Last Updated : 12 Jan, 2019 10:39 AM

 

Published : 12 Jan 2019 10:39 AM
Last Updated : 12 Jan 2019 10:39 AM

நாம் இழந்த பொக்கிஷ விதைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கப்பாடல்களில் பேசப்பட்ட வேளாண் தொழில் பற்றிய செய்திகள் கற்பனை அல்ல என்பது பசுமைப்புரட்சிக்கு முன்னர் (1960) விவசாயத் தொழிலில் தீவிரமாகச் செயல்பட்டவர்கள் கூறும் தகவல்களுடன் ஒப்பிட்டால் தெரியும்.

செந்நெல், வெண்நெல், ஐவனநெல் போன்றன அண்மைக்காலம் வரை இருந்தன. யானையை மறைக்கும் அளவுக்கு வளர்ந்த நெற்பயிர் என்பது வருணனை அல்ல. அரிக்கிராவி குடைவாழை போன்ற பயிர்கள் 5 அடி உயரத்திற்கு மேல் வளரும் இயல்புடையவை. 1950க்களில் அரிக்கிராவி பயிரப்பட்டிருக்கிறது.

யாசகர்களாகவும் ஆருடம் சொல்பவர்களாகவும் நாடோடிகளாய் அலைந்தவர்களிடம் நான் சேகரித்த நெல் பெயர்களில் பழம் பாடல்களில் கூறப்படும் நெல் வகைகளும் உள்ளன. இந்தப் பட்டியலில் 66 பெயர்கள் உள்ளன.

pokkish-2jpg

இந்த நெல்வகையைப் பயிரிடும் முறை பற்றிய விபரங்களைத் தெரிந்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். 80க்கு மேல் தாண்டிய விவசாயிகளிடம் பேசிய போதெல்லாம் பழம் நெல் வகையைப் பற்றிப் பேசினார்கள். புதிய கண்டுபிடிப்புகள் அவர்களுக்கும் பிடிக்கவில்லை. புதியவற்றை ஏற்றுக்கொள்ளாத மனோபாவம் அல்ல; புதிய ரகங்களால் நிலங்களில் நிகழ்ந்த மாற்றம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

சம்பாவும் வகைகளும்

சம்பா என்ற நெல்வகை பரவலாக அறியப்பட்டது. இதைப் பயிரிடும் பருவமே சம்பாப் பட்டம் (ஆகஸ்ட்) எனப்பட்டது. இந்த நெல்லைப் புழுதியிலும் விதைக்கலாம். நாற்றங்காலிலும் நடலாம். இது 165 நாள் பயிர். இந்த வகைக்கு எதிர்ப்புசக்தி அதிகம். சாதாரண நோய்களிலிருந்து தாக்குப்பிடிப்பது. பாமர மக்கள் சாப்பிட்டது சம்பா அரிசி என்பதற்கு ஒப்பாரிப் பாடல்களில் சான்று உண்டு.

எனக்குக் கிடைக்காத பட்டியலில் 22 சம்பாவகை நெல் பெயர்கள் உள்ளன. கீரைச்சம்பா, சீரகச்சம்பா எனச் சில பற்றிய வேறு தகவல்களும் கிடைத்தன. காட்டுச்சம்பா வறட்சி தாங்குவது. இது 125 நாள் பயிர். கொச்சிச் சம்பாவின் நெல்மணிகள் சீக்கிரம் உதிராது. மழை நேரத்தில் அறுவடை செய்தாலும் பாதிப்பில்லை. இந்த வகை நெற்பயிர் மிருதுவாக சன்னமாக இருக்கும். இந்த வைக்கோலை கால்நடைகள் விரும்பிச் சாப்பிடும். சீரகச் சம்பா விதைக்கும் முன் கருவேப்பிலை தழையைப் பொடியாக வெட்டி வயலில் போடுவர். இதன் அரிசிச் சாதத்தில் கருவேப்பிலை மணம் கமழும். இது சம்பார், ரசம் குழம்பு ஊறிச் சாப்பிட தோதுவானது.

