Last Updated : 30 Dec, 2018 10:16 AM

 

Published : 30 Dec 2018 10:16 AM
Last Updated : 30 Dec 2018 10:16 AM

மகளிர் திருவிழா: சென்னை வாசகிகளின் அட்டகாசமான கொண்டாட்டம்!

கும்பகோணம், கடலூர், திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர் வாசகிகளை அசத்தியதைப் போன்றே ‘இந்து தமிழ்- பெண் இன்று’ மகளிர் திருவிழா, டிசம்பர் 23 அன்று சென்னை வாசகிகளை உற்சா கத்தில் ஆழ்த்தியது. நூற்றுக்கும் மேற்பட்ட வாசகிகள் பங்கேற்ற இந்த மகளிர் திருவிழா சென்னை டி.ஜி. வைணவக் கல்லூரி அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. தன்னம்பிக்கை அளிக்கும் சிறப்புரைகள், சுவாரசியமான போட்டி கள், கலக்கல் கொண்டாட்டங்கள், ஆச்சரியப் பரிசுகள் என இந்தத் திருவிழா சென்னை வாசசிகளின் மனத்தைக் கொள்ளை கொண்டது.

அரசியல் பழகுவோம்

விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட சென்னை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர் எஸ். மல்லிகா பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்துப் பேசினார். சமூகச் செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான மா (பத்மாவதி), பாலின சமத்துவம் பற்றியும் குழந்தை வளர்ப்பில் பின்பற்றப்பட வேண்டிய சமத்துவம் குறித்தும் உரையாற்றினார். இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலத் துணைச் செயலாளர் மஞ்சுளா பெண்களின் அரசியல் பங்களிப்பு குறித்து வாசகிகளுடன் கலந்துரையாடினார்.

ஓட்டுப்போடுவது மட்டுமல்ல அரசியல்; வாழ்வில் ஒவ்வொரு படிநிலையிலும் நடக்கிற ஒவ்வொரு நிகழ்விலும் அரசியல் இருக்கிறது என்பதை மஞ்சுளா சிறப்பாக எடுத்துரைத்தார். கோமளேஸ்வரி, பத்மாலக்ஷ்மி, காந்திமதி, பரிமளா, ஃபரிதா, கோட்டீஸ்வரி ஆகிய வாசகிகள் அரசியலில் பெண்கள் பங்களிப்பதன் அவசியம் குறித்துத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

தொழில்முனைவோராவது எப்படி என ஏகா ஹெர்பல் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனர் நந்தினி பிரியாவும், தாய்மைக் கால யோகப் பயிற்சி பற்றி ஈஷா யோகாவைச் சேர்ந்த இந்துவும் விளக்கினார்கள்.

நீ பாடாமல் விடியாது பெண்ணே

வாசகிகளை உற்சாகப்படுத்தும்விதத்தில் சென்னையைச் சேர்ந்த ‘மாற்று ஊடக மையம்’ சார்பில் பறையாட்டம், சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற பல்வேறு நாட்டுப்புற நடனங்கள் நடைபெற்றன. ‘நீ பாடாமல் விடியாது பெண்ணே’ என்ற பாடலுடன் தொடங்கிய இந்தக் கலைநிகழ்ச்சிகளுக்கிடையில், மாற்று ஊடக மையத்தின் நிறுவனர் முனைவர் காளீஸ்வரன் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனைப் பெண்கள் பலரைப் பற்றிய குறிப்புகளை வாசகிகளுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்தப் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளையும் சாதனைப் பெண்கள் பற்றிய செய்திகளையும் வாசகிகள் வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்.

வாசகிகளின் படைப்பாற்றல்

வாசகிகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் வசனமில்லா நாடகப் போட்டியும் (மைமிங்) ரங்கோலிப் போட்டியும் நடைபெற்றன. ‘மைமிங்’ போட்டியில், ‘சின்னத்திரை மோகம்’ என்ற தலைப்பில் நடித்துக்காட்டிய வாசகிகள் குழு முதல் பரிசைத் தட்டிச்சென்றது. ‘புத்தாண்டு’, ‘பொங்கல்’  கொண்டாட்டங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற ரங்கோலிப் போட்டியில் வாசகி பி.எஸ். ரமா ரமணி முதல் பரிசைப் பெற்றார்.

அத்துடன், வாசகிகளை உற்சாகமாக விளையாட வைக்கும் நோக்கத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கணவருக்குக் காதல் கடிதம் எழுதும் போட்டி, மணி கோக்கும் போட்டி,  பந்து பாஸ் செய்தல் போட்டி, தலையில் ஸ்டிரா செருகும் போட்டி, ஸ்டிரா-பந்து போட்டி, கோலி-ஸ்பூன் போட்டி, பிஸ்கட் சாப்பிடும் போட்டி, இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டிலைக் கையை மடக்காமல் பிடித்திருக்கும் போட்டி போன்ற சுவாரசியமான போட்டிகள் நடத்தப்பட்டு வாசகிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அனைவருக்கும் பரிசு

போட்டிகளுக்கு நடுவே சென்னை நகரைப் பற்றிய பொது அறிவுக் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியாகப் பதிலளித்த வாசகிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன், திடீர் போட்டியில் குறிப்பிட்ட வார்த்தைகளில் தொடங்கும் பாடல் களைப் பாடிய வாசகிகளுக்கு ஆச்சரியப் பரிசுகளும் வழங்கப்பட்டன. வாசகிகள் சகாய சந்தன மேரி, நந்தினி இருவரும் பம்பர் பரிசாகப் பொன்மணி வெட் கிரைண்டரைத் தட்டிச்சென்றனர்.

சகாய சந்தனமேரி கேட்கும் திறனும் பேச்சுத் திறனும் இல்லாதவர் என்ற அறிவிப்பு  வாசகிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விழாவுக்கு முதலில் வந்து பதிவு செய்த வாசகி சரஸ்வதி சிறப்புப் பரிசைத் தட்டிச்சென்றார். அத்துடன், விழாவில் கலந்துகொண்ட வாசகிகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவின் மாலை நிகழ்ச்சிகளைச் சின்னத்திரை நடிகை தேவி கிருபா தொகுத்து வழங்கினார்.

இந்த விழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழுடன் இணைந்து பாதுகாப்பு பார்ட்னராக இந்தியன் ஆயில் நிறுவனம், தொழில்நுட்ப பார்ட்னராக ஜெப்ரானிக்ஸ், உணவு பார்ட்னராக சுபம் கணேசன் கேட்டரர்ஸ், பொன்வண்டு டிடர்ஜென்ட் பவுடர் அண்ட் கேக், தி.நகர் எல்.கே.எஸ். அன்னை டேட்ஸ், பொன்மணி வெட்கிரைண்டர், ஸ்ரீஐஸ்வர்யா சாரீஸ், ஆச்சி, சௌபாக்யா, வைப்ஸ், பீதாம்பரி - ரூபேரி, பிஜியன், கண்மார்க் ஊறுகாய், ஏகா, நெஸ்ட்லே நெஸ் பிளஸ், நெல்லை மசாலா, மண்ணா, சன்லேண்ட், ஏ.வி.ஏ. மேளம் மசாலா ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

படங்கள்: க.ஸ்ரீபரத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x