லை. ஸ்குவாஷ் விளையாட்டின் பலமே கால்கள்தாம்.

கால்கள் வலுவாக இருந்தால்தான் ஸ்குவாஷ் விளையாட்டில் ஜொலிக்க முடியும். காயத்திலிருந்து மீண்டுவந்த ஜோஷ்னா, பழைய நிலையை அடைய கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. தொடர்ச்சியாகப் பயிற்சியெடுத்து, கால்களைப் பலப்படுத்திய பிறகே அவரால் சர்வதேசப் போட்டிக்குத் திரும்ப முடிந்தது.

உச்சம் தொட்ட ஆண்டு

காயம் தந்த ஓய்வால் புத்துணர்வுடன் களமிறங்கிய ஜோஷ்னா, மீண்டும் ஸ்குவாஷில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார். 2014, ஸ்குவாஷ் பயணத்தில் ஜோஷ்னா உச்சம் தொட்ட ஆண்டு. அந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த ரிச்மண்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் வெற்றியை முத்தமிட்டவர்,

கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். ஸ்குவாஷ் இரட்டையர் போட்டியில் தீபிகா பலிக்கல்லுடன் இணைந்து இந்தத் தங்கப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாகத் தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமை தீபிகாவுடன் சேர்ந்து ஜோஷ்னாவுக்கும் கிடைத்தது.

அதே காலகட்டத்தில்தான் உலகின் நம்பர் ஒன் வீராங்கனைகளைப் பந்தாடி கனடாவின் வின்னிபெக் ஓபனிலும் பட்டம் வென்று அசத்தினார் ஜோஷ்னா. விளையாட்டில் வீரர், வீராங்கனைகளுக்குக் காயம் ஏற்படுவது இயற்கையே. அந்தப் பின்னடைவிலிருந்து மீண்டு வரும்போது வேகமும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகமாக இருக்கும். அந்த வேகத்தில் கிடைக்கும் வெற்றிக்குச் சுவை அதிகம். 2014-ல் ஜோஷ்னா பெற்ற வெற்றி எல்லாம் அவருக்குத் தித்தித்தன.

தரவரிசையில் முன்னேற்றம்

2015-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த விக்டோரியா ஓபனில் சாம்பியன், மும்பையில் நடந்த சர்வதேசப் போட்டியில் மீண்டும் சாம்பியன் என ஜோஷ்னா வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்துக்கொண்டே இருந்தார். சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் 15 இடங்களுக்குள் முன்னேற வேண்டும் என்பது ஜோஷ்னாவின் நீண்ட காலக் கனவு. அந்தக் கனவு 2016-ல் நிறைவேறியது. 2014-ல் 19-வது இடத்தில் இருந்த ஜோஷ்னா, 2016-ல் 10-வது இடத்துக்கு முன்னேறிக் காட்டினார். ஸ்குவாஷ் விளையாட்டில் இந்திய வீராங்கனை ஒருவரின் அதிகபட்ச முன்னேற்றம் இதுதான்.

தற்போது 32 வயதாகும் ஜோஷ்னா, இன்றும் 20 வயதில் ஆடிய அதே துடிப்புடன் விளையாடிவருகிறார். 2017-ல் ஆசிய ஸ்குவாஷ் டைட்டில், 2018-ல் கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் தீபிகாவுடன் இணைந்து வெள்ளிப் பதக்கம், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டி ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் எனப் புலிப் பாய்ச்சல் காட்டிவருகிறார். ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியாவின் முகமாக நீண்ட காலமாகக் கோலோச்சிவரும் ஜோஷ்னாவைப் பாராட்டி 2013-ம் ஆண்டிலேயே மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கிக் கவுரவித்தது.

காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் எனப் பெரிய தொடர்களில் சாதித்துக் காட்டிய ஜோஷ்னாவுக்கு, ஸ்குவாஷ் விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்படவில்லையே என்ற வருத்தம் உண்டு. பணக்காரர்களின் விளையாட்டாகப் பார்க்கப்படும் ஸ்குவாஷ் விளையாட்டை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டுசெல்ல வேண்டும், ஸ்குவாஷ் விளையாட்டை நாடு முழுவதும் பரப்ப வேண்டும், நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் ஏராளமான ஸ்குவாஷ் வீரர், வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்பது ஜோஷ்னாவின் லட்சியம்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x