Last Updated : 28 Dec, 2018 10:52 AM

 

Published : 28 Dec 2018 10:52 AM
Last Updated : 28 Dec 2018 10:52 AM

திரையிசை 2018: மீட்கும் இசையை மீட்டியவர்கள்!

அவ்வப்போது நல்ல பாடல்களைத் தமிழ் சினிமா கொடுத்துவருகிறது. ஆனாலும், இசைப் பிரியர்களைக் கிறங்கடிக்கக்கூடிய முழு ஆல்பம் வெளியாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட தமிழ்த் திரையின் இசை ஜாம்பவான்கள்கூட இந்த விமர்சனத்துக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மாறாக, இந்த ஆண்டு வெளியான ‘96’ திரைப்படத்தின் இசை ஆல்பம் அந்தக் குறையைப் போக்கியது.

தற்காலத் திரையிசை ரசிகர்களின் ரசனை வெகுவாக மாறிவிட்டது. இளம் தலைமுறையினர் அதிரவைக்கும் ஒலிக் கலவைகள், கேலி கிண்டல் தளும்பும் பாடல் வரிகள் ஆகியவற்றால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது போன்ற பொத்தாம்பொதுவான கருத்தை

‘96’-ன் ஆல்பத்துக்குக் கிடைத்த வரவேற்பு பொய்யாக்கியிருக்கிறது. ‘எனக்கிப்ப கல்யாண வயசுதான் வந்துருச்சு டீ… டேட் பண்ணவா சாட் பண்ணா’ என்னும் வரிகளைக் கேட்டுக் குதூகலித்த அதே இளங்காதுகள்தாம், ‘தீரா உள் ஊற்றைத் தீண்டவே… இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆழ்கிறேன்’ என்ற வரிகளாலும் புளகாங்கிதம் அடைந்தன. தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் அலைபேசிகளின் அழைப்பிசையாக ‘காதலே காதலே தனிப்பெரும் துணையே…’ பாடல் இடம்பிடித்துக்கொண்டது.

சிறந்த ஆல்பம்

திரையிசையைக் கடந்து தனி இசை மீது ஆர்வம் கொண்டவர்களின் டாப் 10 பட்டியலில் ‘தைக்குடம் பிரிட்ஜ்’ இசை பேண்டுக்கு ஒரு தனி இடம் உண்டு. நண்பர்களோடு சேர்ந்து இந்த பேண்டை உருவாக்கிய பாடகரும் வயலின் இசைக் கலைஞருமான கோவிந்த் மேனன்தான் கோவிந்த் வசந்தா என்ற பெயருடன் ‘96’ படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

2012-லேயே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் பின்னணி இசை, இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியான ‘அசுரவதம்’ படத்துக்கான இசை எனத் தனது கோலிவுட் கணக்கைத் தொடங்கியிருந்தாலும் ‘96’ படத்தின் மூலமே இளையோரின் இசை மனத்தை வென்றிருக்கிறார். தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘சீதக்காதி’ படத்தின் இசை வழியாகவும் ஈர்த்து, 2018-ன் சிறந்த மற்றும் நம்பிக்கை ஊட்டும் இசையமைப்பாளராக வசீகரிக்கிறார் கோவிந்த் வசந்தா.

ஆண் இசை தேவதைகள்

‘96’ படத்தில் காதல் சொட்டச் சொட்ட ‘காதலே காதலே’, ‘வசந்த காலங்கள்’, ‘தாபங்களே ரூபங்களாய்’, ‘இரவிங்கு தீவாய்’, ‘அந்தாதி’ ஆகிய பாடல்களைக் கசிந்துருகிப் பாடி நம்மைக் கரைத்துவிட்டார் சின்மயி.

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ‘ஹை ஆன் லவ்’ பாடலில் சித் ஸ்ரீராமின் குரல் உண்டாக்கும் போதையில் மயங்கிக் கிறங்கித் தள்ளாடாத ஜீவன் இருக்க முடியுமா?! மகனின் குறும்புத்தனத்தில் திளைத்துப்போகும் தந்தையாக ‘டிக் டிக் டிக்’-ல் ‘குறும்பா’ பாடலில் அவர் மாறி இருப்பார், ‘என்னடி மாயாவி’ பாடலை ஒரு முறை கேட்டுவிட்டு யாராலும் அதை அப்படியே கடந்துபோய்விட முடியாது. நம்மை அறியாமல் அதன் விஷம் நம் தலைக்கேறும்.

govindjpgகோவிந்த் வசந்தா right

அதற்கான சூட்சுமம் சித் ஸ்ரீராமின் குரலில் ஒளிந்திருக்கிறது. தாய்மை நிறைந்த குரலால் ‘கரைவந்த பிறகே பிடிக்கிது கடலை’, ‘கண்ணம்மா கண்ணம்மா’ என்று பாடி நம்மைத் தாலாட்டியவர் பாடகரும் இசைக் கலைஞருமான பிரதீப் குமார். அவருடைய குரலுக்குள் ஒளிந்திருக்கும் தாய்மையால் நெகிழாத மனம் இருக்க வாய்ப்பில்லை.

