Last Updated : 02 Jan, 2019 10:24 AM

 

Published : 02 Jan 2019 10:24 AM
Last Updated : 02 Jan 2019 10:24 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: ஐன்ஸ்டைனின் நாக்கு

நான் ஒரு பெரிய ஜீனியஸ். அற்ப மானிடப் பதர்கள் எல்லாம் பத்து கிலோ மீட்டர் தள்ளி வாருங்கள் என்று ஐன்ஸ்டைன் ஒருபோதும் ஒருவரிடமும் சொன்னதில்லை. ஐந்தாவது வகுப்பு மாணவர்கூட, ’ஐயா ஒரு ஐயம்’ என்று அவரை அணுகிவிட முடியும். குனிந்து தோளைப் பிடித்து என்ன என்று பரிவோடு கேட்பார். ஐன்ஸ்டைன் குளிக்கப் போகும்போதுகூட இடைமறித்து, ‘குவாண்டம் எந்திரவியல் என்றால் என்ன, ரொம்ப அவசரம்’ என்று நீங்கள் கேட்கலாம்.

அவரும் துண்டை மேஜையின்மீது வைத்துவிட்டு, இப்படி வா சொல்கிறேன் என்று ஒரு மணி நேரம் வகுப்பெடுத்துப் புரிய வைப்பார். நீங்கள் கிளம்பிய பிறகு நினைவு வைத்துக்கொண்டு குளிப்பாரா என்பது மட்டும் தெரியாது.

வளிமண்டலம் முதல் பரலோகம்வரை எதைப் பற்றிக் கேட்டாலும் விவாதிக்க அவர் தயாராகவே இருக்கிறார். ஆனால் பிரச்சினை என்ன தெரியுமா? பெரும்பாலும் பின்வரும் அறிவுப்பூர்வமான கேள்விகளைத்தான் மீண்டும் மீண்டும் அவரிடம் பலரும் கேட்டார்கள். ஐன்ஸ்டைன், நீங்கள் ஏன் சாக்ஸ் போட பழகிக்கொள்ளக் கூடாது?

எல்கேஜி குழந்தைகூட ஒழுங்காகப் போட்டுக்கொள்கிறதே, உங்களுக்கு என்ன கஷ்டம்? ஐன்ஸ்டைன், கொஞ்சம் தேங்காய் எண்ணெய் போட்டு தலைவாரிதான் பாருங்களேன். இவ்வளவு பெரிய விஞ்ஞானி, இப்படியா தூங்கி எழுந்து வருவதுபோல் பொது இடங்களுக்கு வருவீர்கள்? ஐன்ஸ்டைன், நீங்கள் எப்போதாவதுதான் குளிப்பீர்கள் என்று சொல்கிறார்களே. பல்லாவது தினமும் தேய்ப்பீர்களா?

நாங்கள் இந்தப் பத்திரிகையி லிருந்து வருகிறோம், அந்த ரேடியோ ஸ்டேஷனில் இருந்து வருகிறோம் என்று மைக்கை எடுத்துக்கொண்டு வருபவர்கள் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஐன்ஸ்டைன், உங்களுக்குப் பிடித்த கதாநாயகி யார்? நீங்கள் விஞ்ஞானி ஆகியிருக்காவிட்டால் வேறு என்னவாக ஆகியிருப்பீர்கள்?

ஒரு தீவில் தனியாக மாட்டிக்கொள்ள நேர்ந்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் இளம் மேதையா அல்லது வளர்ந்த பிறகு இப்படி ஆகிவிட்டீர்களா? சின்ன வயதில் நீங்கள் செய்த குறும்புகள் சிலவற்றை எங்கள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா? நீங்கள் என்ன சோப்பு பயன்படுத்துகிறீர்கள்? நீங்கள் கொஞ்சம் உம்மணாமூஞ்சி என்கிறார்களே, அப்படியா?

பிறகு இப்படி எல்லாம் என்னைப் போட்டு வதைத்தால் ஈ என்று சிரித்துக்கொண்டா இருக்க முடியும் என்று கன்னத்தில் கை வைத்துக்கொள்வார் ஐன்ஸ்டைன். யாராவது மைக்கோடு வந்தாலே அவருக்குப் பயம் வந்துவிடும். புத்தக வெளியீடு, பிறந்த நாள் விழா, குழந்தைக்குக் காது குத்தல் என்று எந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், ஒரு நிமிடம் இங்கேயே இருங்கள் வந்துவிடுகிறேன் என்று ஓடியே போய்விடுவார்.

ஆனால் 14 மார்ச் 1951 அன்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு பிறந்த நாள் விழாவை அவரால் தட்டிக்கழிக்க முடியவில்லை.

