Last Updated : 29 Jan, 2019 10:54 AM

 

Published : 29 Jan 2019 10:54 AM
Last Updated : 29 Jan 2019 10:54 AM

தேர்வுக்குத் தயாரா? - ஆங்கிலத்திலும் அசத்தலான மதிப்பெண் சாத்தியம்! (10-ம் வகுப்பு ஆங்கிலம் I, II)

எவ்வளவுதான் ரசித்து, ஊன்றிப் படித்தாலும் மொழிப் பாடங்களில் சதம் அடிப்பது எளிதல்ல. அதே நேரத்தில் அசத்தலான மதிப்பெண்களை ஆங்கில மொழிப் பாடத்தில் குவிப்பது சாத்தியமே! ஆங்கில மொழிப் பாடத்தின் இரண்டு தாள்களிலும் துரிதமாகத் தயாராக எளிய குறிப்புகள் இதோ:

முதல் தாள்

இலக்கணப் பகுதியின் முழுமையான தயாரிப்புக்கு, முந்தைய வருடங்களின் வினாத்தாளில் இருந்து பயிற்சி பெறுவதல், திருப்புதல் அவசியம். Spot and correct the Error (வி.எண் 52) பகுதியில் பிழைகளை அடையாளம் கண்டு பிறகு சரியாக வாக்கியங்களை அமைத்தால் மட்டுமே முழு மதிப்பெண் கிடைக்கும்.

வி.எண் 38, 50 ஆகியவற்றில் விடைகளின் தொடக்கத்தில் Synopsis எழுதுவதுடன், முடிவில் பொருத்தமான Proverb ஒன்றை எழுதிக் கட்டமிட்டுக் காட்டலாம்.

Expansion (வி.எண் 3),  American / British English (வி.எண் 5), Singular/Plural (வி.எண் 7) ஆகிய பகுதிகளுக்கான வினாக்கள் பாட நூலுக்கு அப்பாலிருந்தும் கேட்கப்படலாம். இவை முந்தைய வினாத்தாள்களில் இடம் பெறாதவையாகவும் அமையும். எனவே, இந்த வினாக்களின் மாதிரியிலிருந்து போதிய பயிற்சி பெறுவதுடன், ஆங்கில இலக்கணத்தின் பயன்பாடு அறிதல், பொருளறிந்து படிப்பது, போதுமான மாதிரித் தேர்வுகள் எழுதிப் பார்ப்பது ஆகியவையும் அவசியம்.

இலக்கண அறிவு, மொழித் திறனைப் பரிசோதிக்கும் Phrasal Verb (வி.எண் 9),  Prepositional Phrase (வி.எண் 20), Choose the correct phrase (வி.எண் 22) ஆகிய பகுதிகளுக்கு முந்தைய வினாத்தாள்களில் இருந்து திருப்புதல் மேற்கொண்டாலே போதும்.

சராசரி கற்றல் திறனுடையவர்கள் Prose, Poem ஆகியவற்றின் தலா முதல் மூன்று பாடங்களில் இருந்து 5 மதிப்பெண்களுக்குரிய Paragraphs படிப்பதுடன் அவற்றைப் பிழையின்றி எழுதிப் பழகினால் உரிய மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம்.

இலக்கணப் பகுதியில் If Clause, Degrees of Comparisons, Combining the sentences, Punctuation ஆகிய எளிமையான பகுதிகளைப் படித்தால் 6 முதல் 11 மதிப்பெண்கள் பெறலாம். முதல் 3 பாடங்களின் இரண்டு மதிப்பெண் வினாக்களைப் படித்தாலே 4 முதல் 6 மதிப்பெண்கள் பெறலாம். எஞ்சிய பாடங்களின் 2 மதிப்பெண் வினாக்களை ஏற்கெனவே படித்த Paragraph  பகுதியிலிருந்தே எதிர்பார்க்கலாம். Rhyming words, Rhyme scheme, figure of speech ஆகியவற்றை ஆர்வத்துடன் சில மணி நேரம் ஒதுக்கிப் பார்த்தாலே தேர்வுக்குத் தயாராகலாம். 

