Published : 09 Jan 2019 10:37 AM
Last Updated : 09 Jan 2019 10:37 AM

டிங்குவிடம் கேளுங்கள்: இரு நோபல் பரிசுகளைப் பெற்றவர்கள் யார்?

இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர்கள் யார்? இயற்பியலில் யாராவது இரண்டு நோபல் பரிசுகள் வாங்கியிருக்கிறார்களா, டிங்கு?

– கீர்த்தனா, 5-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

இதுவரை 4 விஞ்ஞானிகள் இரண்டு முறை நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள், கீர்த்தனா. 2 முறை நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர் போலந்து நாட்டைச் சேர்ந்த, பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற விஞ்ஞானி மேரி க்யூரி. 1903-ம் ஆண்டு இயற்பியலுக்கு ஹென்றி பெக்யூரல், பியரி க்யூரியோடு சேர்ந்து இந்தப் பரிசைப் பெற்றார் மேரி. 1911-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

tinku-2jpgright

அதிக நோபல் பரிசுகளைப் பெற்ற குடும்பமும் இவருடையதுதான். இவரது மகள் ஐரின் க்யூரியும் அவரது கணவரும் நோபல் பரிசுகளைப்  பெற்றிருக்கிறார்கள். அமெரிக்க விஞ்ஞானி ஜான் பார்டீன் 1956, 1972-ம் ஆண்டுகளில் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றிருக்கிறார்.

இயற்பியல் துறையில் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற ஒரே நபர் இவரே. லைனஸ் பாலிங் என்ற அமெரிக்க விஞ்ஞானி 1954-ம் ஆண்டு வேதியியலுக்கும் 1962-ம் ஆண்டு அமைதிக்கும் நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த பிரெட்ரிக் சாங்கர் 1958-ம் ஆண்டும் 1980-ம் ஆண்டும் வேதியியலுக்கான நோபல் பரிசுகளைப் பெற்றார். வேதியியலில் இரு முறை நோபல் பரிசுகளைப் பெற்றவர் இவர் ஒருவரே.

எனக்குத் தலையில் எண்ணெய் தேய்ப்பது பிடிக்காது. என் தாத்தா எண்ணெய் தேய்க்காமல் பள்ளிக்குச் செல்லக் கூடாது என்கிறார். என் விருப்பத்தை ஏன் யாரும் மதிப்பதில்லை, டிங்கு?

– எஸ். விகாஷ், 5-ம் வகுப்பு, வித்யாசாகர் குளோபல் பள்ளி, செங்கல்பட்டு.

எண்ணெய் தடவாத  முடி காற்றில் அலைபாயும். வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்வதற்குள் முடி கலைந்துவிட்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. ஆசிரியர்களும் அதை விரும்ப மாட்டார்கள். சிறிது எண்ணெய்த் தடவிக்கொண்டால், மாலைவரை முடி கலையாமல் இருக்கும். அதற்காகத்தான் எண்ணெய் வைக்கச் சொல்கிறார்கள். நெற்றியில் வழியும் அளவுக்கு எண்ணெய் வைக்காமல், லேசாக எண்ணெய் தடவிச் செல்லலாமே.

என் விருப்பம்தான் முக்கியம் என்று எல்லாவற்றிலும் இருந்துவிட முடியாது. நல்லது சொன்னால், அது நமக்கு விருப்பமில்லை என்றாலும் ஏற்றுக்கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை, விகாஷ். நீங்கள் பெரியவரான பிறகு யாரும் எண்ணெய் வைக்கச் சொல்ல மாட்டார்கள், அப்போது உங்கள் விருப்பப்படி இருந்துகொள்ளலாம்.

மலர்கள் பச்சையாகவும் இலைகள் வண்ணமாகவும் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும், டிங்கு?

– பி. லோகேஸ்வரி, 10-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம்.

நமக்குப் பார்க்க நன்றாகத்தான் இருக்கும் லோகேஸ்வரி. ஆனால், தாவரங்கள் மகரந்தச் சேர்க்கைக்குப் பூச்சிகளையும் வண்டுகளையும்தான் நம்பியிருக்கின்றன. பூச்சிகளை ஈர்ப்பதற்கு பகலில் மலரும் பூக்கள் கண்கவர் வண்ணங்களுடன் காணப்படுகின்றன. இரவில் மலரும் பூக்கள் இருளிலும் சட்டென்று புலப்படும் விதத்தில் வெள்ளையாகவும் நறுமணம் மிக்கதாகவும் பூக்கின்றன. பச்சை வண்ணத்தில் பூக்கள் இருந்தால் இரவில் பூச்சிகளுக்கு அடையாளம் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும் அல்லவா?

tinku-3jpg

பச்சரிசி சாப்பிடுவது நல்லதா, புழுங்கல் அரிசி சாப்பிடுவது நல்லதா, டிங்கு?

– க. மணிகண்டன், 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

சிலர் பச்சரிசி சாப்பிட்டுப் பழகியிருப்பார்கள். சிலர் புழுங்கல் அரிசி சாப்பிட்டுப் பழகியிருப்பார்கள். பச்சரிசியில் கலோரி அதிகம். புழுங்கல் அரிசியில் கலோரி குறைவு. ஒரு கிலோ பச்சரிசியில் 3620 கலோரியும் 12% நீர்ச்சத்தும் இருக்கின்றன.

ஒரு கிலோ புழுங்கல் (வேக வைக்கப்பட்ட நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி) அரிசியில் 1098 கலோரியும் 73% நீர்ச்சத்தும் இருக்கின்றன. சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் பச்சரிசியையும் சத்து குறைவாக கிடைக்க வேண்டும் என்றால் புழுங்கல் அரிசியும் பயன்படுத்தலாம். பச்சரிசியைவிடக் கைக்குத்தல் அரிசியில் சத்து இன்னும் அதிகமாக இருக்கும், மணிகண்டன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x