பாழடைந்த பள்ளிக்கு உயிரூட்டியவர்கள்!

பாழடைந்த பள்ளிக்கு உயிரூட்டியவர்கள்!
Updated on
2 min read

சிதிலமடைந்த கட்டிடம். பகலில் சூதாட்டம். இரவில் மது அருந்திவிட்டு ஆர்ப்பாட்டம். ஓரிரு இரவோ பகலோ இல்லை இது. 20 ஆண்டுகள் கேட்பாரற்றுக் கிடந்த பள்ளி வளாகம் இத்தகைய அசம்பாவிதங்களுக்குக் கூடாரமானது. வெகுண்டெழுந்தனர் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.  தங்களை வளர்த்தெடுத்த அரசுப் பள்ளியை அரசே கைவிட்டுவிட்ட நிலையில், அள்ளி அணைத்துக்  கைம்மாறு செய்ய முடிவெடுத்தனர். இரண்டு மாதத்தில் ரூ. 40 லட்சம் செலவு செய்து பள்ளியைத் திறந்திருக்கிறார்கள் திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் உள்ள ஊராட்சி  நடுநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும்.

காமராஜர் தொடங்கிவைத்த பள்ளி

1957-ல் காமராஜரால் பெருமா நல்லூரில் ஊராட்சி  நடுநிலைப்பள்ளி  தொடங்கப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளான அப்பியாபாளையம், ஆண்டிபாளையம் உள்ளிட்ட  கிராமங்களில் பள்ளிகள் இல்லாத காலம் அது. இந்தப் பள்ளி அன்று பலருக்கு அறிவுக் கண்ணைத் திறந்துவைத்தது. ஆரம்பத்தில் 150 குழந்தைகளுடன் இருபாலர் பள்ளியாகச் செயல்படத் தொடங்கியது. இதில் படித்தவர்களில் பலர் இன்று தொழில் அதிபர், பின்னலாடை உற்பத்தியில் தொழில்முனைவோர், மருத்துவர், வழக்கறிஞர், ஆசிரியர், காவல்துறையினர் எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்துவருகிறார்கள்.

கல்வி சந்தைப் பொருளாக மாற்றப்படாத, வீதிதோறும் தனியார் பள்ளிகள் முளைத்திடாத காலம் அது.  இதனால் மாணவர்களின் எண்ணிக்கையும் பள்ளியில் வேகமாக உயர்ந்தது. உயர்நிலை அதன்பின் மேல்நிலை என மேலும் மேலும் தரம் உயர்ந்தது. கல்வியிலும்!

ஏற்றம் மட்டுமே கொண்டிருந்த பள்ளி எப்படித் திடீரெனச் சரிந்தது? “பெருமாநல்லூர் ஊராட்சி  நடுநிலைப் பள்ளி பாலசமுத்திரம் அருகே உள்ள மேல்நிலைப் பள்ளியுடன் 1996-ல் இணைக்கப்பட்டது. அந்தப் பள்ளி முழுவீச்சுடன் செயல்படத் தொடங்கியதும் இந்தப் பள்ளியில் அலுவலகப் பணிகள் உட்பட அனைத்தும் 1998-ல் முடக்கப்பட்டன.

அதன்பின் பள்ளி வளாகம் இழுத்து மூடப்பட்டது. பள்ளி வளாகத்துக்குள் கட்டிடங்கள் இருந்ததால், என்னென்ன விஷயங்கள் நடக்கக் கூடாதோ அனைத்தும் அரங்கேறின. இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து ரூ. 40 லட்சம் வரை செலவு செய்து பள்ளியைத் திறந்துள்ளோம்” என்றனர் பெருமாநல்லூரில் ஊராட்சி  நடுநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.

20 ஆண்டு பிரச்சினை 2 மாதங்களில் தீர்ந்தது?

இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரான மருத்துவர் கோவிந்தராஜன் “ 78 வயதுவரை இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அனைவரும் எங்கள் பள்ளியை மீட்டெடுக்கும் ஒற்றை இலக்கோடு ஒன்றுகூடினோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்தப் பகுதிக்கு வந்த கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம், கைவிடப்பட்ட எங்கள் பள்ளி தொடர்பாக புகார் அளித்தோம். அவரிடம் மேலும், புனரமைப்புப் பணிகளை நாங்களே செய்துவிடுகிறோம்.

மீண்டும் பள்ளியை இயக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கோரிக்கைவிடுத்தோம். இந்நிலையில் டிசம்பர் 15 அன்று அமைச்சர் செங்கோட்டையனே பள்ளியைத் திறந்துவைத்தார். பெருமாநல்லூர் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக  அரையாண்டு விடுப்புக்குப் பின் ஜன. 2-ம் தேதியில் இருந்து முழுவீச்சில் செயல்பட உள்ளது.  பாலசமுத்திரம் பள்ளியில் படித்த 6-10-ம் வகுப்புவரை படித்த 249 மாணவிகளுடன் பள்ளி மீண்டும் செயல்பட உள்ளது. இதில் தலா 5 தமிழ்வழி, ஆங்கிலவழி வகுப்புகள் உள்ளன” என்றார்.

முன்னாள் மாணவர்கள்!

தனியார் பள்ளிகளுடன் போட்டிபோடும் அளவுக்குத் தரமான புதிய கட்டிடங்கள், குடிநீர், சுற்றுச்சுவர், ஸ்மார்ட் வகுப்பறைகள், இருக்கை வசதிகள், கழிவறை, பள்ளி வளாகத்துக்குள் சானிட்டரி நாப்கினை அப்புறப்படுத்த இயந்திரம் எனப் பல்வேறு வசதிகளுடன் ஜொலிக்கிறது பள்ளி வளாகம். முன்னாள் மாணவர்கள் நிதி உதவி, பொருள் உதவி, உடல் உழைப்பு, கிராம மக்களின் அளவற்ற உதவிகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து பள்ளிக்கு மீண்டும் உயிரூட்டியுள்ளன. 

இந்நிலையில் பள்ளிக்குப் பலரும் உதவுவதைக் கண்டு, திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினரான கே.என்.விஜயகுமாரும், தன் பங்குக்குச் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 12 லட்சத்தைத் தற்போது வழங்கிப் பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார்.

பள்ளியின் முன்னாள் மாணவர்களும் திருப்பூரின் தொழில் அதிபர்களுமான ஏ.ஆர். சுப்பிரமணியம் மற்றும் அப்புக்குட்டி ஆகியோர்,  “பள்ளிக்குத் தலைமை ஆசிரியை தனபாக்கியம் உட்படப் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துக் குழந்தைகளுக்கு வரும் 2 அன்று முதல் சத்துணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமூகவிரோதிகளின் கூடாரமாகிப் போன எங்கள் பள்ளியை, அந்தச் சூழலில் இருந்து மீட்டெடுத்ததில் அனைவருக்கும் அளவில்லாத மகிழ்ச்சி” என அவர்கள் பேசி முடிக்கும்போது வெளியில் மழை கொட்டத் தொடங்கியது.

அந்தச் சூழல் மட்டுமல்ல....நெஞ்சும் ஈரமானது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in