குறுவை

குறுவை என்ற நெல்லை ஜீன் மாதம் பயிரிடுவர். இதில் 10 வகைப் பிரிவுகள் உண்டு. அறுவங்குறுவா என்ற நெற்பயிர் 80 நாட்களில் விளைச்சல் தரும்; வறட்சி தாங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இதன் வைக்கோல் முதல் தரமானது. குறுகிய நாட்களில் இது பயிராகி விடுவதால் அடுத்த பருவம் வரை என்ன செய்வது என்ற ஏக்கத்துடன் பாடிய

அறுவங்குறுவா வெதவெதெச்சு

அறுத்தடிச்சாச்சு - மிச்ச

அறுபது நாள் என்ன செய்வோம்

மார்த்தாண்ட பெருமா

என்ற ஒரு பாடல் உண்டு. சித்திரகாளி என்ற 80 நாள் பயிரும் உண்டு.

pokkish-3jpgஅ.கா. பெருமாள்right

முண்டான்

வெள்ளை நிறமுடைய நெல்வகையில் தட்டார வெள்ளை உட்பட 9 பெயர்கள் கிடைத்துள்ளன. இதில் முத்து வெள்ளை பாற்சோறு பொங்கப் பொருத்தமானது. முண்டான் நெல்லில் வாசறமுண்டான் உட்பட 17 வகைகள் உண்டு. வீரமார்த்தாண்டன் என்ற நெல்வகையில் 8 பெயர்கள் கிடைத்துள்ளன.

புளுதிபுரட்டி

புளுதிபுரட்டி என்ற நெல் மிகச் சிறிய வயலில் பயிரேற்ற வசதியானது. சிறிய மண்வெட்டி கொண்டு நிலத்தைப் பருவம் செய்யலாம். ஏர் தேவையில்லை. தென் மாவட்டக் காளி கோவில் விழாவில் சடங்கின் ஒரு கூறாக நடக்கும் மது தயாரிப்பிற்கு இந்த நெல்லைப் பயன்படுத்துகின்றனர்.

அரிக்கிராவி

5 அடி உயரம் வரை வளரும் நெற்பயிர். வைக்கோல் அதிக அளவில் கிடைக்கும். இதை நம்பிக் கால்நடைகள் வளர்க்கலாம். இது மிகப் பழைய நெல் ரகம். திருவரங்கக் கண்ணன், பச்சைப்பெருமாள் என வைணவப் பெயர்களில் நெல் உண்டு. விஷ்ணு கோவில் நிலங்களில் இந்த நெல்வகையைப் பயிரிட்டனர். இவற்றிற்கு வரலாறும் உண்டு.

பயணத்திற்கான நெல் வகை

பயணம் செய்யும் போது கொண்டுசெல்லுவதற்குத் தனி நெல்வகைகள் பயிரிடப்பட்டது. கால்நடை அல்லது மாட்டுவண்டிப் பயணத்தில் குறிப்பிட்ட இடத்தில் தங்கி சமைத்துச் சாப்பிட தோதுவான அரிசி அப்போது தேவைப்பட்டது. ஆனைக் கொம்பன், சீதாவல்லி போன்ற அரிசிச் சாதத்தில் ரசம்/தயிர் விட தோதாக இருக்கும். வீரமார்த்தாண்டன் காரமான குழம்புக்குத் தோதுவானது.

சொர்ணவாரி புட்டவிப்பதற்குரிய அரிசி. இதை 2 மணி நேரம் நீரில் ஊறவைத்து பின் புட்டுக்குழலில் தேங்காய் துருவலையும் சேர்த்து போட்டு அவித்தால் போதும். புட்டு தயாராகிவிடும். இந்த அரிசியை இடித்து புட்டுமாவாக்க வேண்டாம். வல்லரக்கன் கொழுக்கட்டை அவிக்க தோதுவான அரிசி.

pongal-malarjpg'இந்து தமிழ்' பொங்கல் மலர் 2019-ல் இன்னும் பல சுவாரசியமான கட்டுரைகளை விரிவாக வாசிக்கலாம். விலை ரூ.120

இந்த அரிசிமாவைத் தேக்கிலையில் பொதிந்து வன்னிக்கொடி சுற்றிக் கட்டி தீயில் சுட்டு எடுக்கலாம். சாஸ்தாகோவில் சடங்குகளை நிகழ்த்த இந்த நெல்வகையைப் பயன்படுத்த வேண்டும் என்ற நியதி இருந்தது. இதனால் குத்தகைக்காரர்கள் சாஸ்தாகோவில் நிலங்களில் வல்லரக்கனைப் பயிரிட்டனர்.

பழைய சாதத்துக்கு நெல் வகை

பனங்குறுவா அரிசியில் பொங்கிய பழைய சாதம் இனிமையாக இருக்கும். இந்தச் சாதம் ஒரு நாள் கழிந்தாலும் புளிக்காது. பழம் சாதத்திற்கு சேர்க்க வேண்டிய தண்ணீரைக் கூட உலை கொதிக்க வைக்கும்போது தனியே எடுத்து வைத்துவிடுவர். இந்தச் சாதத்தில் கட்டித்தயிர் விட்டு சாப்பிடுவர். தொடுகறி தீயில் சுட்ட மோர் மிளகாய். இந்த நெல்லைப் பரவலாகப் பயிரிட்டனர்.

அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர்,
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x