Published : 02 Jan 2019 10:24 AM
Last Updated : 02 Jan 2019 10:24 AM

டிங்குவிடம் கேளுங்கள்: மனிதனிலிருந்து குரங்கு உருவாகுமா?

புயலுக்குப் பெயர் வைப்புது யார்? எதற்காகப் பெயர் வைக்கிறார்கள், டிங்கு?

– ரா. ஜோதிகா, 10-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம், திருவள்ளூர்.

அடையாளத்துக்காகத்தானே நமக்கெல்லாம் பெயர் வைக்கப்படுகிறது. அதேபோல்தான் புயல்களுக்கும் பெயர் வைக்கிறார்கள், ஜோதிகா. ஆரம்பத்தில் எண்களைக் குறிப்பிட்டுதான் புயல்களை அடையாளம் கண்டனர். அதில் குழப்பம் ஏற்பட்டதால், பெயர் சூட்ட ஆரம்பித்தனர். 2018-ம் ஆண்டு ஏற்பட்ட புயல் என்பதைவிட, கஜா புயல் என்று சொல்லும்போது அந்தப் புயலின் தன்மை, பாதிப்பு எல்லாம் நம் நினைவுக்கு எளிதில் வந்துவிடுகின்றன அல்லவா, அதற்காகத்தான் பெயர் வைக்கிறார்கள்.

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் 2000-வது ஆண்டிலிருந்து தொடங்கியது. டெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம், 2004-ம் ஆண்டிலிருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க, 64 பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள வங்கதேசம், இந்தியா, மியான்மர், மாலத்தீவுகள், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள்  பெயர்களை வழங்கியிருக்கின்றன.

இந்தப் பெயர்ப் பட்டியலின் வரிசைப்படி ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கப்படுகிறது. வர்தா புயலுக்குப் பாகிஸ்தான் பெயரும் கஜா புயலுக்கு இலங்கைப் பெயரும் இப்படி வந்தவைதான். அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர் போன்ற இந்தியப் பெயர்கள் ஏற்கெனவே வைக்கப்பட்டுவிட்டன. தனிக் கண்டமாகவும் மிகப் பெரிய நாடாகவும் இருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், மற்ற நாடுகளுடன் பெயர் பரிமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால், தானே பெயர் வைத்துக்கொள்கிறது.

குரங்கிலிருந்து மனிதன் உருவானதுபோல், மனிதனிலிருந்து குரங்கு உருவாக வாய்ப்பிருக்கிறதா, டிங்கு?

-அஸ்மிதா, 5-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட குரங்கு இனத்திலிருந்து மனிதன் உருவாகியிருக்கிறான். இது சட்டென்று நிகழ்ந்த மாற்றம் அல்ல. பல நூறு வருடங்கள் பரிணாம வளர்ச்சியால் கிடைத்த மாற்றம். குரங்கு இனத்தைவிட மனிதன் மேம்பட்ட இனமாக இருக்கிறான். இதிலிருந்து காலப்போக்கில் இன்னும் மேம்பட்ட உயிரினம் தோன்றலாம். ஆனால், மனிதன் மீண்டும் குரங்காக மாறும் வாய்ப்பில்லை, அஸ்மிதா.

பின்கோடு எண் எவ்வாறு உருவானது, டிங்கு?

–இரா. மதன் பிரியன், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

அஞ்சல் குறியீட்டு எண் என்று அழைக்கப்படும் பின்கோடு, இந்திய அஞ்சல் துறையினால் உருவாக்கப்பட்டது. இந்த அஞ்சல் குறியீட்டு எண்ணை வைத்து எந்த அஞ்சலகம் என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும்.

1972-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 6 இலக்கங்கள் கொண்ட அஞ்சல் குறியீட்டு எண் நடைமுறைக்கு வந்தது. இந்தியா 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அஞ்சல் குறியீட்டு எண்ணின் முதல் இலக்கம் மண்டலத்தையும் இரண்டாவது இலக்கம் உள் மண்டலத்தையும் மூன்றாவது இலக்கம் மாவட்டத்தையும் குறிக்கிறது.

tinku-3jpgright

பின்னால் இருக்கும் மூன்று இலக்கங்கள் அஞ்சலகத்தை அடையாளப்படுத்துகின்றன. சமயபுரம் அஞ்சலகக் குறியீட்டு எண் 621 112. இதில் 62 என்பது தமிழ்நாட்டையும் 1 திருச்சி மாவட்டத்தையும், பின்னால் உள்ள மூன்று இலக்கங்கள் அஞ்சலகம் இருக்கும் இடத்தையும் குறிக்கின்றன. தமிழ்நாட்டின் அஞ்சல் குறியியீட்டு எண்களில் முதல் இரு இலக்கங்கள் 60 முதல் 66வரை அமைந்திருக்கின்றன.

இந்த எண்களைப் பார்த்தாலே தமிழ்நாடு என்று சொல்லிவிடலாம். 67-69 கேரளா, 51-53 ஆந்திரப் பிரதேசம், 56-59 கர்நாடகா, யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 605 என்று எண்களை வழங்கியிருக்கிறார்கள், மதன் பிரியன்.

கோலா ஏன் தண்ணீர் குடிப்பதில்லை, டிங்கு?

– ரா. சிநேகபிரியா, 9-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.

பொதுவாக, கோலாக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. அவை சாப்பிடும் உணவில் இருந்தே நீர்ச் சத்தைப் பெற்றுக்கொள்கின்றன. கோலாக்களின் உணவான யூகலிப்டஸ் இலைகளில் 55 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. அதனால் அதிலிருந்தே தங்களுக்குத் தேவையான நீர்ச்சத்தை எடுத்துக்கொள்கின்றன. கோலா என்ற பெயருக்கு, ‘தண்ணீர் தேவை இல்லை’ என்று பொருள், சிநேகபிரியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x