Published : 07 Dec 2018 06:49 PM
Last Updated : 07 Dec 2018 06:49 PM

தமிழகப் பறவைகளும் தமிழ் விக்கிபீடியாவும்!

குதூகலமும் கொண்டாட்டமுமாக நடந்து முடிந்திருக்கிறது 5-வது தமிழகப் பறவையியலாளர் சந்திப்பு. கடந்த 1, 2-ம் தேதிகளில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பி.ஏ.சி.ராமசாமி ராஜா பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வழக்கத்தைவிடக் கூடுதலான பறவை ஆர்வலர்களைக் காண முடிந்தது.

பறவைகள் கணக்கெடுப்பு, பறவைகளை அடையாளம் காணுதல், பறவை ஒளிப்படக் கலை, தோல் பாவை செய்தல் போன்ற பிரிவுகளில் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு, தமிழ் விக்கிபீடியாவில் பறவையியல் தொடர்பான கட்டுரைகளை எவ்வாறு செழுமைப்படுத்துவது என்பது குறித்துத் தனியே ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பறவைகளைப் பற்றி நிறைய தகவல்களும் ஆய்வுகளும் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்ப்பது அல்லது நேரடியாகத் தமிழில் புதிய கட்டுரைகளை எழுதுவது ஆகியவற்றின் மூலம், தமிழர்களுக்கு பறவையியலை எடுத்துச் செல்ல முடியும் என்பது தமிழகப் பறவை ஆர்வலர்கள் பலரது கருத்து.

ஆனால், தமிழ் மொழியில் அவற்றை எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் இருக்கும் ஒரு சிக்கல்… ஆங்கிலத்துக்கு இணையான கலைச் சொற்கள் இல்லாததே. இதுதொடர்பாக இயங்கிவரும் சிலரிடம், அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துக் கேட்டோம்.

தேவை உள்ளூர்ப் பறவைகளின் படங்கள்

“பறவை நோக்கலில் இருந்த ஆர்வம் காரணமாக, பறவைகளைப் பற்றித் தமிழில் அறிய விக்கிபீடியாவில் தேடினேன். ஆனால், போதிய தகவல் கிடைக்கவில்லை. எனவே, நானே எனது பறவை நோக்கல் அனுபவத்தின் அடிப்படையில் விக்கிபீடியாவில் எழுதி வருகிறேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் நீதிதாஸ். பறவைகள் குறித்து தமிழ் விக்கிபீடியாவில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். பறவை ஆர்வலர் சந்திப்பில் இந்தக் கருத்தரங்கை ஒருங்கிணைத்தவரும் இவரே..!

“தமிழில் கட்டுரைகள் எழுத, சங்க இலக்கியம் முதற்கொண்டு நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டியிருந்தது. ஏற்கெனவே தமிழ் விக்கிபீடியாவில் உள்ள பறவைகள் தொடர்பான கட்டுரைகளில் நிறைய தவறுகள் இருப்பதையும் அறிந்தேன்.

மேலும் லத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உள்ள அறிவியல் பெயர்கள் மற்றும் வகைப்பாட்டியல் (taxonomy) போன்றவற்றைத் தனித் தமிழில் எழுதுவதால், அவற்றின் அர்த்தமே மாறுகின்றன. அதற்குக் காரணம், பறவைகளைப் பற்றித் தெரியாதவர்கள் ஆங்கிலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்ப்பதுதான்.

இரண்டாவதாக, தமிழகத்தில் இன்று பறவை ஒளிப்படக் கலைஞர்கள் நிறையப் பேர் உள்ளனர். ஆனால், தமிழகத்தில் தென்படும் பறவைகள் தொடர்பான ஒளிப்படங்கள் அதிக அளவில் இல்லை. எனவே, பறவைகளைப் படம் எடுப்பவர்கள் ‘விக்கி காமன்ஸ்’ (wiki commons) பகுதியில், தமிழ் விளக்கத்துடன் பதிவேற்றம் செய்தால், கட்டுரைகள் எழுதுபவருக்கு உதவியாக இருக்கும். 

இருவாட்சி என்பது ஒருவகை மரம்.

அந்த மரத்தில் கூடுகட்டி வாழ்வதால் ஆங்கிலத்தில் ‘ஹார்ன்பில்’ (Hornbill) என்று அழைக்கப்படும் பறவையைத் தமிழில், இருவாட்சிப் பறவை

என்று நம் முன்னோர்கள் அழைத்தனர். கட்டுரை எழுதுபவர்கள், இப்படிப் பறவைகளின் பொதுப் பெயர்கள், வட்டார வழக்குப் பெயர்கள் ஆகியவற்றுக்கான காரணங்களையும் தெரிந்து எழுதினால், மிக விரைவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பறவைகளைப் பற்றிய சரியான தகவல்களுடன் தமிழ் விக்கிபீடியாவை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மாற்ற முடியும்” என்றார் நீதிதாஸ்.

பொதுத் தமிழில் எழுதுவோம்!

இதுகுறித்து, இந்தச் சந்திப்பை ஒருங்கிணைத்த பறவையிலாளர் ப.ஜெகநாதன் கூறும்போது, “தமிழ் விக்கிபீடியா ஒரு நல்ல ஊடகம். ஆனால், பறவையியலாளர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால், பறவைகளைப் பற்றிய செய்திகளும் ஒளிப்படங்களும் குறைவாகவே உள்ளன. நமது பங்கு அதிகரித்தால் நிச்சயமாக தமிழகப் பறவைகளைப் பற்றிய கட்டுரைகளை அதிகமாகவும் துல்லியமாகவும் பதிவிடலாம்.

மேலும் மொழிபெயர்ப்பாளர்கள் தற்போதைக்குப் பொதுத் தமிழில் எழுதினால் அனைவருக்கும் எளிதாகப் புரியும். பிற்காலத்தில் தூய, தனித் தமிழை நடைமுறைக்குக் கொண்டு வரலாம்” என்றார்.

பறவையியலாளர்கள், சூழலியல் ஆய்வாளர்கள், பறவை ஆர்வலர்கள், தமிழறிஞர்கள், ஒளிப்படக் கலைஞர்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய பணி இது. அப்படி ஒன்றிணைந்தால் மட்டுமே புதிய வெளிச்சம் கிடைக்கும்!

- வெ.கிருபாநந்தினி, பறவை ஆர்வலர் மற்றும் சூழலியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: knlifescience01@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x