Last Updated : 04 Dec, 2018 10:57 AM

Published : 04 Dec 2018 10:57 AM
Last Updated : 04 Dec 2018 10:57 AM

இதயம் சொன்னதைக் கேட்ட சாதனையாளர்

ஒரு மனிதரின் நோக்கமும் விருப்பமும் அவரது இதயத்தில் வேர்கொண்டிருந்தால், எங்கெங்கோ சென்றாலும் தன் இலக்கை அடைந்து சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் ஐராவதம் மகாதேவனின் வாழ்க்கை. சங்க இலக்கியங்களிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறுவயதிலேயே ஈடுபாடு கொண்டிருந்த மகாதேவன், மொழிகளைப் பற்றிப் படிக்கவே ஆசைப்பட்டார்.

அவருடைய தந்தைக்கு மகனை மருத்துவராக்கும் ஆசை இருந்தது.  போதுமான மதிப்பெண் பெறாததால் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே இந்து சட்டத்தையும் அரசியல் சாசன விதியையும் பாடமாக எடுத்த வெங்கட சுப்பிரமணிய அய்யரின் தாக்கத்துக்குள்ளானார். அவர் கற்றுக்கொடுத்தவை ஆட்சிப் பணியாளராகப் பணியாற்றியபோது  மக்களை அணுகுவதற்கும் நிர்வகிப்பதற்கும் உதவியாக இருந்ததாக மகாதேவன் குறிப்பிடுகிறார்.

நேரு தேர்ந்தெடுத்த அதிகாரி

சட்டம் படித்து முடித்து, திருச்சிராப்பள்ளியில் ஒரு வருடம் பயிற்சி வழக்கறிஞராகப் பணியாற்றிய ஐராவதம் மகாதேவன்,  1953-ல் குடிமைப்பணித் தேர்வை எழுதினார். 23 வயதே ஆகியிருந்த அவர், தமிழகத்திலிருந்து இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வு பெற்றதோடு முதல் நிலை ரேங்க் பட்டியலிலும் இடம்பெற்றார்.

அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, நேரடியாக நேர்காணல் செய்து ஐராவதம் உட்பட நான்கு பேரை அயல்நாட்டுப் பணிக்காகத் (ஐ.எஃப்.எஸ்.) தேர்ந்தெடுத்தார். இத்தனை பெரிய கௌரவத்தை அடைந்தும் இந்தியாவுக்குள் பணிசெய்ய அவர் விரும்பிய நிலையில், நேருவின் நேரடித் தலையீட்டில் பொள்ளாச்சியில் துணை ஆட்சியராகத் தமிழ்நாட்டுக்கு வந்தார்.

பணியோடு தொடர்ந்த விருப்பம்

துணை ஆட்சியராகக் கிராம நிர்மாணப் பணிகளுக்காக நிறையப் பயணித்தார். இந்தப் பயணங்களில் புராதன ஆலயக் கல்வெட்டுகள், பழைய நாணயங்கள் சேகரிப்பு என அவரது மொழி ஆர்வத்தைப் புதுப்பித்துக்கொண்டார். பின்னர் டெல்லியில் வர்த்தகத் தொழில்துறை அமைச்சகத்தில் உதவி நிதி ஆலோசகராகப் பதவி உயர்வு பெற்றார்.

அவர் பணியாற்றிய அலுவலகத்துக்கு அருகிலேயே ஜனாதிபதி மாளிகை இருந்தது. அந்த மாளிகையின் முற்பகுதியில் அப்போது இயங்கிவந்த தேசிய அருங்காட்சியகத்துக்குச் சென்று இந்தியக் கல்வெட்டுகளைப் பற்றிப் படிக்கத் தொடங்கினார். அந்த அருங்காட்சியகத்தின் காப்பாளராக இருந்த இந்தியாவின் சிறந்த கல்வெட்டு நிபுணர்களில் ஒருவரான சி. சிவராமமூர்த்தி அவரது முதல் ஆசிரியரானார்.

