Last Updated : 12 Jan, 2019 10:37 AM

 

Published : 12 Jan 2019 10:37 AM
Last Updated : 12 Jan 2019 10:37 AM

படுக்கையறையில் இருக்க வேண்டிய ஐந்து அம்சங்கள்

படுக்கையறை அலங்காரம் என்பது எப்போதும் தனிநபரின் ரசனையைப் பொருத்தே அமையும். படுக்கையறை வசதியாக இருக்க வேண்டும். அமைதியான சூழலில் அமைந்திருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், ஒரு சிறந்த படுக்கையறையில் அவசியம் இருக்க வேண்டுமென்று ஐந்து அம்சங்களை உள்அலங்கார வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அமரும் மெத்தைகள்

‘க்யூப்’ (upholstered cube) எனப்படும் அமரும் மெத்தைகள் படுக்கையறைக்குப் பொருத்தமானதாக இருக்கும். இவை சிறியதாக இருப்பதால்,  மெத்தைகள் அறையில் இடப்பற்றாக்குறையைத் தவிர்க்க உதவும். பலவிதமான வடிவமைப்புகளில் இந்த அமரும் மெத்தைகள் கிடைக்கின்றன.

தலையணைகளுக்கான பெட்டி

கூடுதலான தலையணைகளையும் குளிர் காலத்தில் மட்டும் பயன்படும் படுக்கை விரிப்புகளை வைப்பதற்குத் தனிப் பெட்டியை இப்போது பலரும் பயன்படுத்துகின்றனர். இந்தப் பெட்டியைப் படுக்கைக்கு முன்னரோ, படுக்கையறை ஜன்னலுக்குக் கீழேயோ வைப்பது பொருத்தமாக இருக்கும்.

புத்தக அலமாரி

பெரும்பாலனவர்களுக்குப் படுக்கையறையில் புத்தகம் வாசிப்பது பிடித்த விஷயமாக இருக்கும். எவ்வளவு சிறிய படுக்கையறையாக இருந்தாலும் அதில் புத்தக அலமாரியைப் பொருத்தமுடியும். இப்போது படுக்கைகளும் நாற்காலிகளும் புத்தகங்களை அடுக்கும் அலமாரிகளுடன் வடிவமைக்கப்படுகின்றன. சிறிய படுக்கையறைக்குப் புத்தக அலமாரியுடன் வடிவமைக்கப்பட்ட அறைக்கலன்கள் பொருத்தமாக இருக்கும்.

சிற்றுண்டி மேசை

பலருக்குச் காலை சிற்றுண்டியை படுக்கையிலேயே அமர்ந்து சாப்பிடும் வழக்கம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கால்கள் பொருத்தப்பட்ட மடக்கும் வசதியுடன்கூடிய சிறுமேசையை வாங்கிக்கொள்ளலாம். இந்த மேசையைப் படுக்கையில் சிற்றுண்டிச் சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல் மடிக்கணினி வைப்பதற்கும் பயன்படுத்தலாம். ஆனால், கூடுமானவரை படுக்கையில் கேட்ஜெட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

தொங்கும் விளக்குகள்

படுக்கையறைக்குத் தொங்கும் ‘பெண்டன்ட்’ (Pendant) விளக்குகள் பொருத்தமானதாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் வடிவமைப்பாளர்கள். இது படுக்கையறை மேசையின் இடத்தை விளக்குகள் ஆக்கிரமிக்காமல் இருக்க உதவும். படுக்கையின் ஓரத்தில் இந்தத் தொங்கும் விளக்கைப் பொருத்துவது சரியானதாக இருக்கும். ஆனால், இந்த தொங்கும் விளக்கைப் பொருத்தும்போது உயரத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கூடுமானவரை, உயரத்தை நீங்களே சரிசெய்துகொள்ளும்படி இருக்கும் விளக்குகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x