Published : 21 Jan 2019 13:04 pm

Updated : 21 Jan 2019 13:04 pm

 

Published : 21 Jan 2019 01:04 PM
Last Updated : 21 Jan 2019 01:04 PM

லேண்ட் ரோவருடன் ஒரு நாள்...

சென்னை டிராபிக்கில் ஒவ்வொரு நாளும் நூறு முறை கிளட்ச்சை மிதித்து கியரை மாற்றி ஓட்டியும், ஜிஎஸ்டி ரோட்டில் ஒரே வீச்சில் 200 கிமீ தூரம் ஓட்டியும் அலுத்துப்போன ஓட்டுநர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல ஆட்டோமேட்டிக் காரில் ஆஃப்ரோடு அட்வென்சர் டிரைவிங் அனுபவம் பெறும் வாய்ப்பு கிடைத்தால்?

இது பலருக்கு நீண்ட நாள் கனவாகக் கூட இருக்கலாம். ஏனெனில் விலையுயர்ந்த கார்களைப் பார்ப்பதற்காக ஷோரூம் போனால்கூட கூச்சமாக இருக்குமல்லவா. அப்படியிருக்கும்போது அதுபோன்ற கார்களை ஓட்டும் வாய்ப்பு தேடி வந்தால் எப்படி இருக்கும்.


ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் சார்பாக, சென்னை ஓஎம்ஆரில் மூன்று நாள் ’அபவ் அண்ட் பியாண்ட்’ ஆஃப்ரோடு டிரைவிங் டூர் நிகழ்ச்சி கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. லேண்ட் ரோவர் எவோக், லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் கார்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. எந்தக் காரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்து சிறு விளக்கம் கொடுக்க அழைத்தார்கள்.

லேண்ட் ரோவர் கார்களின் அற்புதமான செயல்திறன்கள் குறித்தும், எதையெல்லாம் செய்யக்கூடாது, என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்தும் விளக்கங்கள் வழங்கப்பட்டன. ஆனால், மனதும், கண்களும் தூரத்தில் நின்றிருந்த கார்கள் மீதுதான். பிறகு, எங்களுக்காகவே தயாராக இருந்த அந்தச் சவாலான கரடுமுரடான, கடினமான பாதையில் பயணப்பட தயாரானோம்.

இந்தியச் சாலைகளில் எங்கு குழி வரும், எங்கே மேடு வரும் என்றே சொல்ல முடியாது அல்லவா? அதற்கேற்பவே உருவாக்கப்பட்ட சிறப்பான கார்கள்தான் லேண்ட் ரோவர். லேண்ட் ரோவர் எவோக் காரில் ஏறி சீட் பெல்ட் அணிந்து, ஸ்டார்ட் பட்டனை அழுத்தி விட்டு, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பார்க்கிங் மோடிலிருந்து, டிரைவிங் மோடுக்கு மாற்றி மெல்ல பிரேக்கிலிருந்து காலை எடுத்தால் மிதந்துகொண்டு நகர்ந்தது.

கூடவே, வழிகாட்டுபவர் ஒருவர் வந்தார். அவர் காரின் அனைத்து விதமான செயல் திறன்கள் குறித்தும் விளக்கிக் கொண்டே வந்தார். டிரைவிங் ஸ்கூலுக்குப் போய் கார் ஓட்டியிருக்கிறார்களா, பெரும்பாலானோர் நம்மை ஓட்டவிடாமல் அவர்களே ஸ்டியரிங்கில் கையை வைத்துக்கொண்டிருப்பார்கள்.

டிரைவில் சீட்டில் இருப்போமே தவிர ஓட்டுவதெல்லாம் வாத்தியார்தான். ஆனால், லேண்ட் ரோவர் நிறுவனத்தைச் சேர்ந்த வழிகாட்டிகள் உண்மையிலேயே சிறப்பான ஓட்டும் அனுபவத்தைத் தந்தார்கள். வண்டி நம் விருப்பத்துக்கு ஓடியது. அவ்வப்போது சில முக்கியமான செயல்களை மட்டும் ஞாபகப்படுத்தினார்கள்.

சாதரணமாகப் போய்க்கொண்டிருந்த கார் திடீரென்று மலைப்பாங்கான சரிவை நோக்கி திரும்பியது. ஒன்றும் பதட்டப்படவேண்டாம், மெதுவாகவும், சீராகவும் ஆக்சிலரேட்டர் அழுத்தினால் போதும் என்று கூல் செய்தார்கள். லேண்ட் ரோவர் மட்டுமல்ல, பொதுவாகவே கார்களை தேவைப்படும்போது மட்டுமே வேகமாக ஓட்ட வேண்டும். வேகமாக ஓட்டுவது மட்டுமல்ல அல்ல சிறப்பான டிரைவிங் அனுபவம் என்பதை உணர முடிந்தது.

சகதி, பெரிய பள்ளம், கரடு முரடான பாதை என அனைத்து விதிமான சூழல்களில் லேண்ட் ரோவர் கார்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தின. இந்தக் கார்களை ஓட்டும்போது நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை, ஓட்டும் சூழலுக்கேற்ப, பாதைக்கேற்ப தேவையான மோட் பட்டனை அழுத்திவிட்டால் போதும். செய்யக்கூடாத விஷயங்களைச் செய்யாமல் இருந்தால் போதும்.

சாய்வான இடங்களில் கூட மிகச் சுலபமாக ஓட்ட முடிந்தது. அப்போது நடிகர் விஜயகாந்த் சினிமாவில் இரண்டு சக்கரத்தில் காரை ஓட்டிச் செல்வாரே அந்தக் காட்சி மனதில் வந்துபோனது. இந்தக் கார்களில் இருக்கும் வேகத்தை செட் செய்யும் அம்சம் மிகவும் சிறப்பு. தண்ணீர் சூழ்ந்த குளம், சகதி, சிக்கலான சரிவான பாதை போன்றவற்றில் வேகத்தை செட் செய்துவிட்டு ஸ்டியரிங்கை மட்டுமே சரியாக இயக்கினால் போதும், பிரேக்குக்கும் திராட்டிலுக்கும் எந்த வேலையுமே இல்லை. அனைத்தையும் காரே பார்த்துக்கொள்கிறது.

அனைத்தையும் காரே செய்தாலும், தொழில்நுட்பத்தை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப நம்முடைய டிரைவிங் அனுபவத்தைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டியதில்தான் இருக்கிறது சுவாரஸ்யம். லேண்ட் ரோவர் கார்கள், மற்ற கார்களிலிருந்து வேறுபட்டு தெரிய காரணம், இதில் இருக்கும் ஆல்-டெரைன் தொழில்நுட்பம்தான். ஆன் ரோடு, ஆஃப் ரோடு இரண்டிலும் மிகச்சிறப்பான செயல்திறனை இந்தத் தொழில்நுட்பம் வெளிப்படுத்துகிறது. இடவசதி, கிரவுண்ட் கிளியரன்ஸ், டிசைன், இன்டிரியர் அனைத்துமே சிறப்பு.

லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விலை ரூ. 44.68 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. ஆல் நியூ டிஸ்கவரி விலை ரூ. 74.95 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. எவோக் மாடல் விலை ரூ. 52.06 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. இந்த விலையில் கார் வாங்க நினைப்பவர்கள் லேண்ட் ரோவரை தைரியமாகத் தேர்வு செய்யலாம்.

- ஜே.எஸ்.


Land roverAdventure drivingஜாகுவார் லேண்ட் ரோவர் Jaguar car

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-updates

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x