Last Updated : 19 Jan, 2019 11:45 AM

 

Published : 19 Jan 2019 11:45 AM
Last Updated : 19 Jan 2019 11:45 AM

பிரச்சினைக்குரிய ரத்தம்

ரத்த தானம், ரத்தப் பரிமாற்றத்துக்கு நன்கு வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் இருந்தும், அதைச் சரியாகப் பின்பற்றாததால் சமீபத்தில் தமிழகத்தில் சில கோரமான சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. இந்தச் சூழ்நிலையில் மருத்துவ நிபுணர்கள் தீவிரமான பரிசீலனையையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் கோருகின்றனர்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் தந்திருக்கும் நெறிமுறைகளைத் தமிழக அரசு ரத்த சேகரிப்பு, பரிசோதனை, ரத்த சேமிப்பு, பரிமாற்றத்தில் பின்பற்றினாலும் பெரிய தவறு நிகழ்த்தப்பட்டுவிட்டது. ராஜா தனது ரத்தத்தை இரண்டாம் முறையாகத் தானம் செய்தபோது, சம்பந்தப்பட்ட சிவகாசி ரத்த வங்கி அவருக்கிருந்த நோய்த் தொற்றை அடையாளம் காணத் தவறியதோடு அதை இன்னொருவருக்கும் பரிமாற்றம் செய்துள்ளது. இந்த அடிப்படையில் ரத்தப் பரிமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணி லக்ஷ்மி, ராஜா இருவரையும் அரசு நிர்கதியாக்கியுள்ளது.

நெறிமுறைகள் செயல்முறைகள்

அதிர்ச்சிகரமான இந்த உண்மை தெரிய வந்தவுடன் அரசு வேகமாக நடவடிக்கையில் இறங்கியது. எச்ஐவி வைரஸின் வளர்ச்சியைத் தடுக்கும் சிகிச்சை (Anti-retroviral treatment) உடனடி யாக லக்ஷ்மிக்குத் தொடங்கப்பட்டது. அத்துடன் தாயிடமிருந்து கருப்பையிலிருக்கும் சிசுவுக்கு எய்ட்ஸ் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடைமுறைகளும் தொடங்கப்பட்டன. உடனடியாக லக்ஷ்மியின் நிலைமை மேம்பட்டது. அவரது நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்தது. ஆனால், ராஜாவைக் காப்பாற்றவே முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குநர் செந்தில் ராஜிடம் பேசியபோது, “தமிழகத்தில் ஆண்டுதோறும் எட்டு லட்சம் ரத்தப் பைகள் சேகரிக்கப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி மக்கள்தொகையில் ஒரு சதவீத ரத்ததானம் என்ற இலக்கை நிறைவேற்றுகிறோம். சேகரிக்கப்படும் ரத்தத்தில் 50 சதவீதம் அரசு ரத்த வங்கிகளிலும் மீதி தனியார் வங்கிகளிலிருந்தும் பெறப்படுகின்றன. சேகரிக்கப்படும் ரத்தம் எச்ஐவி, ஹெபடைடிஸ் பி, சி, பாலியல் நோய், மலேரியா என ஐந்து தொற்றுகள் சார்ந்த பரிசோதனை களுக்கு உள்ளாகிறது. நான்கு லட்சம் ரத்தப் பைகளில் 60 முதல் 90 பைகள் எச்ஐவி தொற்று காரணமாக நிராகரிக்கப்படுகின்றன” என்கிறார்.

2015-16-ல் ரத்த தானம் செய்தவர்களில் 58 பேர் எச்ஐவி தொற்று கொண்டவர்களாக அறியப்பட்டு அவர்களுக்கு ஆலோசனையும் சிகிச்சையும் தொடங்கப்பட்டுள்ளது. 2016-17-ல் 44 பேர், எச்ஐவி தொற்றுள்ளவர்களாக அறியப்பட்டு வைரஸின் தீவிரப் பரவலைக் குறைக்கும் ஏஆர்டி (Anti-retroviral treatment) சிகிச்சையைப் பெற்றுவருகின்றனர். 2017-18-ல் 58 பேருக்கு நோய் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக செந்தில் ராஜ் தெரிவிக்கிறார்.

2017-2018-ல் சொல்லப்படும் புள்ளிவிவரம் தவறவிட்ட அறுவரில் ராஜாவும் ஒருவர்.