airavadham-2jpgright

கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தார்

1961-ல் மீண்டும் தமிழகம் திரும்பியவர், வரலாற்று அறிஞர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியைச் சந்தித்துத் தனது ஆய்வுப் பாதையை நெறிப்படுத்தக் கோரினார். தமிழகத்தில் பிராமி எழுத்துகளைக்

கொண்ட குகைகள் பல இருப்பதாகவும், அவை தமிழ் எழுத்துகள் என்று ஆய்வாளர் கே. வி. சுப்பிரமணிய அய்யர் சொல்வதாகவும் கூறிய நீலகண்ட சாஸ்திரி, அதை உறுதிப்படுத்த முடியுமா என்று கேட்டார். தமிழின் சிறப்பு எழுத்துகளான ழ, ள, ற, ன போன்ற எழுத்துகள் குகைக் கல்வெட்டுகளில் இருப்பதையும், தமிழ்ச் சொற்கள் இருப்பதையும், தமிழ் இலக்கணப்படி அவை இருப்பதையும் சுட்டிக்காட்டி முதன்முதலாக சுப்பிரமணிய அய்யர் எழுதியிருந்தார். தமிழ் பிராமி எழுத்துகளை நோக்கிய ஆராய்ச்சியை நோக்கி ஐராவதம் மகாதேவன் இப்படித்தான் நகர்ந்தார்.

புகளூரில் சங்கக் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளை அவர் வெளியிட்ட தருணம் தமிழ் மொழி வரலாற்றில் மிக முக்கியமானது. புகளூர் கல்வெட்டுகள் சேரர் காலத்தைச் சேர்ந்தவை. இதையடுத்துச் சங்கக் காலக் கல்வெட்டுகள் மாங்குளத்திலும் அவரால் கண்டறியப்பட்டன. இது பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது.

தமிழ்- பிராமியிலிருந்து வட்டெழுத்து வடிவம் நோக்கி எந்தெந்த நிலைகளை தமிழ் வரிவடிவம் கடந்தது என்பதை அவர் எழுதிய Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century C.E. (Tamil-Brahmi Inscriptions)  புத்தகத்தில் விளக்கமாக எழுதியுள்ளார். அதுவரை சங்க காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இந்தப் புத்தகம் அவரது 38 ஆண்டுகால ஆய்வுப் பணிச் சாதனையின் வெளிப்பாடாக அறிஞர்களால் கருதப்படுகிறது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் நிலவிய தமிழ் மொழி அறிவை அவர் இந்தப் புத்தகத்தில் அவர் ஆராய்ந்துள்ளார். தமிழகத்தில் அரசவை, உயர்குடியினர், ஆலயம் சார்ந்த மக்களிடத்தில் மட்டுமின்றி எல்லா நிலைகளிலும் எழுத்தறிவு பரவலாகக் காணப்பட்டது என்று குறிப்பிடுகிறார்.

சிந்து சமவெளி நாகரிகத்திலும் ஈடுபாடு கொண்ட அவர், சிந்து வெளியில் கிடைத்த குறியீடுகள், முத்திரைகளைப் படிப்பதில் நம்பகமான ஒரு முறையை ஏற்படுத்தினார். அத்துடன் சிந்துவெளிப் பண்பாடு திராவிடப் பண்பாடுதான் என்பதையும் ஆய்வுபூர்வமாக நிரூபித்துள்ளார்.

மேலும், தினமணி நாளிதழின் ஆசிரியராக ஐந்தாண்டுகள் பணியாற்றித் தமிழ் ஊடகப் பண்பாட்டில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தினார். தனிப்பட்ட இழப்புகளுக்குப் பிறகும் தான் தேர்ந்தெடுத்த துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் ஈடுபட்டு மொழிக்கும் சமூகத்துக்கும் பங்களித்த சாதனையாளர் என அவரின் ஆளுமை பரந்துபட்டது.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x