ஆருதல் தந்த குருவி

இந்த ஆண்டு யுவன் சங்கர் ராஜாவுக்கு ‘கம்பேக்’ ஆண்டு என்று சொல்லலாம். ‘பியார் பிரேமா காதல்’ ஆல்பத்தை இளமைத் துள்ளல் பொங்கத் தந்தார். ‘காலா’,‘பரியேறும் பெருமாள்’, ‘வடசென்னை’ என 2018-ன் முக்கியத் திரைப்படங்களில் சந்தோஷ் நாராயணன் ஆங்காங்கே ஓரிரு பாடல்களால் தன்னுடைய இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

‘செக்கச் சிவந்த வானம்’, ‘சர்கார்’, ‘2.0’ என அடுத்தடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் ஜாலத்தால் 2018 நிரம்பப்போகிறது என்ற செய்தியே அவருடைய இசைப் பித்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அவர்களைத் திக்குமுக்காட வைத்தது. ஆனால், ‘செக்கச் சிவந்த வானத்தில்’ மழைக் குருவி, ‘2.0’-ல் புல்லினங்களைத் தவிர வேறெதையும் அவர் தரவில்லை என்பதுதான் சோகம். அண்மையில் வெளியான, இன்னும் வெளியாகாத படமான ‘சர்வம் தாளமய’த்தின் மூன்று பாடல்கள் சிறிது ஒத்தடம் அளித்தன.

பின்னணி இசைக்காக ‘வடசென்னை’, ‘96’, ‘மெர்குரி’ படங்கள் பரவலாகப் பேசப்பட்டன. விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியால் பிரபலமடைந்தவர் மக்கள் இசைக் கலைஞர்கள் ராஜலட்சுமி – செந்தில் கணேஷ் தம்பதி. கம்பீரமும் கூர்மையும் கைகூடிய குரலுக்குச் சொந்தக்காரர்களான இவர்களுக்குப் பெயர் பெற்றுக்கொடுத்த நாட்டுப்புறப் பாடல் ‘சின்ன மச்சான்’ .

இன்னும் வெளிவராத ‘சார்லி சாப்ளின் – 2’ படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இசைமையமைப்பாளர் அம்ரிஷின் ரீமிக்ஸுடன் சிங்கிளாக வெளியாகி ரசிகர்களை ஆட்டம்போட வைத்திருக்கிறது. பாடலாசிரியர்களைப் பொறுத்தவரை ‘காலா’-விலும் ‘96’-லும் உமா தேவியின் பாடல் வரிகள் நம்மைக் கட்டிப்போட்டன.

கேட்பது தவறா?

தன்னுடைய இசையமைப்புக்கு உரிய ராயல்டி கேட்டபோதெல்லாம் சர்ச்சைக்குள்ளாகி  இருக்கிறார் இளையராஜா. கடந்த ஆண்டு மேடையில் தனது பாடல்களைப் பாடகர் எஸ்.பி.பி. பாடியதற்கு ராயல்டி கோரியதில் இந்த விவகாரம் இன்னும் தீவிரமடைந்தது. அண்மையில் அவர் தன்னுடைய பாடல்களுக்கு ராயல்டி கோரும் வீடியோ பதிவை வெளியிட்டபோது சரமாரியாகக் கேள்விகள் எழுந்தன.

“ நீங்கள் பாடுவதை நான் தடுக்கவில்லை. நீங்கள் வருமானம் ஈட்டாமல் பாடினால் அதற்கு நான் பணம் கேட்கமாட்டேன். ஆனால், என்னுடைய பாடல்களின் வழியாக நீங்கள் சம்பாதிக்கும்போது அதிலிருந்து ஒரு பங்கை நான் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?” என்று அந்த வீடியோவில் கேட்டார் ராஜா. படைப்பாளியாக ராஜா கேட்பதில் இருக்கும் நியாயம் புரிந்துகொள்ளப்படும் அதேநேரம், ராயல்டியைப் பெறுவதற்கான போதிய வழிமுறைகள் இங்கு இல்லாமல் இருப்பதும் அந்த விவகாரத்தை இன்னும் சிக்கலாக்கி வருகிறது.

டாப் 10 பாடல்கள்

1. ‘96’ ஆல்பம் – கோவிந்த வசந்தா

2. மழைக் குருவி - ’செக்கச் சிவந்த வானம்’ - ஏ.ஆர்.ரஹ்மான்

3. ஹை ஆன் லவ் - ’பியார் பிரேமா காதல்’ - யுவன் சங்கர் ராஜா

4. அடி கருப்பி என் கருப்பி – ’பரியேறும் பெருமாள்’ – சந்தோஷ் நாராயணன்

5. என்னடி மாயாவி – ’வடசென்னை’ – சந்தோஷ் நாராயணன்

6. கண்ணம்மா – ’காலா’ – சந்தோஷ் நாராயணன்

7. சர்வம் தாளமயம்- ’சர்வம் தாளமயம்’ - ஏ.ஆர்.ரஹ்மான்

8. குறும்பா – ‘டிக் டிக் டிக்’ - டி.இமான்

9. சின்ன மச்சான் – ’சார்லி சாப்ளின் 2’ - அம்ரீஷ்

10. கல்யாண வயசு – கோலமாவு கோகிலா - அனிருத்

இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கா விட்டாலும் ‘கனா’ படத்தின் ’வாயாடி பெத்த புள்ள’, ‘மாரி 2’ -ன் 'ரவுடி பேபி’, இந்த இரு படங்களுக்கு முன் வெளியான ’சர்கார்’ படத்தில் இடம்பெற்ற ‘சிம்டாங்காரன்’, 'இமைக்கா நொடிகளில்’ ‘நீயும் நானும்’, ‘தானா சேர்ந்த கூட்டத்தில்’ ‘சொடக்குமேல ’, ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘ குலேபகாவலி’ படத்தில் இடம்பிடித்த ‘குலேபா’ ஆகிய பாடல்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x