இரண்டாம் தாள்

துணைப்பாடப் பகுதியில் அனைத்துக் கதைகளும் முழுமையாக வாசித்துப் பொருளறிந்து வைத்திருப்பதுடன், கதைமாந்தர்கள், அவர்களின் வயது, முக்கியமான வசனங்கள், கதை நிகழ்விடம் உள்ளிட்டவற்றைத் தனியாகக் குறித்துக்கொண்டு அவற்றைத் திருப்புதல் செய்வது அவசியம்.

10 மதிப்பெண்கள் அடங்கிய வி.எண்.8-ல் Summary எழுதுகையில் Rough Copyமுடித்து, Fair Copy எழுதும்போது ஏற்படும் இலக்கணப் பிழைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்பதால் அவற்றில் கவனம் தேவை. மேலும் 9,10,11,13,15 ஆகிய வினாக்களுக்குப் பதில் வினா எண் 13- கொடுக்கப்பட்ட தலைப்பு செய்திகளை விரிவாக்கம் செய்யும்போது, செய்தி நிகழ்ந்த நாள், இடம் ஆகியவற்றைக்  குறிப்பிட்டு இலக்கணப் பிழையின்றி எழுதுவது அவசியம்.

வி.எண்.15-க்கு விடையளிக்கை யில் பொருத்தமான தலைப்புடன் ஓரிருபத்திகளில் பதில் எழுதுவதுடன் நிறைவாக ஒரு பழமொழியையும் எழுதி முழு மதிப்பெண் பெறலாம்.

வி.எண் 19-ல் இடம்பெறும் A, B என 2 வினாக்களில், மொழிபெயர்ப்பில் நல்ல திறமையும் எழுத்து, இலக்கணப் பிழையின்றி எழுதப் பயிற்சியும் பெற்ற மாணவர்கள் மட்டும் வினா A- வைத் தேர்ந்தெடுக்கலாம். மற்றவர்கள் B-ஐத்தேர்வு செய்து, கொடுக்கப்பட்ட படம் குறித்து 5 முதல் 10 வரிகளுக்குள்ளாகத் தங்கள் கருத்தை எழுதலாம்.

தேர்வு மாற்றங்களில் கவனம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறைகளின் ஒரு சில மாற்றங்களை மாணவர்கள் கவனிக்க வேண்டும்:

1. தேர்வு நேரத்தில் மாற்றம்

தமிழ், ஆங்கிலம் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் மட்டும் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாடங்கள் அனைத்தும் வழக்கம்போல முற்பகலில் நடைபெற உள்ளன.

2. கேட்கும் முறையில் மாற்றம்

பாடத்தின் பின்பகுதி வினாக்கள், பாடங்களுக்கு மத்தியில் குறிப்பிடப்பட்ட வினாக்களில் இருந்தே பெரும்பாலானவை முந்தைய பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்டன. நடப்பாண்டு முதல் மாணவர்களின் சிந்தனைத் திறனைத் தூண்டும் வகையில் பாடங்களுக்கு மத்தியில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரியேட்டிவ் வினாக்கள், மறைமுக வினாக்கள், சிந்தனையைத் தூண்டும் வினாக்களாக இவை இடம்பெறும்.

குறிப்பாக, ஆங்கிலம் முதல் தாளில் வினா எண் 31 முதல் 37 வரையிலான Prose பகுதி வினாக்கள் பாடத்தின் எந்த வரியை ஒட்டியும் கேட்கப்பட வாய்ப்புள்ளது.

3. கொள்குறிவகை (Multiple Choice) வினாக்களுக்கு விடையளிக்கையில், வினா எண் எழுதி விடையை எழுதுவதுடன் உரிய தெரிவு (Option) எழுதினால் மட்டுமே மதிப்பெண் உறுதியாகும்.

 

பாடக் குறிப்புகளை வழங்கியவர்: பு.ஜெய பிரபு, பட்டதாரி ஆசிரியர்(ஆங்கிலம்), அரசு மேல்நிலைப் பள்ளி, பூண்டி, தஞ்சை மாவட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x