Published : 05 Dec 2018 11:36 AM
Last Updated : 05 Dec 2018 11:36 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்?

பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன், டிங்கு?       

- கு. லிபிவர்ஷ்னி, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம், திருச்சி.

1939-ம் ஆண்டு வட அமெரிக்காவில் பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தனர். மற்ற நிறங்களைக் காட்டிலும் மஞ்சள் சட்டென்று கண்களுக்குப் புலப்படும்.

சிவப்பு நிறத்தைவிட மஞ்சள் நிறம் 1.24 மடங்கு வேகமாகக் கண்களுக்குப் புலப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் Dr. Frank w. Cyr நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மஞ்சள் நிறத்தில் கறுப்பு வண்ண எழுத்துகள் இருள் விலகாத அதிகாலை நேரத்திலும் பளிச்சென்று கண்களுக்குத் தெரியும். இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும் என்றார். பல்வேறு நிபுணர்களும் இதுகுறித்து விவாதித்தனர். பிறகு பள்ளி, கல்லூரிப் பேருந்துகளை மஞ்சள் நிறத்தில் மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்துக்கு மாறின. பிறகு கனடாவிலும் மஞ்சள் பேருந்துகள் கொண்டுவரப்பட்டன. காலப்போக்கில் பிற நாடுகளிலும் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள் மஞ்சள் வண்ணத்துக்கு மாறிவிட்டன. இதனால் டாக்டர் ஃப்ராங்க், ‘மஞ்சள் பேருந்துகளின் தந்தை’ என்று போற்றப்படுகிறார், லிபிவர்ஷ்னி.

ஆலமரம் பூக்குமா, டிங்கு?

– எஸ். விகாஷ், 5-ம் வகுப்பு, வித்யாசாகர் குளோபல் பள்ளி, செங்கல்பட்டு.

ஆலமரத்தின் பூக்கள் மற்ற தாவரங்களைப்போல் வெளிப்படையாகப் பூப்பதில்லை, விகாஷ். பழத்துக்குள்ளேயே பூவும் இருக்கிறது. ஓர் ஆலம் பழத்தை எடுத்து நறுக்கிப் பார்த்தால் உள்ளே பூ இருப்பது தெரியும். இதை Neutral flowers என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

ஆவியை நீ பார்த்திருக்கிறாயா? உன்னை ஆவி அடித்திருக்கிறதா, டிங்கு?

– எஸ். பிரேம் குமார், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கடலூர்.

ஓ… தினம் தினம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், பிரேம் குமார். இட்லி பாத்திரத்தைத் திறக்கும்போதும் குக்கரிலிருந்து வெளியேறும்போதும் ஆவியைப் பார்க்காமல் இருக்க முடியுமா, என்ன? ஆரம்பத்தில் மூடியைச் சரியாகத் திறக்கத் தெரியாமல், கையில் ஆவி அடித்தும் இருக்கிறது. கொஞ்ச நேரம் கை எரியும், பிறகு சரியாகிவிடும். இப்போதெல்லாம் ஆவியை பக்குவமாகச் சமாளித்துவிடுவதால், ஆவியடிப்பதில்லை.

ராக்கெட் ஏன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படுகிறது, டிங்கு?

– கி.செ. சாருமதி, 6-ம் வகுப்பு, வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி, கிருஷ்ணகிரி.

ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவு ஸ்ரீஹரிகோட்டா. பொதுவாக ராக்கெட்கள் கிழக்கு நோக்கிதான் ஏவப்படுகின்றன. ஸ்ரீஹரிகோட்டா பூமத்தியரேகைக்கு அருகில் இருக்கிறது. இங்கிருந்து ராக்கெட் அனுப்புவதற்கான திசைக்கோணமும் பூமியின் சுழற்சியும் சாதகமாக இருப்பதால், அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்துக்கு அடுத்ததாக ஸ்ரீஹரிகோட்டா கருதப்படுகிறது. அதனால் இங்கிருந்து ராக்கெட் ஏவப்படுகிறது, சாருமதி.

என்னைக் கண்டாலே குட்டி நாயிலிருந்து பெரிய நாய்வரை துரத்துகின்றன, ஏன் டிங்கு?

– சி. அஜய், சென்னை.

நாய்களுக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்திருந்தால் இப்படித் துரத்தும் வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால், நீங்கள் நாய்களைக் கண்டு பயந்து ஓடினாலும், அவை என்னவோ ஏதோவென்று துரத்துவதற்கான சாத்தியம் இருக்கிறது. முதலில் உங்கள் பயத்தைக் கைவிடுங்கள். நாய்களைக் கவனிக்காத மாதிரி இயல்பாக நடந்து சென்று பாருங்கள். அவையும் உங்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும். உங்களால் நாய்களுக்கு ஏதும் துன்பம் வராது என்ற நம்பிக்கையை விதைத்துவிட்டால், அவை உங்களை நண்பனாகப் பார்த்துவிடும். முயன்று பாருங்கள், அஜய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x