Published : 03 Dec 2018 11:25 AM
Last Updated : 03 Dec 2018 11:25 AM

ராயல் என்ஃபீல்டின் 650சிசி ‘இரட்டை பறவைகள்’

2018-ம் ஆண்டு பைக் பிரியர்களூக்கு நல்ல வேட்டைதான். ஒரு பக்கம் ஜாவாவின் புதிய வருகை. இன்னொரு பக்கம் ராயல் என்ஃபீல்டின் 650 சிசி பைக்குகளின் அறிமுகம். ராயல் என்ஃபீல்ட் சமீபத்தில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு பைக்குகளை அறிமுகப்படுத்தியது.

650சிசி திறன் கொண்ட, பேரலல் ட்வின் பைக்குகளில் உலகிலேயே விலை குறைவானவை இவைதான் என்று சொல்லலாம். இரண்டு பைக்குகளுமே உயரம் குறைவாக உள்ளவர்களுக்கும் பொருத்தமான பைக்.

இன்டர்செப்டார் 650 ரெட்ரோ பைக் வகை. கிளாசிக் பைக் மாடலை மேம்படுத்தி பேரலல் ட்வின் மாடலாக உருவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். சிம்பிள் டிசைன். எனவே அதற்கு ஏற்ப சாதாரண சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார் தான். இது கிளாசிக் பைக் போல தட்டையாகவும் இல்லை, தண்டர்பேர்டு போல க்ரூஸர் டைப்பிலும் இல்லை. ஹெட்லைட், ஓடோமீட்டர் போன்றவை தண்டர்பேர்டு அமைப்பிலும், இருக்கை, பெட்ரோல் டேங்க் போன்றவை கிளாசிக் பைக் அமைப்பிலும் உள்ளது.

இதன் குவில்டட் சிங்கிள் சீட் பைக்கின் டிசைனுக்குப் பொருத்தமாக இருக்கிறது. 13.7 லிட்டர் பெட்ரோல் டேங்க், லிட்டருக்கு 25.5 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்பதால் போதுமானதாகவே இருக்கிறது. இதில் ஓட்டுபவருக்கான ஃபுட் ரெஸ்ட் சற்று பின்பக்கம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், அமர்ந்து ஓட்டுவதற்கு ஸ்போர்ட்டியான அனுபவத்தைத் தருவதாக இருக்கிறது.

41 மிமீ டெலஸ்கோப் ஃபோர்க் அப்சார்பர் முன்பக்கமும், ட்வின் கேஸ் சார்ஜிடு ஷாக் அப்சார்பர்கள் பின்பக்கமும் உள்ளன. இதன் ஏபிஎஸ், பைப்ரி டிஸ்க் பிரேக்குகளும், 18 அங்குல அலாய் ரிம் கொண்ட பிரெல்லி டயர்களும் பாதுகாப்பான ரைடுக்கு உத்தரவாதம் கொடுக்கின்றன. இன்டர்செப்டார் 202 கிலோ எடை கொண்டது. இந்த இன்டர்செப்டார் 650 சொகுசான லாங் ரைடுக்கு ஏற்றதாக உள்ளது.  

royal-2jpg

கான்டினென்டல் ஜிடி 650 மாடல் பைக், 1950, 60களில் பிரபலமாக இருந்த கஃபே ரேஸர் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டிசைனும், கலர் ஆப்ஷன்களும் கெத்து காட்டுகிறது. இதில் 2 பீஸ் ஹேண்டில்பார் உள்ளது. பெட்ரோல் டேங்க் 12.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த பைக் கையாள்வதற்கும், ஓட்டுவதற்கும், வேகமாக செல்லும்போது வளைவுகளில் பாதுகாப்பாக திரும்புவதற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்க்க கான்டினென்டல் ஜிடி 250 போலவே இருந்தாலும், இதன் பெர்பாமென்ஸ் வேற லெவல்.

இன்ஜினைப் பொருத்தவரை 648சிசி திறன், பேரலல் ட்வின் இன்ஜினுடன் வெளிவரும் முதல் ராயல் என்ஃபீல்டின் பைக் இதுதான். இந்த இன்ஜின் 47பிஹெச்பி பவர் மற்றும் 52என்எம் டார்க்கை வெளிப்படுத்துகிறது.

இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்லிப்பர் க்ளட்சும் வருகிறது. இதன் அதிகபட்ச வேகம் 160 கிலோ மீட்டராக இருப்பதால் த்ரில் ரைடுக்கு உத்தரவாதம் தருகிறது. மேலும் 2500 ஆர்பிஎம் அளவிலேயே 80 சதவீத டார்க்கை வழங்குவதால், அதிக வேகத்தில் செல்லும்போது இன்ஜின் சிரமப்பட வேண்டிய தேவை ஏற்படவில்லை.

இந்த பைக்குகளுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 40 ஆயிரம் கிமீ வரை வாரன்ட்டி தருகிறார்கள். மேலும் 3 ஆண்டுகளுக்கு ரோடு சைடு அசிஸ்டும் தருகிறார்கள். முதல் சர்வீஸ் 500 கிமீட்டரில் செய்த பிறகு, 10 ஆயிரம் கிமீட்டர்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்தால் போதுமானது என்று கூறியுள்ளது. அவ்வப்போது ஆயில் லெவலை மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விலையைப் பொறுத்தவரை, 650 சிசி திறன் கொண்ட ட்வின் இன்ஜின் கொண்ட பைக்காக இருந்தாலும் அட்டகாசமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்டர்செப்டார் ஆரம்ப விலை ரூ. 2.89 லட்சத்துக்கும், கான்டினென்டல் ஜிடி ஆரம்ப ரூ. 3.05 லட்சத்துக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இவற்றின் டாப் வேரியன்ட்கள் முறையே ரூ. 3.11 லட்சத்துக்கும், ரூ. 3.27 லட்சத்துக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இன்டர்செப்டார் 650 எட்டு நிறங்களிலும், கான்டினென்டல் ஜிடி 650 ஆறு நிறங்களிலும் கிடைக்கிறது. கஃபே ரேஸர் வகை பைக்குகள் பார்ப்பது அரிதாகவே இருக்கும். ஆனால், தற்போது ராயல் என்ஃபீல்டின் கான்டினென்டல் ஜிடி 650 வாங்கக் கூடிய விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் அடிக்கடி சாலைகளில் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x