“இப்படி நேர்ந்தது மிகவும் துரதிர்ஷ்டமானதுதான். எச்ஐவி வைரஸை ஆரம்பகட்டப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்க இயலாத சூழலில், விலைமதிப்பு மிக்க ஐடி என்ஏடி பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்துவதற்கான பரிந்துரை உள்ளது. கர்ப்பத்தைக் கண்டுபிடிப்பதற்கு எளிய பரிசோதனை அட்டை இருப்பது போல எச்ஐவிக்கும் ஒரு எளிய முறையை அறிமுகப்படுத்தும் பரிந்துரையும் உள்ளது. அந்த முறை வந்தால் ரத்தத்தைப் பரிமாற்றத்துக்கு முன்பே ஒரு தாதியால் பரிசோதனை செய்துவிட முடியும்.” என்கிறார் செந்தில் ராஜ்.

தமிழ்நாடு பாசிட்டிவ் நெட்வொர்க் அமைப்பின் பிரதிநிதி யான கருணாநிதி, தாலுகா மருத்துவமனைகளிலும் ரத்த வங்கிகளிலும் இருக்கும் ஆள் பற்றாக்குறை பற்றிய தனது சங்கடத்தைத் தெரிவிக்கிறார். அரசு கிராமப்புற மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன்களே இல்லை என்கிறார். இத்தனைக்கும் ரத்த வங்கிகள் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டியவை. சில பகுதிகளில் ரத்த வங்கிகளில் ஒப்பந்த முறையில் பணியிலுள்ள ஊழியர்களின் பிரச்சினைகள் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவுகளால் தீர்க்கப் படுவதில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார்.

இன்னொரு சம்பவம்

அதேநேரம், சென்னை மாங்காட்டில் உள்ள இளம் தாய் ஒருவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தப் பரிமாற்றம் செய்யப்பட்டு எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகச் செய்தி வெளியானது. ஆனால், இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பரிமாற்றம் செய்யப் பட்ட ரத்தத்தில் எச்ஐவி இல்லை என்பதை அந்த மருத்துவமனையின் தலைவர் பி. வசந்தாமணி தெளிவுபடுத்தியுள்ளார்.

ரத்தப் பரிமாற்றம் தொடர்பான அத்தனை வழிகாட்டு நெறிகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதாக  மகப்பேறு மருத்துவரும் திமுகவின் மருத்துவப் பிரிவுத் தலைவருமான பூங்கோதை ஆலடி அருணா கூறியுள்ளார். “ரத்தப் பரிமாற்றம் என்பது மனித திசுக்களைப் பரிமாற்றம் செய்யும் புராதனமானதும் வெற்றிகரமானதுமான செயல்முறையாகும். நோய்த்தொற்று உள்ள ரத்தத்தைக் கையாளும்போது மருத்துவர்கள், தாதியர்கள், லேப் டெக்னீசியன்கள் ஆகியோரையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

கர்ப்பிணிகளிடம் பரவலாகக் காணப்படும் ரத்தசோகை குறித்தும் கேள்வி எழுப்புகிறார் பூங்கோதை. சமீபத்தில் ரத்தத்தொற்றால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பெண்கள் மூவருமே கடுமையான ரத்தசோகைக்கு உள்ளானவர்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட ரத்தசோகை நிலை தமிழகத்தில் குறைவாகவே இருந்தாலும் கர்ப்பிணிகளை ரத்தசோகை பாதிக்காமல் பாதுகாப்பது அரசின் கடமை என்று அவர் கூறினார்.

ரத்தப் பரிமாற்றம் மூலம் இளம் கர்ப்பிணிகள் தங்கள் வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் தொடர்வதற்கான நம்பிக்கையை பாசிட்டிவ் வுமன் நெட்வொர்க்கின் பிரதிநிதி கௌசல்யா வழங்குகிறார். “எச்ஐவி தொற்றை மரண தண்டனையாகத் தற்போது கருத வேண்டியதில்லை. எச்ஐவி நோய்த்தொற்றுடன் பிறந்த எங்கள் குழந்தைகள் தற்போது குழந்தை பெற்றுள்ளனர். அந்தக் குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இல்லை. வைரஸ் பரவலைத் தடுக்கும் ஏஆர்டி மருந்தைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் ஆரோக்கியமாக வாழ்க்கையைத் தொடர முடியும்” என்கிறார்.

எச்ஐவி தொற்று தொடர்பாகவும் எய்ட்ஸ் தொடர்பாகவும் சமூகத்தில் நிலவும் புறக்கணிப்பு மனப்பான்மையை சரிசெய்வது அரசின் கடமை என்று கூறுகிறார் கௌசல்யா.

ரத்த தானம், ரத்தப் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்க வேண்டும். ரத்த தானம், ரத்தப் பரிமாற்ற நடைமுறைகளில் இருக்கும் சின்ன சின்ன குறைகளையும் களைந்து இளம் வயது ஆண்களும் இளம் கர்ப்பிணிகளும் இனி மேலும் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

தமிழில்: ஷங்கர் | © தி இந்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x