காரணம், அது அவருடைய 72-வது பிறந்தநாள். இதெல்லாம் எதுக்கு என்னை விட்டுவிடுங்களேன், நான் பாட்டுக்கு ஏதாவது படித்துக்கொண்டிருக்கிறேன் என்று ஐன்ஸ்டைன் மன்றாடியதை ஒருவரும் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. வந்தால்தான் ஆச்சு என்று உத்தரவு போட்டுவிட்டார்கள். சரி, பல்கலைக்கழகமாச்சே, ‘இயங்கும் பொருள்களின் மின்னியங்கியல்’ அல்லது ‘ஆற்றல் நிறை சமன்மை விதி’ குறித்து கேக் சாப்பிட்டுக்கொண்டே மனம்விட்டு உரையாடலாம் என்று நினைத்து வந்துசேர்ந்தார்.

’ஐ, ஐன்ஸ்டைன்!’ என்று பீறிட்டு அலறியபடி ஒரு கூட்டம் திபுதிபுவென்று ஓடிவந்தது. நான், நீ என்று எல்லோரும் போட்டிப்போட்டுக்கொண்டு அவர் கையைப் பிடித்து இழுத்து, குலுக்கோ குலுக்கு என்று குலுக்கி, கன்னத்தைத் தொட்டு, தோளில் தட்டி, ஆஊ என்று அரட்டையடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வயிற்றில் செல்லமாக ஒரு குத்து மட்டும்தான் விடவில்லை.

ஐன்ஸ்டைன் இதென்ன உங்கள் 22-வது பிறந்த நாளில் எடுத்த புத்தாடையா? ஹாஹா என்றார் ஒருவர். என் நாய்க்குட்டிக்கு ஏதாவது பெயர் வையுங்களேன் என்று குட்டியைத் தூக்கி அவர் முகத்துக்கு அருகில் நீட்டினார் இன்னொருவர்.

பெரிய பெரிய கேமராவோடு அணிவகுத்து நின்ற புகைப்படக் கலைஞர்களைப் பார்த்ததும் ஐன்ஸ்டைனின் தலைமுடி குழப்பத்தில் மேலும் கலைய ஆரம்பித்தது. ’நல்ல நாள் அதுவுமா இப்படியா கோட்டான் மாதிரி முகத்தை வைத்துக்கொள்வது, கொஞ்சம் சிரிங்க ஐன்ஸ்டைன்’ என்று புகைப்படக்காரர்கள் உரிமையோடு அவரை அதட்ட ஆரம்பித்தார்கள். கொஞ்சம் இங்கே வந்து இந்தப் பூச்செடிக்குப் பக்கத்தில் நில்லுங்கள். அடுத்து அந்த மரத்தில் கொஞ்சம் சாய்ந்தாற்போல் நில்லுங்கள்.

மாடிப்படியில் உட்கார்ந்து போஸ் கொடுங்கள். இப்போது எழுந்து நில்லுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள். ஏதாவது எழுதுவதுபோல் சும்மா பாவலா காட்டுங்கள். கேமராவைப் பார்த்துக்கொண்டே கேக்கைக் கடியுங்கள். இதோ, இந்த மீன் தொட்டிக்கு அருகில் சிந்தனையாளர்போல் நிற்க முடியுமா?

நடுநிசி நெருங்கும்வரை பச்சக் பச்சக் என்று கேமராவை அழுத்திக்கொண்டே இருந்தார்கள். புத்தரைப்போல் அமைதியாகக் (உள்ளுக்குள் அழுதபடி) கிளம்பினார் ஐன்ஸ்டைன். அவரை வீட்டில் கொண்டுபோய் விடுவதற்கு கார் வந்து நின்றது. வாருங்கள், ஐன்ஸ்டைன், விழாவைச் சிறப்பித்ததற்கு மிக்க நன்றி என்று பின் சீட்டில் இருந்து நண்பர்கள் புன்னகை செய்தபடி வரவேற்றார்கள்.

ஐன்ஸ்டைன் உள்ளே நுழைந்து கதவை மூடுவதற்குள் பத்துப் பதினைந்து பேர் கேமராவோடு ஓடிவந்துவிட்டார்கள். அப்படியே காரில் ஏறுவதுபோல் ஒரே ஒரு படம்? நீங்கள் சமர்த்து அல்லவா ஐன்ஸ்டைன்? படம்தானே வேண்டும் இதோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று நாக்கை வெளியில் நீட்டினார் ஐன்ஸ்டைன். கார் பறந்துசென்றுவிட்டது.

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள்?

20-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற புகைப்படங்களில் ஒன்றாக அது மாறிவிட்டது. ‘என்னது ஐன்ஸ்டைனா? நாக்கை வெளியில் நீட்டிக்கொண்டிருப்பாரே அவரா?’ என்று சொல்லும் அளவுக்கு அந்தப் படம் அவருடைய அடையாளமாக மாறிவிட்டது.

படம் எடுத்த புகைப்படக்காரருக்குப் பாராட்டுகள் குவிய ஆரம்பித்தன. வருமானமும்தான். பாவம், ஐன்ஸ்டைன் மீண்டும் கன்னத்தில் கை வைத்துக்கொண்டார். ‘எனக்காக ஒரே ஒரு முறை நாக்கை வெளியில் நீட்டுங்களேன் ப்ளீஸ் என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்துவிடுவார்களே!’

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x